பல ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்டு வந்த விவாதங்களின் பின்னர் வரையறுக்கப்பட்ட கருக்கலைப்பை சட்டரீதியாக்குவது என்று இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
சிறுவர் அபிவிருத்தி மற்றும் பெண்கள் விவகார அமைச்சின் தரப்புகளை கோடிட்டு கொழும்பின் ஊடகம் ஒன்று இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.
இந்தநிலையில் வரையறுக்கப்பட்ட கருக்கலைப்பை சட்டரீதியாக்குவது தொடர்பான பொறிமுறையை உருவாக்குவது தொடர்பில் கலந்தாய்வுக்குழு தற்போது நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக அமைச்சு தரப்புக்கள் தெரிவித்துள்ளன.
பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட மற்றும் அதற்கு ஒப்பான செயல்களால் கரு உண்டாகும் போது அதனை கலைப்பதற்கான பரிந்துரையை கலந்தாய்வுக்குழு முன்கொணர்ந்துள்ளது.
இலங்கையை பொறுத்தவரை கருக்கலைப்பு சட்டரீதியற்ற செயலாகும். எனினும் பல நிலையங்கள் கருக்கலைப்புக்களை உரிய நியமங்கள் இன்றி மேற்கொள்கின்றன.
ஐக்கிய நாடுகளின் பிரசுரங்களின்படி கருக்கலைப்பானது, 97 வீத நாடுகளில் பெண்களின் உயிர்களை காப்பாற்றும் நோக்கத்திலேயே செய்யப்படுகின்றன.
இந்தநிலையில், கருக்கலைப்பானது 49 வீத நாடுகளில் பொருளாதார மற்றும் சமூக காரணங்களுக்காக ஏற்றுக்கொள்ளப்படுகின்றன.
34 வீதம் மாத்திரமே பெண்களின் கோரிக்கைகளுக்கு ஏற்ப மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது