வடக்கு மாகாணக் கல்வித் திணைக்களத்தினால் ஜீ.சி.ஈ. சாதரண தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கு இன்று நடைபெறவிருந்த கணித பாட வினாத்தாள் முற்கூட்டியே வெளியாகியுள்ளது என்று தெரிய வந்துள்ளது. வடக்கு மாகாணக் கல்வித் திணைக்களத்தினால் மாகாணத்தின் அனைத்துப் பாடசாலைகளிலும் கடந்த 21 ஆம் திகதி நடத்தத் தீர்மானிக்கப்பட்டிருந்த கணித பாடப் பரீட்சை சில வலயங்களில் நடைபெற்ற தமிழத் தினப் போட்டி காரணமாகப் பிற்போடப்பட்டு, இன்று நடைபெறுகிறது. எனினும் வவுனியா வடக்கு வலயத்தின் ஓமந்தை மத்திய கல்லூரி உள்ளிட்ட சில பாடசாலைகளில் கடந்த 21 ஆம் திகதியே இந்தப் பரீட்சை நடைபெற்றுள்ளது. அத்துடன் தனியார் கல்வி நிலையங்கள் ஊடாகவும் பரீட்சை வினாத்தாள் விநியோகிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பில் ஓமந்தை மத்திய கல்லூரி அதிபரைத் தொடர்பு கொண்டு கேட்டபோது:- கடந்த 21 ஆம் திகதி இப்பரீட்சையை நடத்துமாறு மாகாணக் கல்வித் திணைக்களத்தினால், வலயம் ஊடாக சகல பாடசாலைகளுக்கும் அறிவிக்கப்பட்டிருந்தது. அந்தப் பரீட்சையைப் பிற்போடுமாறு அறிவிக்கப்பட்ட தகவல் உரிய காலப்பகுதிக்குள் எமக்குக் கிடைக்கவில்லை. இதனால் அன்றைய தினமே பரீட்சை நடத்தப்பட்டது - என்றார்