7/09/2014

| |

வாவியோரங்களில் கண்டல் தாவரங்களை நட நடவடிக்கை

மட்டக்களப்பு வாவியோரங்களில் கண்டல் தாவரங்களை நடுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இலங்கையின் இரண்டாவது மிகப்பெரிய வாவியான மட்டக்களப்பு வாவியை அழகுபடுத்தவும் பாதுகாக்கவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின்கீழ் செயற்படும் கரையோரம் பேணல் திணைக்களம் இத்திட்டத்தினை முன்னெடுத்து வருகின்றது. இதன் ஓர் கட்டமாகவே, மட்டக்களப்பு வாவியோரங்களில் கண்டல் தாவரங்களை நடுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதுதொடர்பாக ஆராயும் உயர்மட்ட கூட்டம் செவ்வாய்க்கிழமை (08) மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தலைமையில் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
கிழக்கு பல்கலைகழகம், வனப் பாதுகாப்பு திணைக்களம், கடற்றொழில் நீரியல்வள திணக்களம், விவசாய திணைக்களம் என்பவற்றுடன் இணைந்து மாவட்ட கரையோரம் பேணல் திணைக்களம் இதனை முன்னெடுக்கவுள்ளது.
மட்டக்களப்பு வாவியோரங்களில் நடப்பட்டிருந்த கண்டல் தாவரங்கள் அழிந்து வருவதால் இவ்வாவியில் காணப்பட்ட பெருமளவிலான மீன்கள் அழிவடைந்;துள்ளதாக கடற்றொழில் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இக்கூட்டத்தில் வாவி முகாமைத்துவம், கரையோர வலயத்தில் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படச்செய்தல், சூழல்பாதுகாப்பு தொடர்பாகவும் ஆராயப்பட்டன.
மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் கே.கிரிதரன், கிழக்கு பல்கலைகழக பீடாதிபதி கலாநிதி எஸ்.ஜெயசிங்கம், மாவட்ட வனப் பாதுகாப்பு திணைக்கள பணிப்பாளர் எம்.ஏ.நபீஸ், மாவட்ட மத்திய சூழல் அதிகாரசபை பணிப்பாளர் எம்.கோகுலன் உட்பட பிரதேச செயலாளர்கள், திணைக்கள தலைவர்கள், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் இரா.நெடுஞ்செழின் உட்பட பலர் கலந்து கொண்டனர்.