7/03/2014

| |

மதுவைக் குறைத்து மட்டக்களப்பை காப்பாற்றுங்கள்

fgfgh.jpg

தற்போது அதிகரித்து வரும் மதுபானசாலைகளை குறைத்து மட்டக்களப்பு மாநகரை காப்போம் என்ற தொனிப்பொருளின் அடிப்படையில் மண்முனை வடக்கு மகளிர் அமைப்புகளின் சம்மேளத்தின் தலைவி திருமதி செல்வி மனோகரி தலைமையில் இன்று காலை 9.30 மணிஅளவில் பேரணி நடாத்தப்பட்டது. இப்பேரணி காந்தி பூங்காவில் ஆரம்பிக்கப்பட்டு மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தை சென்றடைந்து அங்கு அரச அதிபர் திருமதி.பி.எஸ்.எம்.சாள்ஸ் அவர்களிடம் மதுபான சாலைகளை அகற்றுவது தொடர்பாக மகஜர் கையளிக்கப்பட்டது. இப் பேரணியில் மண்முனை வடக்கில் உள்ள 46 மாதர் கிராம அபிவிருத்தி சங்கங்களைச் சேர்ந்த சுமார் 500 பெண்கள் கலந்துகொண்டதுடன் மது ஒழிப்பு சம்பந்தமான கோசங்களுடன், பதாதைகளை ஏந்திய வண்ணமும் ஊர்வலமாக சென்றனர்.
அங்கு கொடுக்கப்பட்ட மனு
அதிமேதகு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச,
இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசு,
இலங்கை.
திருமதி.பி.எஸ்.எம்.சாள்ஸ்
அரசாங்க அதிபர்,
கச்சேரி,
மட்டக்களப்பு ஊடாக,
மட்டக்களப்பில் அதிகரித்து வரும் மதுபான விற்பனை நிலையங்கள்.
அண்மைக்காலமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் மிக அதிக அளவிலான மதுபான விற்பனை நிலையங்கள் அதிகரித்து வருகின்றது. 586400 சனத்தொகையை கொண்ட மட்டக்களப்பு மாவட்டத்தில் இனரீதியாக 422732 தமிழர்களும், 155406 முஸ்லிம்களும் ஏனைய இனத்தினர் 8262 பேரும் வாழ்கின்ற நிலையில் 2008ஃ04.10ந் திகதிய அதிவிசேட வர்த்தமானி இல1544/17ன் அட்டவணை ஐஐஐ இன் 11வது பந்தியின் கீழ் கிழக்கு மாகாகணத்திற்கு அங்கீகரிக்கப்பட்ட மதுபானசாலைகளின் உச்ச எண்ணிக்கையையும், தற்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டுள்ள மது விற்பனை நிலையங்களின் எண்ணிக்கையையும் கீழ் உள்ள அட்டவணை மூலம் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.
01 சில்லறை மது விற்பனை நிலையம் 34
02 மது விற்பனையுடன் கூடிய ஹொட்டல் 07
03 மது விற்பனையுடன் கூடிய உணவகம் 19
மொத்தம் 60
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள சனத்தொகையின் அடிப்படையில் முஸ்லிம் அல்லாத தமிழ் மற்றும் ஏனைய இனத்தைச் சார்ந்த 18 வயதிற்கு மேற்பட்ட ஆண்களின் எண்ணிக்கை அண்ணளவாக 134972 ஆகும். இத் தொகையினருக்காகவே 60 மது விற்பனை நிலையங்கள் செயற்படுவதை அறிய முடிகின்றது. அதாவது 2699 பேருக்கு ஒரு மதுபான விற்பனை நிலையம் என்ற விகிதாசார அடிப்படையில் இருப்பதோடு, மூன்று மாவட்டங்களை உள்ளடக்கிய கிழக்கு மாகாணத்திற்குரிய மொத்த எண்ணிக்கையின் அரைவாசிக்கு மேல் மட்டக்களப்பு மாவட்டத்தில் இருப்பதை அறியமுடிகின்றது.
ஒரு மாவட்டத்தில் மது விற்பனை நிலையங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படுவதால் சுகாதார, பொருளாதார, சமுகப்பிரச்சினைகள் அதிகரிப்பதோடு, அது அம்மாவட்டத்தின் எதிர்கால அபிவிருத்தியையும் வெகுவாகப் பாதிக்கின்றது.
1. ஆகவே இது தொடர்பாக ஒரு தீர்கமான முடிவை எடுப்பதற்கும் அண்மைக்காலத்தில் வழங்கப்பட்ட மதுபான விற்பனை நிலையங்களுக்கான அனுமதிப்பத்திரத்தை இரத்துச் செய்வதற்கும், எதிர்காலத்தில் எவ்வித அனுமதிப்பத்திரத்தையும் வழங்காமல் இருப்பதற்கும் வலுவான தீர்மானத்தை மேற்கொள்வீர்களென எதிர்பார்க்கின்றோம். அத்தோடு இதனடிப்படையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் மாதம் ஒன்றிற்கு சுமார் 402950000ரூபா மதுவுக்காக செலவு செய்யப்படுகின்றது. இதன் விபரங்கள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. (வெளிநாட்டு மதுபான வகைகளின் விற்பனைப் பெறுமதி கிடைக்கப் பெறவில்லை)
2. பாடசாலை, மதஸ்தலங்கள், பொது இடங்கள் , பிரதான வீதிகளுக்கு அருகாமையில் மக்கள் நெருசலாக வாழும் இடங்களில் உள்ள மதுபானசாலைகளை அகற்றி வேறு இடங்களுக்கு (மக்கள் நடமாட்டம் குறைந்த பகுதிகளில்) மாற்றுதல்.
3. இலங்கையில் தயார் செய்யப்படும் அதிக செறிவு கூடிய முறையற்ற விலைப்பட்டியல்களுடன் உடலுக்கு மிக அதிக தீங்கு விழைவிக்கும் மதுபான வகைகளின் விற்பனையினை மட்டக்களப்பு மாவட்டத்தில் தடை செய்தல்.
மேற்குறிப்பிட்ட விபரங்களை நடைமுறைப்படுத்தி மட்டக்களப்பு மக்களின் வறுமையினைப் போக்கவும், சமுக சீர்கேடுகளைத் தடுக்கவும் வழி செய்யுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.