7/15/2014

| |

கனடா தமிழ் இலக்கியத் தோட்டத்திற்கு இலங்கைத் தலித் சமூக மேம்பாட்டு முன்னணி தனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றது.

கனடா தமிழ் இலக்கியத் தோட்டமானது டொமினிக் ஜீவா அவர்களுக்கு இயல் விருதை வழங்க இருக்கின்றது. அதை மனதோடு ஏற்றுக்கொள்ள முன்வந்த டொமினிக் ஜீவா அவர்களை இலங்கைத் தலித் சமூக மேம்பாட்டு முன்னணி வாழ்த்துகின்றது.
யாழ் பல்கலைக்கழகமானது தீர்மானிக்கப்பட்ட பட்டத்தை தனக்கு வழங்காமல் எம்.ஏ என்ற பட்டத்ததை வழங்க முன்வந்தபோது அதை தனக்கும் தலித் சமூகத்திற்குமான இழிவுச் செயலாக இனம் கண்ட டொமினிக்  ஜீவா அவர்கள் யாழ் பல்கலைக்கழத்தின் கௌரவிப்பை ஏற்கமறுத்தார்.
கனடா தமிழ் இலக்கியத் தோட்டமானது தமிழ் இலக்கியத்திற்கான தங்களது கௌரவிப்புப் பணிகளுக்காக இந்திய தமிழ் நாட்டுப் படைப்பாளிகளிலிருந்தே தகுதிகளை தேடத்தொடங்கினார்கள். இலங்கையில் தமிழ் இலக்கியத்திற்கான தகுதியுடையவர்கள் இரண்டாம் தரத்தினராகவே அவர்களின் மதிப்பீடாக இருந்து வருகின்றது. இவ்வாறான தமிழ்நாட்டு அங்கீகார மோகம் என்பது கனடா இலக்கியத் தோட்டத்திற்கு மட்டுமே சொந்தமானதல்ல. இலங்கைப்படைப்பாளிகளில் கணிசமானவர்களின் மனப்போக்குகளும் தமிழ் நாட்டு அங்கீகாரத்தை மையமாகக் கொண்டே நிகழ்ந்து வருகின்றது. இருந்தபோதும் எஸ்.பொ.அவர்களையும்,டொமினிக்  ஜீவா அவர்களையும் காலம் தாழ்த்தி அவர்கள் வழங்கிய கௌரவிப்பை கனடா இலக்கியத் தோட்டத்தின் ஒரு அலட்சியப்படுத்தலாக நாம் கருதவில்லை. அவர்களது தமிழ் இலக்கியப் பார்வையின் ஒரு பலவீனமாகவே இலங்கைத் தலித் சமூக மேம்பாட்டு முன்னணி கருதுகின்றது. கனடா இலக்கியத் தோட்டம்  எஸ்.பொ. என்ற இலக்கிய ஆழுமையை கண்டடைய பட்டசிரமத்தின் ஊடாகவே அவர்களது இலக்கியப் பலவீனத்தை எம்மால் உணரமுடிந்தது.
மனித இனமானது விமர்சனங்களோடும், முரண்பாடுகளோடும், எதிர்மறைகளோடும், நேர்மறைகளோடும் வாழ்வதோடு அவைகளைத் தாண்டிச் செல்வதற்கான உத்திகளையும் மேற்கொள்ளவேண்டியது அவசியம். எனவே டொமினிக் ஜீவா அவர்களின் படைப்பிலக்கிய ஆளுமைக்காக அவரது 88 வயதில் இயல்விருது வழங்கி கௌரவிக்கும் கனடா தமிழ் இலக்கியத் தோட்டத்திற்கு இலங்கைத் தலித் சமூக மேம்பாட்டு முன்னணி தனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றது.