7/01/2014

| |

கல்முனையில் தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்தக் கோருவது எமது அடிப்படை உரிமையாகும்.

கல்முனையில் தமிழ் பிரதேச செயலகம் தரமுயர்த்தப்படுவதால் முஸ்லிம்களுக்கு எந்தவொரு ஆபத்தும் ஏற்படப்போவதில்லை. இது தொடர்பில் முஸ்லிம்கள் அச்சமடையத் தேவையில்லை என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளரும் ஜனாதிபதியின் இணைப்பாளருமான அருண் தம்பிமுத்து தெரிவித்தார்.
மட்டக்களப்பிலுள்ள அவரது அலுவலகத்தில் சனிக்கிழமை (28) நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
'கல்முனையில் தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்தக் கோருவது எமது அடிப்படை உரிமையாகும். தமிழ் பிரதேச செயலகம் தரமுயர்த்தப்படுவதால், முஸ்லிம்களுக்கு எந்தவொரு ஆபத்தும் ஏற்படப்போவதில்லை. இது தொடர்பில் முஸ்லிம்கள் அச்சமடையத் தேவையில்லை. இந்த விவகாரம் தொடர்பாக நானும் நடவடிக்கை எடுத்தேன்.
கிழக்கு மாகாணத்தில் ஒரு தமிழ் அமைச்சர் இருந்திருந்தால், கல்முனையில் தமிழ் பிரதேச செயலகம் தரமுயர்த்தப்படும் நடவடிக்கைக்கு அழுத்தம் கொடுத்து அதை முன்னெடுத்து அந்தப் பிரச்சினையை தீர்த்து வைத்திருக்கலாம். இன்று இரண்டு தமிழ் அமைச்சர்கள் இருக்கின்றார்கள். அதில் அமைச்சர் தொண்டமான் மலையகத்தை பிரதிநிதித்துவப்படுத்தியும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வடமாகாணத்தை பிரதிநித்துவப்படுத்தும் வகையிலும் இருக்கின்றனர்.
அந்த வகையில், கிழக்கு மாகாணத்துக்கான ஒரு தமிழ் அமைச்சரில்லை. கிழக்கு மாகாணத்திலுள்ள தமிழ் மக்களின் தேவைகளை அமைச்சரவைக்கு கொண்டுசென்று நிறைவேற்றிக்கொள்வதற்கு தமிழ் அமைச்சர் ஒருவர் கிழக்கு மாகாணத்திலில்லை.
எமது நாட்டில் அரசியல் மாற்றம் வரவேண்டுமாக இருந்தால், அனைத்து சமூகங்களையும் இணைத்துத்தான் அதை பெறமுடியும். ஒரு சமூகத்தை விட்டு, தவிர்த்து எந்தவொரு மாற்றத்தையும் பெற்றுக்கொள்ளமுடியாது.
தேசிய அரசியல் கட்சிகளில் தமிழர்களின் பிரதிநிதித்துவம் இருக்க வேண்டும். அப்போதுதான் தமிழர்களின் குரல்களும் தேசிய ரீதியில் எழுப்பப்படும்.
30 வருடங்களின் பின்னர் தமிழ் மக்கள் ஒரு திசை தெரியாத நிலையிலேயே இருக்கின்றார்கள். இந்நிலைமையினை அரசியலில் இருப்பவர்கள் நன்கு புரிந்துகொண்டு தமிழ் மக்களுக்கு வழிகாட்டும் விதத்தில் செயற்படவேண்டும்.
தற்போது எமது கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பல மாற்றங்களை உருவாக்கியுள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் தமிழ் உறுப்பினர்கள் இணைக்கப்பட்டு தமிழ்மொழியில் கருமம் ஆற்றக்கூடிய செயற்பாடுகளும் அதிகரித்துள்ளன.
ஆளும் கட்சியிலுள்ள அரசியல்வாதிகள் அரசியல் சலுகைகளுக்காக அரசியலுக்கு வந்தவர்கள் என பலர் மத்தியில் அபிப்பிராயக் கருத்துக்கள் உண்டு. இந்த அபிப்பிராயம் மாற்றப்படல் வேண்டும். அரசியலுக்காக அரசியல் கட்சிகளில் சேரவேண்டும்.
இதுவரை காலமும் நான் கட்சியில் இருந்து ஒரு ரூபா கூட சம்பாதித்ததில்லை. எனது அரசியல் நடவடிக்கை எனது சொத்துக்களின் மூலமாகவே இடம் பெற்றுவருகின்றது.
எமது நாட்டில் இடம்பெற்ற சரி, பிழைகளை ஆராயும் வல்லமை சர்வதேசத்திற்கில்லை. கடந்த 30 வருடங்களாக எமது நாட்டில் இடம்பெற்றதையெல்லாம் வேடிக்கை பார்த்த சர்வதேசம் இன்று மட்டும் வந்து என்ன செய்யப்போகின்றது.
தமிழ்த் தேசியம் பற்றி எனக்கு உடன்பாடான கருத்துக்களும் இருக்கின்றன. முரண்பாடான கருத்துக்களும் இருக்கின்றன.
நான் மற்றவரை ஏளனம் செய்வதற்கோ விமர்சிப்பதற்கோ அரசியலுக்கு வரவில்லை.
ஜனநாயக மரபுகள் எங்கள் மத்தியில் இல்லாது போனததால்தான் தமிழர்களின் நிலைமை இன்று இவ்வாறு இருக்கின்றது. எமது மக்கள் வெறுமனே ஆட்டு மந்தைகளாகவே கையாளப்பட்டிருக்கின்றார்கள்.
எமது தமிழ்ச் சமூகம் கடந்தகால யுத்தத்தில் தியாகிகள், துரோகிகள் என்ற பெயர்களில் தமிழ் தலைமைகளையும் தமிழ் புத்திஜீவிகளையும் இழந்திருக்கின்றது.
இலங்கையில் தற்போது 85 சதவீதத்திற்கு மேல் காகிதம் இறக்குமதி செய்யப்படுகின்றது. ஆனால், எமது மட்டக்களப்பு மாவட்டத்தில் இருக்கும் ஒரேயோரு காகித தொழிற்சாலை மூடப்பட்டுள்ளது. அதற்கு அரசின் சலுகைகள் பெறப்படுகின்றபோதிலும், அதனை ஒழுங்கான முறையில் செயற்படுகின்றமை கேள்விக்குறியாகவே உள்ளது. நான் இது தொடர்பில் இதை அபிவிருத்தி செய்வதற்கும் இதை சரியாக செயற்படுத்துவதற்கும் முயற்சிகளை மேற்கொண்டேன்.
தற்போது சர்வதேச விசாரணை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் ஆர்ப்பரிக்கின்றனர். இது தமிழ் மக்கள் மத்தியில் ஒரு பிரிவினையையும் மக்கள் மத்தியில் ஒரு நிம்மதியற்ற நிலைமையினையுமே ஏற்படுத்தும்.
யுத்தம் முடிந்து முன்னாள் போராளிகள் என்ற ரீதியில் அனைத்தையும் மறந்து நிம்மதியாக அமைதியாக வாழ்ந்து கொண்டிருக்கும் எமது உறவுகளை, மீ;ண்டும் கோரமான நிலைக்கு கொண்டு செல்வதற்கான நடவடிக்கையாகவே இது அமைந்திருக்கின்றது.
எமது நாட்டின் சரி, பிழை குறித்து கூறும் அருகதை சர்வதேச சமூகத்திற்கு கிடையாது' என்றார்.