மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனைப் பற்று பிரதேச சபையின் புதிய கட்டிடம் மற்றும் சந்தைக் கட்டிடத் தொகுதி என்பன புதன்கிழமை (25.6.2014) கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் ஜனாதிபதியின் ஆலோசகருமான சிவநேசதுரை சந்திர காந்தனினால் திறந்து வைக்கப்பட்டது.
பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் புறநெகும திட்டத்தின் கீழ் புதிதாக நிர்மானிக்கப்பட்ட மண்முனைப் பற்று பிரதேச சபையின் புதிய கட்டிடம் மற்றும் மண்முனைப் பற்று பிரதேச சபையின் புதிய சந்தைக் கட்டிடத் தொகுதி என்பன திறந்து வைக்கப்பட்டு அதன் நினைவுப் பலகையும் திரை நீக்கம் செய்து வைக்கப்பட்டது.
இந்த வைபவத்தில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ், மற்றும் கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் எம்.வை.சலீம், கிழக்கு மாகாண உள்ளுராட்சி அமைச்சின் பதில் செயலாளர் ஏ.எம்.ராபி, மற்றும் கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினரும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் செயலாளருமான பி.பிரசாந்தன். மற்றும் மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் ஏ.வாசுதேவன் மண்முனைப் பற்று பிரதேச சபையின் செயலாளர் திருமதி ஜே.அருள்பிரகாசம், மட்டக்களப்பு மாவட்ட உள்ளுராட்சி உதவி ஆணையாளார் மண்முனைப் பற்று பிரதேச சபையின் முன்னாள் தலைவர் திருமதி கிறிஸ்டினா சசிகரன் உட்பட அதன் முன்னாள் உறுப்பினர்கள், சபையின் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.
மண்முனைப் பற்று பிரதேச சபையின் புதிய கட்டிடம் 15 மில்லியன் ரூபா செலவிலும், மற்றும் மண்முனைப் பற்று பிரதேச சபையின் புதிய சந்தைக் கட்டிடத் தொகுதி 13.5 மில்லியன் ரூபா செலவிலும் நிர்மானிக்கப்பட்டுள்ளன.
இந்த சபையின் புதிய கட்டிடத்திற்கான அடிக்கல் 15.2.2013 அன்று நாட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.