மிதவாத பௌத்த அமைப்பு என்று கருதப்படும் ஜாதிக பல சேனாவின் பொதுச் செயலாளராக வட்டரக்க விஜித தேரர் செயற்படுகிறார்.
தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் வட்டரக்க விஜித தேர்ரை சந்தித்து திரும்பிய அவரது சட்டத்தரணியான நாமல் ராஜபக்ஷ அவர்கள் இந்தத் தகவலை பிபிசியிடம் கூறியுள்ளார்.
ஒரு மிதவாத பிக்குவாகப் பொதுவாகப் பார்க்கப்படும் விஜித தேரரை, முஸ்லிம்களுக்கு ஆதரவாகச் செயற்படுவதாக கடும்போக்கு பௌத்த பிக்குமார் விமர்சித்து வருகின்றார்கள்.
அளுத்கம பகுதியில் முஸ்லிம்களுக்கு எதிராக கடும்போக்கு பௌத்த அமைப்பின் ஆதரவாளர்களால் தாக்குதல் நடத்தப்பட்ட மறுதினம் வட்டரக்க விஜித தேரரும், தாக்குதலுக்கு உள்ளான நிலையில் தெருவில் கிடக்கக் காணப்பட்டார்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவர், சில பிக்குமாரே தன்னை தாக்கியதாகக் கூறியதாக அவரது சட்டத்தரணி முன்னதாக பிபிசியிடம் கூறியிருந்தார்.
தனது தாக்குதல் தொடர்பில் விஜித தேரர் பொதுபல சேனா அமைப்பையே குற்றஞ்சாட்டுவதாக சட்டத்தரணி கூறியுள்ளார்.