6/22/2014

| |

முஸ்லீம் சகோதரர்கள் மீதான வன்முறையைக் கண்டித்து சமவுரிமை இயக்கத்தின் வெற்றிகரமான இலண்டன் - பாரிஸ் போராட்டங்கள்..

இலங்கையில் முஸ்லீம் சகோதரர்கள் மக்கள் மீது பவுத்த அடிப்படைவாத அமைப்புகளாலும், அரசாலும் திட்டமிட்டு நிகழ்த்தப்பட்ட இனரீதியிலான வன்முறையினை கண்டித்து, லண்டனிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகர் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்றினை சமவுரிமை இயக்கத்தின் பிரித்தானிய கிளை இன்று (20.06.2016) நடாத்தியது. குறுகிய அழைப்புக்காலம் எனினும் நூற்றுக்கு மேற்பட்ட அனைத்து இன மக்களும், பாதிக்கப்பட்ட சகோதரர்களுக்காக, அவர்களின் உரிமையை வலியுறுத்தி உணர்வு பூர்வமாகக் கலந்து கொண்டனர். கடந்த நூறு வருடங்களாக கொடிய இனவாதத்திற்க்காக இரத்தம் வடித்தது போதும். எமது எதிர்கால சந்ததியினர் மனிதர்களாக வாழ ஒன்றிணைந்து எதிர்த்து நிற்போம். இனவாத, மதவாத அரக்கர்களை விரட்டி அடிப்போம் என்ற கோசத்துடன், போராட்டத்தில் பங்கெடுத்த சமவுரிமை இயக்கத்தின் தலைமைத் தோழர்களின் உரைகள் அமைந்தது .
இதேவேளை, பிரான்சின் தலைநகர் பாரிஸில் சம உரிமை இயக்கமும், அதன் சகோதர அமைப்புகளும் இன்று இனவாத - மதவாத வன்முறைகளுக்கு எதிரான பிரச்சார முன்னெடுப்பில் ஈடுபட்டனர். துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டதுடன், இனவாத- மதவாத வன்முறைக்கு எதிராகவும், முஸ்லீம் சகோதரர்களின் உரிமைகளை வலியுறுத்தியும் பிரச்சாரங்களை மேற்கொண்டனர். இது பற்றிக் கருத்துத் தெரிவித்த புதிய ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைமைத் தோழரும், சமவுரிமை இயக்கத்தின் பிரான்ஸ் கிளையின் செயற்பாட்டாளருமான ரஜாகரன் : "எமது தாய் அமைப்பு இலங்கையின் வராலாற்றில் பதியத்தக்க விதமாக பாரிய போராட்டத்தை 18.06.2014 அன்று கொழும்பில் நடத்தியது. அதன் தொடர்ச்சியாக இன்று (20.06..2014) லண்டனிலும், பாரிசிலும் வெற்றிகரமான முறையில் போராட்டங்களை நடத்தி முடித்துள்ளோம். இப்போராட்டங்கள் போல வரப்போகும் நாட்களில் இலங்கையிலும் தொடரவுள்ளது. அதேபோல ஐரோப்பிய நாடுகளில், இலங்கையில் ஒடுக்கப்படும் தேசிய இன மக்களின் உரிமையை வலியுறுத்தி - குறிப்பாக முஸ்லீம் சகோதரர்கள் மீதான திட்டமிட்ட தாக்குதலைக் கண்டித்து போராட்டங்கள் விதம் விதமான முறையில் நடத்தப்படும்" என்றார்.