களுத்துறை மாவட்டத்திலுள்ள பிரதேசங்களில் முஸ்லிம் மதத்திற்கும் முஸ்லிம் இனத்திற்கும் எதிராகமேற்கொள்ளப்பட்ட திட்டமிட்ட கலவரத்தை முன்னின்று நடத்தியது ஒரு பௌத்த இயக்கம். இந்த இயக்கத்தின் பிதாமகனாக விளங்குபவர் ‘சிங்கள இனத்தை பாதுகாப்பதே’எனும் அடிப்படை சித்தாந்தத்தில் ஊறியிருக்கும் ஹலகொட அத்தே ஞானசாரா எனும் பௌத்த பிக்குவாகும். 2009 ம் ஆண்டு யுத்தம் முடிவுற்ற பிற்பாடே முஸ்லிம் இனத்திற்கு எதிரான பௌத்த பிக்குவாதம் மேலோங்கத் தொடங்கிவிட்டது.
அதன் தொடர்ச்சியாகவே ஞானசாரா எனும் பௌத்த பிக்குவின் அமைப்பான பொது பல சேனா எனும் பௌத்த பிக்குவாத இயக்கம் 2013 ல் பேருவல பள்ளிவாசலை தாக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டது. முஸ்லிம் சமூகம் பேணுகின்ற உடை, உணவுக் கலாசாரத்திற்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையாகவே அப்போது இருந்தது. தற்போது (12 யூன் 2014) பௌத்த பிக்குவும் அவரது சாரதியும் தாக்கப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டு களுத்துறை பிரதேசங்களில் வாழும் முஸ்லிம் மக்களின் கடைகள் வீடுகள் உயிர்கள் உடைமைகள் அனைத்தும் பௌத்த பிக்குவாத இயக்கக் கும்பல்களால் நாசமாக்கப்பட்டுள்ளது. 15 ம் திகதி கலவரத்தில் ஈடுபட்ட பௌத்த பிக்குவாத இயக்கமானது அழுத்கம எனும் பிரதேசத்தில் ஹலகொட அத்தே ஞானசாரா தலைமையில் மகிழ்ச்சி ஆரவாரத்தில் சென்று கொண்டிருந்தது. ‘ இந்த தேசத்தில பொலிசும் ஆமியும் எப்போதும் எங்களுக்கானதாகவே இருக்கும். இதுக்குப் பிறகு எந்தவொரு மறக்காலயா ஏனும் (முஸ்லிம் இனத்தை இழிவு படுத்தும் சிங்களச் சொல்லாக இருக்கலாம்) அல்லது வேறெந்த பறையர்களாக இருக்கட்டும் ஒரு சிங்களவனையும் தொட ஏலாது. தொட்டால் முடிவு இப்படித்தான் இருக்கும்.” எனும் அச்சுறுத்தும் வார்த்தைகளை பிரயோகித்தவாறு அக்கும்பல் ஹலகொட அத்தே ஞானசாரா தலைமையில் சென்றதாகவும் அறிய முடிகின்றது. முஸ்லிம் இனத்திற்கு எதிராக திட்டமிட்ட இவ்வாறான சம்பவங்கள் இந்தக் கலவரத்துடன் முடிவடைந்து விடும் என்பதற்கு எந்தவித உத்தரவாதமும் இல்லை. பொலிவியா நாட்டில் இருந்து இச்சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்த ஜனாதிபதி மீதும் இலங்கைவாழ் சிறுபான்மை இனங்களுக்கு நம்பிக்கை ஏற்படுவதற்கு சாத்தியம் இல்லை. கலவரத்தை அடக்குவதற்கான உடனடிக் கணடனங்களுக்கு அப்பால் இப்பிரச்சனையை தீர்ப்பதற்கான மார்க்கம் என்ன. இப்பிரச்சனையை தீர்ப்பதற்கு அரசியல் கட்சிகள் நியாயமாக நடந்து கொள்வார்களா! நடைபெற்றுவரும் முஸ்லிம்கள் மீதான அளுத்கம வன்முறைகள் எமக்கு பெரும் அதிர்ச்சியையும் கவலையையும் அளிக்கின்றன. திட்டமிட்ட வகையில் சிங்கள மேலாதிக்க சக்திகளான பொதுபலசேன அமைப்பினரால் மேற்கொள்ளப்பட்டுவரும் இனவாத பிரச்சாரங்களின் விளைவாகவே மேற்படி வன்முறைகள் அரங்கேறியுள்ளன. இந்த வன்முறைகளுக்கு பலியாக நேர்ந்த இஸ்லாமிய சகோதரர்களுக்கும், அவர்களது உறவினர்களுக்கும் எமது முன்னணி சார்பில் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றோம். அத்தோடு இந்த வன்முறைகளின் சூத்திரதாரிகள் இனங்காணப்பட்டு சட்டத்தின் முன்னிறுத்தப்பட வேண்டுமென கோருகின்றோம். மேலும் நாட்டில் இனவாதத்தை தூபமிட்டுவரும் பொதுபலசேன போன்ற இனவாத, மதவாதத்தை தூண்டும் அமைப்புக்களை தடைசெய்யப்பட வேண்டும். அதுவே இலங்கையின் அமைதிக்கும் இன நல்லுறவுக்கும் வழிசமைக்கும் என்பதை கோடிட்டுக்காட்ட விரும்புகிறோம். அரச அதிகார நலன்களை பாதுகாக்கும் பொருட்டு மேற்படி சம்பவங்களுக்கு பொறுப்புச்சொல்லும் கடமையில் இருந்து அரசாங்கம் தப்பித்துக்கொள்ள முடியாது என்பதையும் வலியுறுத்த விரும்புகிறோம். தொடர்ச்சியாக இடம்பெற்றுவரும் இம்மேலாதிக்க வன்முறைச் சம்பவங்கள் இலங்கையின் சிறுபான்மையினரின் வாழ்வுரிமை குறித்தும் எதிர்கால இருப்புக்குறித்தும் அவநம்பிக்கையை அதிகரிக்கச் செய்கின்றன. சுபிட்சமும் இன ஐக்கியமும் நிறைந்த எதிர்கால இலங்கைக்கு இச்சம்பவங்கள் அச்சுறுத்தலாகவே அமையும் என்பதை அரசாங்கம் கருத்தில் கொள்ளவேண்டியது அவசியமாகும். எனவே இதுகுறித்து அரசு தயவு தாட்சண்யமின்றி உடன் நடவடிக்கை எடுக்கவேண்டும் என தலித் சமூக மேம்பாட்டு முன்னணி கேட்டுக்கொள்கிறது.
இலங்கை தலித்சமூக மேம்பாட்டு முன்னணி பிரான்ஸ்