இந்தியாவின் புதிய பிரதமராக நரேந்திர மோடி நேற்று மாலை சுபவேளையில் பதவியேற்றுக்கொண்டார். சார்க் நாடுகளின் தலைவர்கள் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் பலர் கலந்துகொண்ட பதவியேற்பு நிகழ்வு இந்திய குடியரசுத் தலைவர் மாளிகையான ராஷ்டிரபதி பவனில் நேற்று வெகு விமரிசையாக நடைபெற்றது.
இந்தியக் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி முன்னிலையில் நடைபெற்ற இந்தப் பதவியேற்பு நிகழ்வில், 23 அமைச்சரவை அமைச்சர்களும், தனிப்பொறுப்புடன் கூடிய மத்திய இணை அமைச்சர்கள் 10 பேரும், மத்திய இணை அமைச்சர்கள் 12 பேரும் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.
இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப், ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி ஹமீட் கர்சாய், மாலைதீவு ஜனாதிபதி அப்துல்லா யாமீன் உட்பட சார்க் நாடுகளின் தலைவர்கள் மற்றும் இந்தியாவின் அரசியல் பிரமுகர்கள் பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
நேற்றுமாலை சுபவேளையான 6.10 அளவில் நரேந்திர மோடி, இந்தியக் குடியரசுத் தலைவர் முன்னிலையில் பிரதமராகப் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். அதனைத் தொடர்ந்து அமைச்சர்கள் மற்றும் இணை அமைச்சர்கள் பதவியேற்றுக்கொண்டனர்.
இந்நிகழ்வில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான இலங்கைக்குழு நேற்றுக்காலை புதுடில்லி சென்றடைந்தது. ஜனாதிபதியுடன் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான், வெளிவிவகார அமைச்சின் கண்காணிப்பு எம்.பி சஜின்வாஸ் குணவர்த்தன, யாழ் மாநகரசபை மேயர் யோகேஸ்வரி பற்குணராஜா, ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ரேணுகா செனவிரட்ன ஆகியோரும் புதுடில்லி சென்றடைந்தனர்.
புதுடில்லி விமான நிலையத்தைச் சென்றடைந்த இலங்கைக் குழுவினரை இந்தியாவுக்கான இலங்கை உயர் ஸ்தானிகர் பிரசாத் காரியவசம் விமான நிலையத்தில் வரவேற்றிருந்தார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இன்று பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து இரு நாட்டு உறவுகள் குறித்துப் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.
இந்த நிகழ்வில் முன்னாள் குடியரசுத் தலைவர்களான அப்துல் கலாம், பிரதீபா பட்டீல், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி, உபதலைவர் ராகுல் காந்தி, முன்னாள் அமைச்சர்கள், மாநில முதலமைச்சர்கள், ஆளுநர்கள் வெளிநாட்டுத் தூதுவர்கள் உட்பட பலதரப்பட்ட பிரமுகர்கள் பலர் கலந்துகொண்டனர்.
ராஜ்நாத்சிங், சுஷ்மா ஸ்வராஜ், அருண் ஜேட்லி, வெங்கையா நாயுடு, நிதின் கட்காரி, சதானந்த கவுடா, உமா பாரதி, நஜ்மா ஹெப்துல்லா, கோபிநாத் முண்டே, ராம்விலாஸ் பாஸ்வான், கல்ராஜ் மிஸ்ரா, மேனகா சஞ்சய் காந்தி, அனந்த் குமார், ரவிசங்கர் பிரசாத், கீதே, கஜபதி ராஜூ, நரேந்திர சிங் தோமர், ஹர்மிஸ்ராத் பாதல் கவுர், ஜூவால் ஓரம், ராதா மோகன் சிங், தாவர் சந்த் கெலோட், ஸ்மிருதி இராணி, ஹர்ஷ்வர்த்தன் உள்ளிட்ட 23 பேர் அமைச்சரவை அமைச்சர்களாகப் பதவியேற்றனர்.
ராதாகிருஷ்ணனுக்கு இணை அமைச்சு
தமிழகத்திலிருந்து தெரிவான பா.ஜ.க உறுப்பினரும், தமிழ்நாட்டின் பா.ஜ.க தலைவருமான பொன்.இராதாகிருஷ் ணனுக்கு இணை அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
பிரதமராகப் பதவியேற்றுக்கொள்ள முன்னர் நேற்றுக்காலை மகாத்மா காந்தியின் நினைவுத்தூபி அமைந்திருக்கும் ராஜ்கோட்டுக்குச் சென்ற நரேந்திர மோடி அங்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். நரேந்திர மோடியின் தாயார் காந்திநகர் வீட்டிலிருந்து தொலைக்காட்சி மூலம் தனது மகனின் பதவிப்பிரமாண நிகழ்வைக் கண்டு களித்தார்.
இந்நிகழ்வில் கலந்துகொண்ட உலகத் தலைவர்களுக்கு இந்திய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, குடியரசுத் தலைவர் மாளிகையில் விசேட இராப்போசன விருந்தளித்து கெளரவித்தார்.