கிழக்கு மாகாண சபையின் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னனி உறுப்பினரான துரையப்பா நவரத்தினராஜா தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
இவரது ராஜினாமா கடிதம் கிடைத்துள்ளதை உறுதிப்படுத்தியுள்ள பேரவை செயலாளர், இராஜினாமாவுக்கான காரணங்கள் எதனையும் குறிப்பிடப்பட்டிருக்கவில்லை என தெரிவித்தார்.
முன்னாள் முதலரமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தானின் அமைச்சர்கள் வாரியத்தில் கால்நடை அபிவிருத்தி மற்றும் விவசாய அமைச்சராக பதவி வகித்த இவர், 2012ம் ஆண்டு மாகாண சபை தேர்தலில் தோல்வி அடைந்த நிலையில் போனஸ் ஆசனம் மூலம் மீண்டும் உறுப்பினரானர்.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னனியின் தலைமைப்பீடத்தின் வேண்டுகோளின் பேரிலே இவர் தனது பதவியை இராஜினாமா செய்ததாக கூறப்படுகிறது.
இவரது இராஜினாமா காரணமாக ஏற்பட்டுள்ள வெற்றிடத்திற்கு, கடந்த மாகாண சபைத் தேர்தலில் அம்பாரை மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் போட்டியிட்ட இனியபாரதி என்றழைக்கப்படும் புஷ்பகுமார் நியமிக்கப்படலாம் என அரசியல் வட்டாரங்களில் பரவலாக பேசப்படுகிறது.