இலங்கையின் வடமாகாண முதலமைச்சர் சி வி விக்னேஸ்வரன் மேதின கூட்டத்தில் ஆற்றிய உரையில், தமிழ்த்தேசிய கூட்டமைப்பிற்குள் இருக்கும் கட்சிகள் சுயநலத்துடன் செயற்படுவதாகவும், அதனால், தமிழர்களின் பொது நன்மைகள் பின்னுக்குத்தள்ளப்படுவதாகவும் கவலை வெளியிட்டிருக்கிறார்.
தமிழர்களுக்கு இடையிலான ஒற்றுமையின்மையே அவர்களின் தோல்விக்கு முக்கிய காரணம் என்று தெரிவித்த அவர், உலகு தழுவிய அளவில் தொழிலாளர்களின் இன்றைய உரிமைகளை சாத்தியமாக்கியது தொழிலாளர்களுக்கு இடையிலான ஒற்றுமையே என்றும், அத்தகைய ஒற்றுமையையே தற்போது தமிழர்களும் தமது அரசியல் செயற்பாடுகளில் கடைபிடிக்கவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.
சாவகச்சேரி மேதின நிகழ்வில்வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரனை கூட்டமைப்பு ஆதரவாளர்கள் சுற்றி வளைத்த நிலையில் அவர் அவசர அவசரமாக பொலிஸாரால் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு உள்ளார்.
சாவகச்சேரியில் நடைபெற்ற மேதினக்கூட்டத்தில் பங்கெடுத்து உரையாற்றிய முதலமைச்சர் விக்கினேஸ்வரன் விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் தன்னிட்சையாக செயற்பட்டார் என்று பொருள்பட பேசியதாக விளங்கிக் கொண்ட இளைஞர்கள் சிலர் தேர்தல் காலத்தில் பிரபாகரன் மாவீரன் இப்போது சர்வாதிகாரியா என கேள்வி எழுப்பினர்.அத்தோடு தமிழ் தேசிய கூட்டமைப்பின் குத்துவெட்டுகளை அம்பலபடுத்தி பேசினார்.சாவகச்சேரியில் மேதின ஏற்பாட்டை செய்திருந்த மாகாணசபை உறுப்பினர் மற்றும் சிவாஜிலிங்கம் போன்றவர்களை சுற்றிவளைத்து பலரும் கேள்விகளை எழுப்பியதுடன் விமர்சனங்களையும் முன்வைத்திருந்ததாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.தனது உரையினை முடித்துக்கொண்டு முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் வெளியேற முற்படுகையில் மண்டபத்திற்கு வெளியே அவரை இளைஞர்கள் சிலர் சுற்றி வளைக்க முற்பட்டனர். யதார்த்தத்தினை புரிந்து கொண்ட அவரது பாதுகாப்பு பிரிவு பொலிஸார் அவசர அவசரமாக காரில் ஏற்றி அவரை வெளியேற்றினர்.