மட்டக்களப்பு மாவட்டம் இன்று வறுமையில் முதலாவது மாவட்டமாக உள்ளது. ஏனைய மாவட்டங்களுடன் ஒப்பிடுகின்ற போது அதிகளவான வளங்களைக் கொண்டமைந்த இம் மாவட்டம் வறுமையிலே முதலாவதாக இருக்கின்றது என்றால் இங்கே கூடி இருக்கின்ற நாங்கள் அதாவது மாவட்டத்தின் அபிவிருத்தி பற்றி சிந்திக்கின்ற நாம் அனைவரும் ஒரு கணம் சிந்திக்க வேண்டும் என ஜனாதிபதியின் ஆலோசகர் சிவநேசதுரை சந்திரகாந்தன் இன்று(26.05.2014) கொக்கட்டிச்சோலையில் இடம்பெற்ற மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழுக் கூட்டத்தில் கருத்துக் கூறும் போது தெரிவித்தார்.
தொடர்ந்து வறுமை தொடர்பில் கருத்து தெரிவித்த அவர், உண்மையில் இது தொடர்பில் சற்று நாம் கவனம் செலுத்த வேண்டும். எமது மாவட்டத்திலே சுமார் 79120 குடும்பங்கள் சமுர்த்தி பயனாளிகளாக இருக்கின்றார்கள். இவர்களுக்காக 45.71 மில்லியன் ரூபாய் மாதாந்தம் செலவிடப்படுகிறது. இவர்களிலே குறிப்பாக 61682 பேருக்கு 750ரூபாய் பெறுமதியான வறுமை ஒழிப்பு சமுர்த்தி முத்திரையில் சமூகப்பாதுகாப்பு நிதி மற்றும் கட்டாய சேமிப்பு நீங்கலாக 595 ரூபாய்க்கு மாத்திரம் உணவுப் பொதி வழங்கப்படுகிறது.
உண்மையில் இந்த உணவுப் பொதிகளின் பெறுமதி போதுமானதாக இல்லை. எனவே வறுமை பற்றி பேசுகின்ற நாம் இவ் உணவுப்பொதிகளின் பணப்பெறுமதியினை 1500 ரூபாயாக உயர்த்த வேண்டும். இதுவரை மட்டக்களப்பு மாவட்டத்தில் 1500 சமுர்த்தி முத்திரை வெறுமனே 2 குடும்பங்களுக்கு மாத்திரமே வழங்கப்படுகின்றன. சமுர்த்தி பயனாளிகளாக இருந்து சமூக பாதுகாப்பு முத்திரை பெறுகின்றவர்களின் எண்ணிக்கை குறைக்கப்படாமல் சமுர்த்தி உணவுப் பொதி பெறுகின்றவர்களின் உணவுப் பொதிக்கான பெறுமதி அதிகரிக்கப்பட வேண்டும் என்பதே எனது கருத்து. இவ்வாறு நிகழுமாயின் இதனை அதாவது கிராம மட்டத்தில் உண்மையில் பாடசாலைக்கு செல்கின்ற போது போசாக்கின்மையால் மயங்கி விழுகின்ற மற்றும் கல்வியில் ஈடுபாடிருந்தும் வறுமை தடையாக உள்ள மாணவர்களை உள்ளடக்கிய குடும்பங்களுக்கு அது சென்றடையுமாயின் உண்மையில் வறுமையினை ஓரளவேனும் எமது மாவட்டத்திலே குறைக்க முடியும்.
இதற்கு உடன் அமுலுக்கு வரும் வகையில் மாவட்ட செயலகம் அரசாங்க அதிபர் தலைமையில் ஒரு விசேட குழுவை அமைத்து 3 மதகாலத்திற்குள் இதற்கான தீர்வினை தந்தால் உண்மையில் வறுமை குறையும் என்பது கண்கூடு எனவும் முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தனதுரையிலே குறிப்பிட்டார்.