5/21/2014

| |

தாய்லாந்தில் அரசியல் பதற்றத்திற்கு மத்தியில் இராணுவ சட்டம் பிரகடனம்

தாய்லாந்தில் நீடிக்கும் அரசியல் பதற்றத்திற்கு மத்தியில் அந்நாட்டு இராணுவம் நாட்டின் ~~சட்ட ஒழுங்கை" பாதுகாக்கவென கூறி இராணுவ சட்டத்தை பிரகடனம் செய்துள்ளது. எனினும் இந்த எதிர்பாராத நடவடிக்கை இராணுவ சதிப்புரட்சியல்ல என்று இராணுவம் கூறியுள்ளது.
இந்த அறிவிப்பை அடுத்து, இராணுவம் வன்முறைகள் இன்றி அரசியலமைப்புக்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்று தாய்லாந்து இடைக்காலப் பிரதமர் வலியுறுத்தியுள்ளார். இராணுவ சட்டம் அமுல்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து படையினர்; தலைநகர் பாங்கொக்கின் வீதிகளை முடக்கியதோடு தொலைக்காட்சி மற்றும் வானொலி சேவைகளை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.
தாய்லாந்தில் பல மாதங்களாக அரசுக்கும் எதிர்த்தரப்புகளுக்கும் இடையில் அரசியல் இழுபறி நீடித்து வந்த நிலையிலேயே அங்கு இராணுவ சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.
ஏற்கனவே பலமுறை நாட்டில் இராணுவ சதிப்புரட்சி ஏற்பட்டுள்ள நிலையில் இராணுவத்தின் இந்த முன்னெடுப்பு அரச ஆதரவாளர்களிடம் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 1932 ஆம் ஆண்டில் நாட்டில் முழுமையான மன்னராட்சி முடிவுக்கு வந்த பின் அங்கு இதுவரை குறைந்தது 11 சதிப்புரட்சிகள் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இராணுவ சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டதை அடுத்து படையினர் நேற்று பாங்கொக்கில் இருக்கும் பிரதான அரச கட்டிடத்திற்குள் ஊடுருவினர். ஏற்கனவே அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்களால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த இந்த கட்டிடத்தின் செயற்பாடுகள் முடங்கி இருந்தன. நிர்வாகத்தினர் மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தும் அரச எதிர்ப்பாளர்கள் அரசை வெளியேற்றவே போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதனையடுத்து தேசிய பாதுகாப்பிற்காக ஊடக தணிக்கைக்கு இராணுவம் உத்தரவிட்டது. அத்துடன் மோதலை தவிர்க்க அரச ஆதரவு, எதிர்ப்பாளர்கள் எங்கும் பேரணிகளை நடத்த வேண்டாம் என்று உத்தரவிட்டது. இராணுவத்தின் கட்டுப்பாட்டுக்கு வந்த தொலைக்காட்சியில் வெளியிடப்பட்ட அறிவிப்பில், "அனைத்து தரப்பினரிடமும் அமைதி, ஒழுங்கை நிலைநாட்டவே இராணுவ சட்டம் அமுலுக்கு வருகிறது. பொதுமக்கள் பயப்படத் தேவையில்லை" என்று கூறப்பட்டது.
நெருக்கடியான தருணத்தில் தலையிடும் 1914 சட்டத்தின்படி இராணுவ சட்டம் குறித்த அறிவிப்பில் அந்நாட்டு இராணுவ தளபதி ப்ராயுத் சான் ஒசா கையொப்பம் இட்டார். இராணுவத்தின் அறிவிப்பை அடுத்து நேற்று செவ்வாய்க்கிழமை தாய்லாந்து பங்குச்சந்தை மற்றும் பஹ்ட் நாணயம் வீழ்ச்சி கண்டது. தாய்லாந்தின் மிகப்பெரிய முதலீட்டு நாடான ஜப்பான், அங்கு ஏற்பட்டிருக்கும் அரசியல் நிலைவரம் குறித்து கடும் கவலையை வெளியிட்டதோடு அனைத்து தரப்பும் வன்முறையை தவிர்த்து பொறுமையை கையாளும்படி கோரியது.
எவ்வாறாயினும் இராணுவத்தின் அறிவிப்பு குறித்து கவனம் செலுத்தப்போவதில்லை என்று குறிப்பிட்டிருக்கும் தாய்லாந்தின் காபந்து அரசு, தொடந்தும் அதிகாரத்தில் இருப்பதாக அறிவித்துள்ளது. "இராணுவம் நாட்டின் பாதுகாப்பு விவகாரங்களில் செயற்பட்டிருப்பதை தவிர்த்து ஏனைய அனைத்தும் வழமையாக உள்ளது" என்று பிரதமரின்;; தலைமை பாதுகாப்பு ஆலோசகரான பரடோன் பட்டனடபுட்டின் குறிப்பிட்டுள்ளார்.
அதேபோன்று இராணுவ சட்டம் காபந்து அரசின் செயற்பாடுகளில் பாதிப்பை செலுத்தாது என்று இராணுவ பேச்சாளர் ஒருவர் வலியுறுத்தியுள்ளார்.
தாய்லாந்து பிரதமராக இருந்த யிங்லுக் கடந்த டிசம்பரில் பாராளுமன்ற கீழவையை கலைத்தது மற்றும் இம்மாத ஆரம்பத்தில் அதிகார துஷ்பிரயோக குற்றச்சாட்டில் யிங்லுக்கை பதவி விலக நீதிமன்றம் உத்தரவிட்ட விவகாரங்களை அடுத்து தென்கிழக்கு ஆசியாவின் இரண்டாவது மிகப் பெரிய பொருளாதார சக்தியாக இருக்கும் தாய்லாந்தின் அரசியல் முட்டுக்கட்டை தீவிரம் அடைந்ததாக அவதானிகள் விபரிக்கின்றனர்.
அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்களின் அழுத்தங்களுக்கு பயந்து தமது அரசு பதவி விலகாது என்று இடைக்கால ஜனாதிபதி நிவட்டம்ரொங் பு+ம்சொங்பைசான் கடந்த திங்கட்கிழமை வலியுறுத்தி இருந்தார்.
தாய்லாந்து முன்னாள் பிரதமராக இருந்த யிங்லுக்கின் சகோதரர் தக்சின் சினவாத்ரா கடந்த 2006 ஆம் ஆண்டு இராணுவ சதிப்புரட்சி மூலம் பதவி கவிழ்க்கப்பட்ட பின்னர் அங்கு அதிகாரப்போட்டி நீடித்து வருகிறது. இதனைத் தொடர்ந்து பல சந்தர்ப்பங்களிலும் ஏற்பட்ட அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களும் உயிர்ப்பலிகளுடன் முடிவடைந்துள்ளன.
தற்போதைய பதற்ற நிலை கடந்த ஆண்டில் தாய்லாந்து தலைநகரில் ஆரம்பமானது. இதன்போது அரச எதிர்ப்பாளர்கள் தலைநகரின் பல பகுதிகளையும் முடக்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனையடுத்து யிங்லுக் கடந்த பெப்ரவரியில் பொதுத் தேர்தலுக்கு அழைப்பு விடுத்தார். இதில் தலைநகருக்கு வெளியில் யிங்லுக்கிற் அதிக மக்கள் ஆதரவு இருப்பதால் அவரது ஆளும் கட்சியே தேர்தலில் வெற்றி பெறும்; என்று எதிர்பார்க்கப்பட்டது.
எனினும் இந்த தேர்தலுக்கு அரசு எதிர்ப்பாளர்கள் இடையு+று செய்ததால் பொதுத் தேர்தல் இரத்துச் செய்யப்பட்டது. இதில் அதிகாரத்தை மக்களால் தேர்வுசெய்யப்படாத தலைவர்களிடம் கையளிக்குமாறே அரச எதிர்ப்பாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர். தலைநகரில் இருக்கும் நடுத்தர வர்க்கத்தினரே அரசு மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தி யிங்லுக்கிற்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர். ஆனால் எதிர்ப்பாளர்களின் கோரிக்கைக்கு அமைய அதிகாரத்தை மக்களால் தேர்வுசெய்யப்படாதோரிடம் கையளித்தால் நாட்டில் சிவில் யுத்தம் வெடிக்கும் என்று யிங்லுக்கிற்கு ஆதரவான 'சிவப்பு சட்டை' போராட்டக்காரர்கள் எச்சரித்துள்ளனர்.