திவிநெகும வாழ்வின் எழுச்சி திட்டம் திணைக்களமாக மாற்றப்பட்டதனை தொடர்ந்து நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டுவரும் கிராமம் கிராமமாக வீடு வீடாக திட்டத்தின் கீழான நடமாடும் சேவைகள் மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் நடைபெற்றுவருகின்றன.
இதன் கீழ் களுவாஞ்சிகுடி பிரதேச செயலகத்தின் ஐந்தாவது நடமாடும் சேவை களுதாவளை மத்திய மகா வித்தியாலயத்தில் களுவாஞ்சிகுடி பிரதேச செயலாளர் கலாநிதி மு.கோபாலரட்னம் தலைமையில் நடைபெற்ற ஆரம்ப நிகழ்வில் அதிதிகள் பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது 15க்கும் மேற்பட்ட திணைக்களங்கள் தமது திணைக்களங்களின் சேவைகளை மக்களின் காலடிக்கு கொண்டுவந்தனர். வாழ்வின் எழுச்சி திட்டத்தின் கீழ் வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும் வகையில் 18 பத்து இலட்சம் ரூபா இலகு கடன்களும் வழங்கிவைக்கப்பட்டன.
அத்துடன் 35 பேருக்கு காணி உறுதிகள் வழங்கப்பட்டதுடன் 25பேருக்கு காணிச்சான்றிதழ்களும் வழங்கிவைக்கப்பட்டன.
1000க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதுடன் அவற்றில் 600க்கும் மேற்பட்ட பிரச்சினைகளுக்கு தீர்வுகள் வழங்கப்பட்டதுடன் ஏனைய பிரச்சினைகளை உரிய அமைச்சுகளுக்கு கொண்டுசென்று தீர்வினைப்பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக பிரதேச செயலாளர் கலாநிதி மு.கோபாலரட்னம் தெரிவித்தார்.
இதன்போது விசேடமாக இதுவரையில் சட்ட ரீதியற்ற முறையில் வாழ்ந்த 13 சோடிகளுக்கு திருமணம் செய்யப்பட்டு அவர்களுக்கு திருமண சான்றிதழ் வழங்கப்பட்டதாகவும் பிரதேச செயலாளர் தெரிவித்தார்.
இதன்போது 100க்கும் மேற்பட்டோர் பிறப்புச்சான்றிதல்களுக்கு விண்ணப்பித்துள்ளதாகவும் 27பேர் மின்சார இணைப்புகளுக்கு விண்ணப்பித்துள்ளதாகவும் பிரதேச செயலாளர் கலாநிதி மு.கோபாலரட்னம் தெரிவித்தார்.
இந்த நடமாடும் சேவை மூலம் கிராம மட்டத்தில் உள்ளோர் பிரதேச செயலகங்களுக்கு சென்று தமது காலத்தினையும் நேரத்தினையும் வீணடிக்காத வகையில் அவர்களின் காலடிக்கு சென்று சேவைகள் வழங்கப்பட்டுவருவதாகவும் அவர் தெரிவித்தார்.
அத்துடன் திருமண பதிவுகளை செய்யும்போது வெளியில்செய்வதற்கு அதிகளவான பணம் செலவிடப்படுகின்றது.ஆனால் இங்கு மிகவும் குறைந்தளவிலான பணமே அறவிடப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
ஐந்தாவது தடவையாகவும் இந்த வாழ்வின் எழுச்சி நடமாடும்சேவை நடத்தப்படுவதாகவும் பிரதேச செயலாளர் தெரிவித்தார்.