தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ள கூடங்குளம் அணுமின் நிலையத்தில் ஏற்பட்ட விபத்தில் 6 ஊழியர்கள் காயமடைந்துள்ளனர்.
கூடங்குளம் அணுமின் நிலையத்தில் அணுஉலை 1ல் இருக்கும் டர்பைன் கட்டிடத்தில் பராமரிப்புப் பணிகளை மேற்கொண்டிருந்தபோது, அங்கிருந்த வால்வில் ஏற்பட்ட கசிவால், சுடு நீர் 6 பணியாளர்கள் மீது பட்டது. இன்று மதியம் சுமார் 12.10 மணியளவில் இந்தச் சம்பவம் நடந்தது.இந்த ஆறு பேரில் ராஜன், பவுல் ராஜ், செந்தில்குமார் ஆகியோர் நியூக்ளியர் பவர் கார்ப்பரேஷனின் ஊழியர்கள். ராஜேஷ், வினு, மகேஷ் ஆகிய மூன்று பேர் ஒப்பந்த ஊழியர்கள்.
இவர்கள் அனைவரும் முதலில் கூடங்குளத்தில் அமைந்துள்ள அணு உலை மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்ட பிறகு, நாகர்கோவிலில் உள்ள பார்வதிபுரத்தில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளனர்.
உதயகுமார் குற்றச்சாட்டு
இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அணு உலைக்கான மக்கள் இயக்கத்தைச் சேர்ந்த சுப. உதயகுமார், "துவக்கத்திலிருந்தே இந்த அணு உலையில் தரமற்ற உதிரிபாகங்கள் பயன்படுத்தப்படுவது குறித்து எச்சரித்து வந்திருக்கிறோம். இப்போது இந்த விபத்து நடந்திருக்கிறது. இது குறித்து சார்பற்ற அறிவியல் குழு விசாரணை நடத்தப்பட வேண்டும்" என்று கோரிக்கைவிடுத்துள்ளார்.
தேர்தல் முடிவுகள் வெளிவரவிருக்கும் நிலையில், இயங்காமல் தத்தளித்துக்கொண்டிருக்கும் அணு மின் நிலையத்தை மூடுவதற்காக இப்படி ஒரு விபத்தைப் பற்றி வெளிப்படையாகச் சொல்லப்படுகிறதோ என்ற சந்தேகம் எழுந்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விபத்து தொடர்பாக கூடங்குளம் அணுமின் நிலையம் வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில், மே 12ஆம் தேதி மதியம் 2.30 மணியளவில் பராமரிப்பிற்காக அணு உலையில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டதாகவும் 15ஆம் தேதி முதல் மின் உற்பத்தி துவங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.