கிழக்கு மாகாணசபை மூலம் மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கொக்கட்டிச்சோலையில் நிர்மாணிக்கப்பட்ட விசேட பாடசாலையொன்று இன்று திறந்துவைக்கப்பட்டது.
கிழக்கு மாகாண பாலர் பாடசாலை பணியகத்தின் ஏற்பாட்டில் பிளன் ஸ்ரீலங்கா அமைப்பின் நிதியுதவியுடன் இந்த பாடசாலை சகல வசதிகளும் கொண்டதாக நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
சுமார் 35 இலட்சம் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த ஆரம்ப பாடசாலையின் திறப்பு விழா கிழக்கு மாகாண பாலர் பாடசாலை பணியகத்தின் தலைவர் பொன்.செல்வநாயகம் தலைமையில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் ஏ மஜீத்,முன்னாள் முதலமைச்சரும் ஜனாதிபதியின் ஆலோசகருமான சிவநேசதுரை சந்திரகாந்தன், பட்டிப்பளை பிரதேச செயலாளர் சிவப்பிரியா வில்வரெட்னம், பிளன் ஸ்ரீலங்காவின் இலங்கைக்கான பிரதி வதிவிட பிரதிநிதி ஓபன் ஒலிவர்,முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பூ.பிரசாந்தன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
குடந்த 30வருட கால யுத்தத்தின் மோசமான விளைவினை எதிர்நோக்கியிருந்த பட்டிப்பளை பிரதேச மாணவர்களின் நலன் கருதி இந்த பாடசாலை அமைக்கப்பட்டுள்ளது.
இந்த பாடசாலையானது சகல வசதிகளையும் கொண்டதாகவும் ஆரம்ப கல்வியை பெறும் மாணவர் சிறந்த மாணவராக வெளிவரும் வகையிலும் இந்த பாடசாலை அமைக்கப்பட்டுள்ளது.
இதுபோன்ற பாடசாலையானது மட்டக்களப்பு மாவட்டத்தின் இரு பிரதேசங்களில் முதன்முறையாக அமைக்கப்பட்டுள்ளது.
கொக்கட்டிச்சோலை மற்றும் ஏறாவூரில் அமைக்கப்பட்டுள்ள இந்த பாடசாலைகளானது ஏனைய பகுதிகளிலும் அமைக்கப்படவுள்ளதாகவும் இங்கு தெரிவிக்கப்பட்டது.