4/09/2014

| |

சாட்சியமளிப்பவர்களை துரோகிகளாகவே நாம் கருதுவோம்

ஐ.நா.சர்வதேச விசாரணைக்கு இலங்கை எவ்வகையிலும் ஒத்துழைக்காது
இலங்கை மீதான ஐக்கிய நாடுகள் அமைப்பின் யுத்த விசாரணைக்கு ஒத்துழைப்பை வழங்க வேண்டுமென்று விடுக்கப்பட்ட கோரிக்கையை அரசாங்கம் நிராகரித்துள்ளது. மனித உரிமை தொடர்பான அமைப்பின் நீதி விசாரணைக்கு உட்படுத்தப்பட நாம் தயாராக இல்லையென்று வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் அறிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமை அமைப்பின் தலைவி நவநீதம்பிள்ளை கடந்த வாரம் ஜெனீவாவில் நிறைவேற்றப்பட்ட இலங்கைக்கு எதிரான அமெரிக்கத் தீர்மானம் தொடர்பாக தமக்கு கிடைத்துள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி யுத்தக் குற்றச்சாட்டு பற்றிய விசாரணைகளை நடத்தப் போகிறோம் என்ற அறிவித்தலை நாம் முற்றாக நிராகரிக்கிறோம் என்று பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார்.
கொழும்பில் திங்களன்று வெளிநாட்டு ஊடகவியலாளர் அமைப்பின் உறுப்பினர்களை சந்தித்து உரையாடிய போதே அவர் இதனைத் தெரிவித்தார். இந்த விசாரணையில் நாம் பங்கு கொள்ள மாட்டோம் என்றும் அவர் கூறினார்.
ஐக்கிய நாடுகள் அமைப்பின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை இலங்கையில் இரு தரப்பினரும் செய்த யுத்தக் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்த இருப்பதனால் அதற்கு அரசாங்கம் ஒத்துழைக்க வேண்டுமென்று வேண்டுகோள் விடுத்த ஒரு வாரத்திற்கு பின்னரே இலங்கை வெளிவிவகார அமைச்சர் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.
கடந்த மார்ச் மாதம் 27ம் திகதியன்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் இலங்கைக்கு எதிரான பிரேரணையை நாம் நிராகரிக்கிறோம் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அறிவித்திருந்தார். ஐக்கிய நாடுகள் அமைப்பு இந்த விசாரணைகளை இன்னும் அறிவிக்கவில்லை என்று தெரிவித்த அமைச்சர் அது எவ்வாறாயினும் அத்தகைய விசாரணையை நாம் பொருட்படுத்தப் போவதில்லை என்றும் கூறினார்.
இந்த விசாரணைக்காக ஐக்கிய நாடுகள் அமைப்பு செலவுத் தொகையாக 1.5மில்லியன் டொலர்களை ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் ஆணையாளரின் காரியாலயத்திற்கு ஒதுக்கியிருப்பதாகவும் ஆணையாளரின் இறுதி அறிக்கை 2015 மார்ச் மாதத்தில் வெளிவரும் என்றும் அறிவிக்கப்படுகிறது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் ஆணையாளரின் நீதி விசாரணைக்கு உட்பட நாம் தயாராக இல்லை என்ற கொள்கை மட்டத்திலான தெளிவான தீர்மானத்தை எடுத்திருக்கிறோம் என்றும் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் அறிவித்தார்.
எவ்வாறாயினும் நாம் இலங்கைக்கு சுகாதாரம், கல்வி மற்றும் யுத்தத்தினால் இடம்பெயர்ந்த மக்கள் போன்ற பல்வேறு செயற்பாடுகளுக்கு உதவி வரும் ஏனைய ஐக்கிய நாடுகள் அமைப்புகளுடன் நாம் தொடர்ந்தும் ஒத்துழைப்புடன் செயற்படுவோம் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
முன்னாள் மேல் நீதிமன்றத்தின் நீதிபதி தலைமையில் அரசாங்கம் இப்போது விசாரணைகளை நடத்தி வருவதுடன் ஜனாதிபதியின் பணிப்படை ஐக்கிய நாடுகள் செயற்பாட்டு அமைப்புடன் ஐ.சி.ஆர்.சி அமைப்புடன் இணைந்து செயற்படுவதாகவும் அவர் தெரிவித்தார். அத்துடன் சனத்தொகை விபர மற்றும் புள்ளிவிபர திணைக்களம் ஏற்கனவே சனத்தொகை பற்றிய ஆய்வினை வடபகுதியில் நடத்தி வருவதும் குறிப்பிடத்தக்கது.
வெளிநாட்டவர்கள் இங்கு ஐக்கிய நாடுகள் அமைப்பின் சார்பில் விசாரணைக்கு வருவதற்கு அனுமதிப்பீர்களா என்று கேட்ட கேள்விக்கு பதிலளித்த வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், இலங்கை அரசாங்கத்தின் ஒத்துழைப்பின்றி எவரும் இங்கு வரமுடியாதென்று தெரிவித்தார்.
எல்.ரி.ரி.ஈ. பயங்கரவாதிகளை 37 வருட யுத்தத்தின் பின்னர் துவம்சம் செய்து 5 ஆண்டுகள் கழிந்துள்ள இவ்வேளையில் அரசாங்கம் தனது நல்லிணக்கப்பாட்டு செயற்பாடுகளை தொடர்ந்து மேற்கொள்ளும் என்று கூறினார்.
இலங்கை அரசாங்கம் இந்த யுத்தத்தின் போது இராணுவத்தினர் பொதுமக்களை குறிபார்த்து தாக்கியது என்ற குற்றச்சாட்டை முற்றாக நிராகரிக்கும் அதேவேளையில் எல்.ரி.ரி.ஈயினரே பொதுமக்களையும் சிறு பிள்ளைகளையும் பாதுகாப்பு கேடயங்களாக பயன்படுத்தியது என்றும் குற்றம்சாட்டியிருக்கிறது.
ஐக்கிய நாடுகள் அமைப்பின் இலங்கைக்கு எதிரான விசாரணையில் சாட்சியம் அளிக்க முன்வருபவர்களை அரசாங்கம் துரோகிகளாகவே கருதும் என்றும் அவர் கூறினார்.