4/22/2014

| |

கொக்கட்டிச்சோலையிலிருந்து கொழும்புக்கான நேரடி பஸ்சேவை ஆரம்பம்

மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலையிலிருந்து புதிதாக திறக்கப்பட்ட மண்முனை பாலத்தினூடாக கொழும்புக்கான நேரடி பஸ் சேவையை இலங்கை போக்குவரத்து சபையின் மட்டக்களப்பு டிப்போ ஆரம்பித்துள்ளது.
கொக்கட்டிச்சோலை நுழைவாயிலிலிருந்து குறித்த பஸ்சேவையானது திங்கட்கிழமை(21) 6.15 மணிக்கு ஆரம்பமாகியது.
இலங்கை போக்குவரத்து சபையின் மட்டக்களப்பு டிப்போ முகாமையாளர் கே.மனோகரன் தலைமையில் நடைபெற்ற ஆரம்ப வைபத்தில் கொக்கட்டிச்சோலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, இலங்கை போக்குவரத்துச்சபை கிழக்கு மாகாண செயலாற்று முகாமையாளர் எஸ்.கனகசிங்கம் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
மாலை 6.15 மணிக்கும் காலை 11.00 மணிக்கும் கொக்கட்டிச்சோலையிலிருந்து இரு பஸ்சேவைகள் தினமும் இடம்பெறவுள்ளதாக டிப்போ முகாமையாளர் மேலும் தெரிவித்தார்.
கொக்கட்டிச்சோலை மக்கள் பல மைல் தூரத்திலுள்ள காத்தான்குடி அல்லது களுவாஞ்சிக்குடிக்கு சென்றே கொழும்புக்கான பயணத்தை மேற்கொண்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, கொக்கட்டிச்சோலையில் இருந்து மட்டக்களப்புக்கு மண்முனை பாலம் ஊடாக அரச மற்றும் தனியார் பஸ் சேவைகள் ஞாயிற்றுக்கிழமை (20)  ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இச்சேவையூடாக இதுவரை காலமும் மிகவும் சிரமத்திற்கு மத்தியில் நீர் வழியூடாக போக்குவரத்து செய்த மக்களுக்கு குறித்த நேரத்தில் இலகுவாக தங்களுடைய போக்குவரத்தினை மேற்கொள்ள கூடிய வசதி கிடைக்கப்பெற்றுள்ளன.
அத்துடன் கொக்கட்டிச்சோலையில் இருந்து தாந்தாமலைக்கு தனியார் போக்குவரத்து ஒன்று ஞாயிற்றுக்கிழமை (20) ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.