எல்.ரி.ரி.ஈ உள்ளூர் தலைவர் என்ற சந்தேகத்தின்பேரில் தேடப்பட்டுவந்த கோபி உட்பட மூவர் நேற்று அதிகாலை சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.
வவுனியா நெடுங்கேணி பிரதேசத்தில் இராணுவத்தினர் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்புத் தேடுதல் நடவடிக்கையின் போது தப்பிச்செல்ல முற்பட்டபோதே இவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் பேச்சாளர் பிரிகேடியர் ருவன் வணிகசூரிய தெரிவித்தார்.
கொல்லப்பட்டவர்களில் கோபி என அழைக்கப்படும் கதீபன் பொன்னையா செல்வநாயம், தேவிகன் மற்றும் சந்தேகநபர் ஒருவரும் அடங்குவதாக அவர் குறிப்பிட்டார். இந்தச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, நாட்டில் பயங்கரவாதத்தை மீண்டும் உருவாக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் எல்.ரி.ரி.ஈ யின் உள்ளூர் தலைவர் என சந்தேகிக்கப்படும் கோபி உள்ளிட்ட மூவரை பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் தேடிவந்தனர். கடந்த மாதம் மேற்படி மூன்று சந்தேக நபர்களும் கிளிநொச்சி பிரதேசத்திலுள்ள வீடொன்றில் தலைமறைவாகத் தங்கியிருப்பதாக பாதுகாப்புப் படையினருக்குக் கிடைக்கப்பெற்ற தகவலொன்றையடுத்து பயங்கரவாதத் தடுப்புப் பிரிவுப் பொலிஸார் குறித்த வீட்டை சுற்றிவளைத்துத் தேடுதல் நடத்தியிருந்தனர். இதன்போது கோபி உள்ளிட்ட சந்தேகநபர்கள் பொலிஸார் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு விட்டுத் தப்பிச் சென்றனர்.
இதனையடுத்து மூன்று சந்தேகநபர் களையும் பொலிஸார் தேடிவந்த அதேநேரம், இவர்களுக்கு அடைக்கலம் கொடுத்தார் என்ற சந்தேகத்தின் பேரில் கிளிநொச்சி பிரதேசத்தைச் சேர்ந்த ஜெயக்குமாரி என்பவர் கைதுசெய்யப் பட்டிருந்தார்.
எனினும், தப்பிச் சென்ற மூன்று சந்தேகநபர்களையும் தொடர்ந்தும் தேடும் பணியில் ஈடுபட்ட இராணுவத்தினர், கிளிநொச்சி மற்றும் வவுனியா பிரதேசத்திலுள்ள பல்வேறு பகுதிகளில் தொடர் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தனர். அத்துடன், மேற்படி சந்தேகநபர்களை கண்டுபிடிக்க உதவுபவர்களுக்கு 10 இலட்சம் ரூபா சன்மானம் வழங்கப்படும் என்றும் பொலிஸார் அறிவித்திருந்தனர். இந்த நிலையில் இவர்கள், வவுனியா நெடுங்கேணி பிரதேசத்தில் தலைமறை வாகியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு கிடைக்கப்பெற்ற புலனாய்வுத் தகவலின் அடிப்படையில் அந்தப் பிரதேசத்தை இராணுவம் சுற்றிவளைத்து விசேட தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டது. இராணுவத்தினர் சுற்றிவளைத்ததையடுத்தே நேற்று அதிகாலை வேளை மூன்று சந்தேகநபர்களும் இராணுவத்தை நோக்கித் துப்பாக்கிப் பிரயோகம் நடத்திவிட்டு தப்பிச்செல்ல முயன்றுள்ளனர்.