கடந்த 2004 ஆம் ஆண்டில் வெருகல் பிரதேசத்தில் இடம்பெற்ற படுகொலையில் உயிரிழந்த வீரமைறவாகளை நினைவு கூரும் நிளவு நாள் இன்று நடைபெற்றது. அதில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் சிவனேசதுரை சந்திரகாந்தன் அவர்கள் ஆற்றிய பேருரையின் முழுவடிவம் இதோ
தமிழ் மக்கள் கிழக்கு மாகாண மக்களின் வரலாற்றில் இரத்தகறை படிந்த தினமான சிவப்பு சித்திரை பத்தாம் நாளாகிய இன்று இந்த வெருகல் மலை பூங்காவில் நாம் கூடியிருக்கின்றோம். நீங்கள் எல்லோரும் அறிந்ததுபோல் இந்த மண்ணிலே நடந்தேறிய என்றுமே மன்னிக்க முடியாத அந்த கொடூரத்தின் பெயரால் நாமனைவரும் இங்கு கூடியிருக்கின்றோம்.ஆம் வெருகல் படுகொலையின் பத்தாவது ஆண்டு நினைவு தினத்தில் நாம் இங்கு கூடியிருக்கின்றோம்.
எமது இலங்கை திருநாட்டில் நடந்தேறிய ஒரு வெலிகடை படுகொலை போலஇ ஒரு கொக்கட்டிச்சோலை படுகொலை போல ஒரு குமுதினிப்படகு படுகொலை போல ஒரு கந்தன் கருணை படுகொலை போல ஒரு வெருகல் படுகொலையும் எம் நெஞ்சங்களைவிட்டு இலகுவில் அகன்றுவிடாதவொன்றாகும்.அதனால்தான் இந்த படுகொலை நினைவுகளை நாம் வருடம்தோறும் இதே நாளில் நினைவு கூர்ந்து வருகின்றோம்.ஆம் நாம் மட்டுமே இந்த வெருகல் படுகொலையை நினைவுகூர்ந்து வருகின்றோம்.தமிழ் மக்கள் விடுதலை புலிகள் மட்டுமே இந்த வெருகல் படுகொலையில் உயிர் நீர்த்த மாவீரர்களை வருடாவருடம் நினைவுகூர்ந்து வருகிறார்கள்.அவர்களின் உறவுகளை கெளரவித்து வருகின்றார்கள்.
ஆனால் ஏனைய படுகொலை நினைவுகளை பேசுவது போலவோஇ அதையிட்டு எழுதுவதுபோலவோஇ அத்தினங்களை நினைவுகூருவது போலவோ இந்த வெருகல் படுகொலை பற்றி தமிழ் கூறும் இந்த நல்லுலகம் கண்டுகொள்வதில்லை. அது ஏன் என்றும் எமது மக்கள் ஒருபோதும் சிந்திப்பதுமில்லை.கேள்வி எழுப்புவதுமில்லை.எமது மக்கள் இன்னும் வளர்ச்சி காணாதிருப்பதற்கும் முன்னேறமுடியாதிருப்பதற்கும் இந்த மேத்தனபோக்கே காரணமாகும்.ஆம் நாம் கேள்வி எழுப்ப வேண்டும். ஏன் தமிழ் பத்திரிகைகளில் பெரும்பாலானவை இந்த வெருகல் படுகொலையையிட்டு இன்றுவரை கள்ளமெளனம் காக்கின்றன? இந்த வெருகல் படுகொலை நடந்த போது மூடிக்கொண்ட இந்த இந்த தமிழ் பத்திரிகைகளின் கண்கள் இன்றுவரை ஏன் திறக்கப்படவில்லை?
இந்த படுகொலை நிகழ்ந்த வரலாறு உங்களுக்கு மட்டுமல்ல எமது அடுத்த சந்ததிக்கும் எடுத்துச்செல்லப்பட வேண்டும்.ஆம் தமிழனை தமிழனே வெட்டிவீழ்த்தியஇ சுட்டு வீசிய வரலாற்றையிட்டு இன்றைய இளம் சமூகம் கேள்வியெழுப்ப வேண்டும். நாங்கள் என்னகுற்றம் செய்தோம்? போராட்டத்தில் இணைந்தது குற்றமா? உண்ணாமலும் உறங்காமலும் இங்கே எங்கள் உறவுகள் ஏங்கிக்கிடக்க வடக்கு வரை நடந்து சென்று அந்த மண்ணைக்காக்க போராடியது குற்றமா? வடக்கு போர்முனைகளில் ஆயிரக்கணக்கில் எமது சகோதர சகோதரிகளை இழந்து நின்றது குற்றமா? ஏன் இந்த அநீதி எமக்கு இழக்கப்பட்டது? நாம் என்ன கேட்டோம்? எமது மக்களுக்கான உரிமைகள் உறுதிபடுத்தப்படவேண்டும்.என்றுதானே கேட்டோம்.
தமிழீழ விடுதலைபுலிகளில் பாதிக்குமேல் எமது போராளிகளே இருந்தார்கள்.இறந்த மாவீரர்களில் கிழக்குமாகாண போராளிகளே அதிகளவில் இருந்தார்கள்."அவர்களெல்லாம்" வெளிநாடுகளுக்கு ஓட நாமோ வடக்கு நோக்கி ஓடினோம்.அந்த மண்ணைக்காத்தோம்.ஜெயந்தன் படையணி இல்லாதுவிடின் தமிழீழ விடுதலைபுலிகளின் வெற்றிவரலாறுகளெல்லாம் வேறுமாதிரியே எழுதப்பட்டிருக்கும்.
ஆனால் 2002ம் ஆண்டு சமாதான ஒப்பந்தம் வந்தபோது
உருவாக்கப்படவிருந்த இடைக்கால நிர்வாகத்துக்காக தெரிவான 32 துறை செயலாளர்களில் ஒருவரை கூட கிழக்கு மாகாணத்திலிருந்து நியமிக்கும் அளவிற்கு அவர்களின் நெஞ்சில் ஈரம் இருக்கவில்லை.அதை தட்டிகேட்டது குற்றமா? எமதுமக்களின் உரிமைகளை கேட்டது எந்த வகையில் குற்றமாகும்? நாம் போராடும் பொழுதுகளில் எம்மை பாராட்டினார்கள்இ மட்டக்களப்பு வீரம்விளைநிலம் என்று சான்று தந்தார்கள். எமது கல்லறைகளில் தென்தமிழீழத்து மாவீரன் என்று கல்வெட்டு எழுதினார்கள்.ஆனால் நாம் எமது உரிமைகளை கேட்ட மாத்திரத்தில் ஒரே நாளில் துரோகிகளாக்கப்பட்டோம். அப்படிஎன்றால் பிரிந்து செல்கின்றோம் என்றோம். படையெடுத்து வந்து படுகொலைகளை கட்டவிழ்த்து விட்டார்கள்.
ஆம் இதே மண்ணில் அதோ அந்த வெருகலாற்று படுக்கையில் யுத்த பேரிகை முழங்கியது. சரணடைந்த கிழக்கு போராளிகள் மீது படுகொலை கட்டவிழ்த்து விடப்பட்டது. ஐயோ அண்ணா வேண்டாம் வேண்டாம் என்று பெண்போராளிகளின் அவலக்குரல் கதிரவெளி கடலோரமெங்கும் எதிரொலித்தது.எமது பெண் போராளிகள் மானபங்க படுத்தப்பட்டார்கள்.சுமார் இருநூறுக்கும் மேற்பட்டபோராளிகளின் உயிர் பறிக்கப்பட்டது. சித்திரை வெயிலில் வெம்பி வெடித்து கதிரவெளி கடற்கரை மணலெங்கும் எமது போராளிகளின் உடலங்கள் நாற்றமெடுத்துகிடந்தன.அவற்றை அடக்கம்செய்ய கூடாதென்ற கட்டளை வன்னிபுலிகளால் விடுக்கப்பட்டிருந்தது.
எமது மக்களே இது எதிரி செய்த படுகொலையல்ல.நாம் யாரை சொந்த தமிழர்கள் என்று நம்பினோமோஇ எமது தலைவர்கள்என்றோமோஇ எம்மை வழிநடாத்துவார்கள்இ எமக்கு விடுதலை வாங்கி தருவார்கள் என்று நம்பியிருந்தோமோ அவர்களால்நடாத்தப்பட்ட படுகொலைதான் இது. படைகொண்டு தீர்வுக்கான வடக்கும் கிழக்கும் என்ன அந்நிய தேசங்களா? யார் இந்த அநியாயத்தை பற்றி கேள்விஎழுப்பினார்கள்?
2004ம் ஆண்டு இந்த வெருகல் படுகொலை நடந்தபோது யுத்த நிறுத்தம் அமுலில் இருந்ததை உங்களுக்கு ஞாபகம் ஊட்ட விரும்புகின்றேன். அதுமட்டுமா நோர்வே தலைமையிலான யுத்த நிறுத்த கண்காணிப்புகுழு கடமையிலிருந்ததே அப்படியிருக்க எப்படி இந்த படுகொலை சாத்தியமாகும்.
வன்னியிலிருந்து ஒமந்தையூடாகவும் கடல் வழியாகவும் எப்படி வன்னிபுலிகள் இந்த வாகரை பிரதேசம்வரை ஆயுதங்கள் சகிதம் வந்து சேர்ந்தனர்? இதற்கு அனுமதி வழங்கியவர்கள் யார்? அன்றைய அரசுடன் வன்னிபுலிகளுக்காக தூது சென்ற தமிழ் தேசிய தலைவர்கள் யார்? இந்த உண்மைகள் அம்பலமாக்கபடவேண்டும்.எமது மக்களுக்கு நீதி வழங்க படவேண்டும்.இன்று யுத்தகுற்றம் யுத்தகுற்றம் என்கின்றார்களே? இது யுத்தநிறுத்தத்தின் பொது நடந்த படுகொலை அல்லவா? இது அதைவிட குற்றமாகாதா? ஒரு சர்வதேச ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு இருக்கையில் நடாத்தப்பட்ட இந்த வெருகல் படுகொலை ஒரு மாபெரும் மனித உரிமை மீறல் என்று இங்கே பிரசன்னமாகியிருக்கும் அந்த மாவீரர்களின் அன்னையர்கள் சாட்சியாக தமிழ் மக்கள் விடுதலை புலிகள் சார்பில் பிரகடனம் செய்கின்றேன்.
ஒஸ்லோ உடன்படிக்கையையும் 2002 சமாதான ஒப்பந்தத்தையும் கிழித்தெறிய வழிசமைத்த முதலாவது யுத்தநிறுத்த மீறல் தமிழீழ விடுதலை புலிகளால் நடாத்தப்பட்ட இந்த வெருகல் படுகொலையேயாகும் என சர்வதேசத்துக்கு பறை சாற்றுன்றேன்.
இந்த படுகொலை நடந்த போது தமிழ் மக்களின் காவலர்கள் என்று இன்று வலம் வருகின்ற தமிழ் தேசிய கூட்டமைப்பினர் ஏன் மெளனம் காத்தார்கள்? இன்று ஜெனிவாவுக்கு படையெடுக்கும் இந்த கூட்டமைப்பினரும் புகலிடத்தமிழர்களும் இந்த வெருகல் படுகொலைக்கு ஏன் நீதி கேட்பதில்லை? மட்டக்களப்பானுக்கு என்ன நீதி? என்கின்ற அலட்சியமா?
எனது அன்பார்ந்த மக்களே இன்னும் சொல்கின்றேன் இந்த படுகொலையின் உள்நோக்கங்கள் பற்றி நீங்கள் அறிய வேண்டும் என்பதற்காக சொல்கின்றேன். எமது மக்களின் விடுதலை என்கின்ற பெயரில் கிழக்கு மாகாணத்தை அடாத்தாக பிடித்து ஆளுவதே யாழ்-மேலாதிக்க வாதிகளின் திட்டமாகும்.இங்கே நான் இப்படி கூறுவதை திரித்து பிரித்து பிள்ளையான் வெருகலில் பிரதேசவாதம் பேசினார் என்று நாளை சில பத்திரிகைகள் செய்தி வெளியிடகூடும்.அவர்களுக்காக மிக தெளிவாக சொல்கின்றேன். நாங்கள் ஒருபோதும்யாழ்ப்பாண மக்களுக்கு எதிரானவர்கள் அல்ல.
கிழக்கு மாகாணம் வரலாற்றில் ஒருதடவையேனும் பிறிதொரு பிரதேசத்தின் மீது படையெடுத்ததோ ஆட்சிசெலுத்தியதோ இல்லை.அதற்கான அவசியம் எமக்கு ஒருபோதும் இருந்ததில்லை.ஏனெனில் இயற்கை எமக்கு வஞ்சனை செய்யவில்லை. எமது மாகாணம் எல்லை கடந்த இயற்கை வளங்களின் வரபிரசாதங்கள் நிறைந்தது.இதனை வேறு யாரும் வந்து ஆட்சி செய்வதை நாங்கள் அனுமதிக்க முடியாது.நாங்கள் தமிழர்களின் ஒற்றுமைக்கு ஒருபோதும் எதிரிகள் அல்ல.வடக்கு மக்கள் மீது அவர்களின் வாழ்வு மீதும் அவர்களின் மண்மீதும் கொண்டிருந்த பற்று காரணமாகவே அங்கே சென்று வருடக்கணக்கில் போரிட்டோம். அந்த மண்ணில் புதைக்கப்பட்டிருக்கும் ஆயிரக்கணக்கான கிழக்கு மாகாண போராளிகளே அதற்கு சாட்சியாகும்.
ஆனால் தமிழ் மக்களின் விடுதலை என்கிற பெயரில் வடக்கிலிருந்து வரும் புதிய எசமானர்கள் எங்கள் வாழ்வை தீர்மானிக்க நாம் அனுமதிக்க போவதில்லை.என்று சொன்னதற்காக எங்களை படுகொலை செய்தார்கள். எமது கல்விமான்களை கொன்றழித்தார்கள்.இராஜன் சத்தியமூர்த்தியை சுட்டார்கள்.கிங்ஸ்லி இராஜநாயகத்தை கட்டிவைத்து அவரது எம்பி பதவியைஇராஜினாமா செய்ய வைத்தார்கள்.பின்னர் அந்த பதவியைத்தான் யாழ்-மேலாதிக்கத்தின் துதிபாடியான அரியநேந்திரனுக்குபரிசாக கொடுத்தார்கள்.
அத்தோடு விட்டார்களா? அதன்பின்னர் எதற்காக கிங்ஸ்லி இராஜநாயகத்தைகொல்ல வேண்டும்? மட்டக்களப்பு சிறைக்குள்இருந்த எமது போராளி சச்சுமாஸ்டரை அங்கே புகுந்து சுட்டார்கள்.அக்கரைப்பற்று நீதிமன்றுக்குள்புகுந்து எமது போராளியைசுட்டார்கள்.கொட்டாவைவரை சென்று மறைந்திருந்த குகநேசனையும் நண்பர்களையும் நஞ்சூட்டி கொன்றார்கள். நித்திரைபாயிலே எங்கள் ரெஜியண்ணனை கொன்றார்கள்.
தில்லைநாயகம் அதிபரை சோற்றுகோப்பையோடு வைத்து சுட்டார்கள்.அன்று தலை விரித்தாடிய கொலைத்தாண்டவமேஎங்களை பிரிந்து செல்ல தூண்டியது.இந்த படுகொலைகளையிட்டு எந்த தமிழ் தேசிய வாதியும் குரல்கொடுக்கவில்லை.எந்தபுத்திஜீவியும் கேள்விகேட்கவில்லை.எந்த மனித உரிமைவாதிகளும் நீதி கோரவில்லை.ஏன் இன்று மனித உரிமை பேசும் மதபோதகர்களில் யார் அன்று எங்களின் உயிர் காக்க சித்தம்கொண்டனர்? ஏனிந்த பாரபட்சம்? ஆனால் இன்றுஇவர்களுக்கெல்லாம் வடக்கு-கிழக்கு இணைப்பு ஒருகேடு!
இந்த வெருகல் படுகொலை எவ்வளவு அகோரமாக இருந்ததோ அதைவிட அகோரமாக நாங்கள் வடக்கிலிருந்து கிழக்கை துண்டிக்க வேண்டும் என்கின்ற வேணவா எங்களை ஆட்கொண்டது.அதனால்தான் அந்த சித்திரை மாதம் எமக்கு கிழக்கின் தனித்துவம் நோக்கிய ஒரு புரட்சி தீயை எங்களுக்குள் மூட்டியது.எனவேதான் அதனை சிவப்புசித்திரை என விழிக்கின்றோம்.
இத்தனைக்கும் பின்னர்தான் நாம் பிரிந்து சென்றோம்.எமக்கான மாகாண சபையை நாமே உருவாக்கினோம்.ஆனால் அதிலும் சதிசெய்தார்கள்.தங்களுக்கு கீழ் இல்லையென்றால் மட்டக்களப்பான் எக்கேடுகேட்டுபோனாலும் போகட்டும் என்று ஒற்றுமை வேசம்போட்டு எமது வாக்குகளை கொள்ளையிட வந்தார்கள்.சம்பந்தர் வந்தார்.சித்தார்த்தர் வந்தார்.ஆனந்த சங்கரி வந்தார்.அடைக்கலநாதன் வந்தார்.சுரேஷ் பிரேமச்சந்திரன் வந்தார்.வரலாற்றில் முதல்தடவையாக.கிழக்குமாகாணத்து மேடைகளே இவர்களை ஒற்றுமையாக்கியது.அந்த வேஷத்தில் எமது மக்கள் ஏமாந்ததன் பலனை கிழக்கு தமிழர்கள் இன்று அனுபவிக்கின்றனர்.அவர்கள் தமது சதித்திட்டத்தில் வெற்றியடைந்தனர்.
எனவேதான் யாழ்-மேலாதிக்க வாதிகளின் திட்டங்களையிட்டு எமதுமக்கள் மிகவிழிப்பாக இருக்கவேண்டும்.நாம் இந்த மண்ணில் வாழும் மூவீன மக்களோடும் சேர்ந்து வாழ வேண்டியவர்கள்.இனவாதம் பேசி இங்கே அமைதியை நாங்கள் குலைக்க முடியாது.கறைபிடித்த தமிழ் தேசிய கூட்டமைப்பினரின் கதைகளில் சிக்குண்டு இந்த மண்ணின் அதிகாரத்தை இழந்து நிற்கின்றோம்.கடந்த "தமிழர் ஒற்றுமை" என்று உங்களை ஏமாற்றிய தலைவர்கள் வடக்கில் என்னசெய்தார்கள்இ என்ன செய்கின்றார்கள் என்பதை நீங்கள் அறிவீர்களா?
எனதருமை மக்களே!அங்கே வட மாகாண சபையில் ஒருமித்து சத்திய பிரமாணம் எடுக்ககூட அவர்களால் முடியவில்லை.அத்தனை பதவிபோட்டி.அத்தனை குழிபறிப்பு.உலகிலேயே ஒரேகட்சி ஆறு வெவ்வேறு இடங்களில் சத்தியபிரமாணம் எடுத்த வரலாற்றுக்குநமது தமிழ் தேசிய கூட்டமைப்பினர்மட்டுமே சொந்தக்காரர்களாயிருக்க முடியும்.
வடமாகாண சபை அமைச்சுபதவிக்காக தொடங்கிய சண்டை மாகாண சபையை இயங்க முடியாமல் சேணம் இழுக்க வைத்திருக்கிறது.ஆனால் அதைப்பற்றி அவர்களில் யாரும் கவலைப்பட்டதாக காணவில்லை.அவர்களுக்கு இருக்கும் ஒரே சந்தோசம் கிழக்குமாகாண ஆட்சியை பிள்ளையானிடமிருந்து பறித்துவிட்டோமேன்பதே.பறித்தெடுத்து என்ன செய்ய முடிந்தது? தனக்கு மூக்கு போனாலும் பரவாயில்லை எதிரிக்கு சகுனப்பிழையாக இருக்க வேண்டும் என்கின்ற தமிழ் தேசிய கூட்டமைப்பின் இந்த பழிவாங்கும் உணர்வு இன்று கிழக்கு தமிழர்களை அரசியல் அனாதைகளாக்கியிருக்கிறது.
கிழக்கு மாகாணசபை தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பினருக்கு எமதுமக்கள் அளித்த ஒவ்வொரு வாக்கும் எமதுமக்கள்தமக்கு தாமே தலையில் மண்ணையள்ளி போட்டு கொண்டதற்கு சமனானதாகும்.இறுதியாக இந்த வெருகல்மலைபூங்காவில் நின்று ஒன்று மட்டும் சொல்ல விளைகின்றேன்.வெருகல்படுகொலையில் தம் இன்னுயிரை ஈந்த கிழக்கில் மைந்தர்களுக்கு நாம் செய்கின்ற அஞ்சலி என்பது யாழ்-மேலாதிக்க தலைமைகளையும் அதன் அரிவருடிகளையும் இந்த கிழக்கு மண்ணிலிருந்து நிராகரிப்பதேயாகும்.
சிவனேசதுரை சந்திரகாந்தன்
தேசியத் தலைவர் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி