3/27/2014

| |

'வாக்கெடுப்பில் இருந்து இந்தியா விலகியிருக்கும்' : இந்தியப் பிரதிநிதி

'வாக்கெடுப்பில் இருந்து இந்தியா விலகியிருக்கும்ஐநாவின் மனித உரிமைகள் ஆணைக்குழுவில், இலங்கையின் இறுதிப் போரில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்து அமெரிக்கா தலைமையிலான நாடுகளால் கொண்டுவரப்படும் தீர்மானத்துக்கான வாக்கெடுப்பில் இருந்து தாம் விலகி இருப்பதாக இந்தியா அறிவித்தது.
வாக்கெடுப்புக்கு முன்னதான விவாதத்தின் போது உரையாற்றிய, மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கான இந்தியத் தூதுவர் திலிப் சின்ஹா அவர்கள், இந்த தீர்மானம் இலங்கையில் மனித உரிமைகளை மேம்படுத்துவதற்காகவும், நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்காகவும் மேற்கொள்ளப்படும் உள்நாட்டு நடவடிக்கைகளை ஊக்கப்படுத்துவதற்குப் பதிலாக அதனை சிக்கலாக்கிவிடும் என்பதால், இதற்கான வாக்கெடுப்பில் இருந்து இந்தியா விலகி இருப்பது என்று தீர்மானித்துள்ளதாகக் கூறினார்.
இலங்கையால் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்காக மேற்கொள்ளப்படும் முயற்சிகளுக்கு ஆதரவான பங்களிப்பை வழங்குவதற்குப் பதிலாக இந்த தீர்மானம் அவற்றின் மீது பாதகமான தாக்கங்களை ஏற்படுத்திவிடும் என்று இந்தியத் தூதுவர் குறிப்பிட்டார்.
ஒவ்வொரு நாட்டுக்கும், தனது நாட்டின் மனித உரிமைகள் நிலவரங்கள் குறித்து தேசிய பொறிமுறைகள் மூலம் நடவடிக்கைகளை எடுக்க வழிகள் இருக்கின்றது என்று இந்தியா நம்புவதாகவும், ஆகவே ஐநா கவுன்சிலின் முயற்சிகள், இலங்கை தானே தனது நாட்டில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து முழுமையான, சுதந்திரமான, நம்பகமான தேசிய மட்டத்திலான பொறிமுறை மூலம் புலனாய்வு செய்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை வழங்க அனுசரணையாக இருக்க வேண்டும் என்று இந்தியா எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
ஒரு நாட்டின் உள்நாட்டு விவகாரங்களில் மூக்கை நுழைக்கும் வகையிலான அணுகுமுறை என்பது தேசிய இறைமையையும், நிறுவனங்களையும் மதிப்பிழக்கச் செய்வதுடன், பாதகமான விளைவுகளையும் ஏற்படுத்திவிடும் என்று இந்தியா நம்புவதாகக் கூறிய அவர், ஆக்கபூர்வமான சர்வதேச ஊடாட்டத்தையும், ஒத்துழைப்பையும், விட்டு விலகிச் செல்வதற்கான எந்த நகர்வும், மனித உரிமைகளையும், அடிப்படை சுதந்திரத்தையும் பாதுகாப்பதற்கான ஐநா கவுன்ஸிலின் முயற்சிகளை குலையச் செய்துவிடும் என்றும் கூறினார்.
இந்திய தூதர் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் ஆற்றிய உரையை ஆங்கிலத்தில் இங்கு கேட்கலாம்.