தமிழ்த் தேசிய பண்பாட்டுப் பேரவையினரினர் பொலிஸாரின் துணையுடன் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கையில் யாழ்ப்பாணத்தில் செயற்பட்டுவந்த விபச்சார விடுதிகள் முற்றுகையிடப்பட்டதன் மூலம் தென்னிலங்கையைச் சேர்ந்த நான்கு பெண்கள் உட்பட்ட பதின்நான்கு பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் இருவேறு இடங்களில் இயங்கிவந்த விபச்சார நிலையங்கள் பொலிஸாரின் துணையுடன் முன்னாள் மாநகர சபை உறுப்பினரும் தமிழ்த் தேசிய பண்பாட்டுப் பேரவைத் தலைவர் நிசாந்தன் தலைமையிலான குழுவினரால் முற்றுகையிடப்பட்டுள்ளன.
யாழ்ப்பாணம், கோவில் வீதியில் செயற்பட்டுவந்த மசாஜ் நிறுவனம் என்ற பெயரில் செயற்பட்டு வந்த விபச்சார நிலையம் ஒன்று முற்றுகையிடப்பட்டபோது அங்கு சட்டவிரோத விபச்சார நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த தென்னிலங்கையைச் சேர்ந்த பெண்கள் நால்வரும் குறித்த நிலையத்தின் உரிமையாளரும் ஆண் ஒருவரும் பொலிஸாரால் கைதாகியுள்ளனர். குறித்த மசாஜ் நிறுவனத்தினை நிர்வகிப்பர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட மாநகர சபை உறுப்பினர் என்பது தெரியவந்திருக்கிறது. குறித்த நிறுவனத்தில் மேற்கொள்ளப்படும் சமூகவிரோத செயற்பாடுகள் தொடர்பில் பலரும் சுட்டிக்காட்டியிருந்த போதிலும் அவர் தொடர்பில் இதுவரையில் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அதேவேளை, அரியாலைப் பகுதியில் வீடு ஒன்றில் செயற்பட்டுவந்த விபச்சார நிலையம் ஒன்று முற்றுகையிடப்பட்டதில் அதிலிருந்த பெண்கள் ஐவரும் ஆண்கள் இருவரும் விடுதி உரிமையாளரும் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த விடுதியிலிருந்து வங்கி ஊழியர் ஒருவர் அவருடன் இருந்த மாணவி ஒருவருடன் மதிலால் தப்பி ஓடியதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கையில் யாழ்.மாவட்ட மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரனும் பங்கு கொண்டிருந்ததாக தமிழ்த் தேசியப் பண்பாட்டுப் பேரவைத் தலைவர் நிசாந்தன் தெரிவித்தார்.
கைது செய்யப்பட்டவர்கள் யாழ்.பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.