விஜி - பிரான்ஸ்
(கடந்த ஆண்டு யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற 41வது இலக்கிய சந்திப்பின் நினைவாக வெளியான "குவர்னிகா " இலக்கிய தொகுப்புக்காக பெண்ணிய செயற்பாட்டளரும் எழுத்தாளருமான விஜி அவர்களால் எழுதப்பட இக்கட்டுரை அதன் அவசியம் கருதி சர்வதேச பெண்கள் தினத்தினையொட்டி வாசகர்களுக்காக இங்கே பிரசுரமாகிறது)
("சீமொன் வெய்" (Simone Veil) அவர்களின் பெண்ணியவாதக் கருத்தியலை முன்வைத்து..)
கருக்கலைப்பு என்பது இவ்வுலக மானிட சமூகத்திற்கு புதியதொரு விடயம் அல்ல. மிக நீண்டகால வரலாற்றைக் கொண்டது. பல நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே பெண்கள் தம் வயிற்றில் உருவாகும் கருவை சிதைத்து விடுவதினூடாக கருக்கலைப்பினை மேற்கொண்டு வந்திருக்கிறார்கள். சமூக, பொருளாதார, பண்பாடு போன்ற பல்வித காரணிகள் ஏற்படுத்தும் நெருக்கடிகளினால் தாம் கருவுறுகின்ற சிசுக்களை ஈன்றெடுக்க முடியாத நிலைக்கு பெண்கள் தள்ளப்படுகின்றார்கள். ஆனால் இக்கருக்கலைப்பினை செய்கின்ற தருணங்களில் பெண்கள் பல நெருக்கடிகளை சந்திக்க நேரிடுகின்றது. குறிப்பாக மத நம்பிக்கையின் அடிப்படையில் கருக்கலைப்பு என்பது ஒரு பாவமான காரியமாக கருதப்படுகின்றது. அத்தோடு கலாச்சாரம், பண்பாடு எனும் சமூக அழுத்தங்களால், கருக்கலைப்பினை செய்யமுனைகின்ற பெண்களை சமூதாயம் பழித்தொதுக்குகின்றது. இந்த நிலையிலேயே பெண்கள் தம்மால் சுமக்கமுடியாத, விரும்பாத கருக்களை ரகசியமான முறையில் சிதைக்கும் நிலைக்குள்ளாக்கப்படுகின்றனர்.
கடந்த நூற்றாண்டு வரைக்கும் உலகின் அனைத்துவிதமான நாடுகளிலும் கருக்கலைப்பு என்பது மிகப்பெரும் பாவமாக பிரகடனப்படுத்தப்பட்டு இருந்ததோடு, சட்டத்தினாலும் தடைசெய்யப்பட்டதொன்றாகவே இருந்துவந்துள்ளது. எனினும் மக்கள் ஆட்சி முறைமைகளும், ஐனநாயக விழிப்புணர்வுகளும் ஏற்படுத்திய அரசியல் மாற்றங்கள் கருக்கலைப்பு என்பதன் அவசியம் குறித்த புரிதல்களுக்கு இட்டுச்சென்றுள்ளது. இன்று உலகின் பல நாடுகளில் கருக்கலைப்பு என்பது சட்டவிரோதமானது என்கின்ற நிலை மாற்றத்துக்குள்ளாகியுள்ளது. இவ்வாறான மாற்றத்திற்காக பல்வேறு நாடுகளில் உள்ள பெண்கள் பாரிய போராட்டங்களை நடாத்தியிருக்கிறார்கள். மதங்களுக்கெதிராகவும், ஆணாதிக்க கருத்துகளுக்கெதிராகவும் எழுதியும், போராடியுமே இந்த கருக்கலைப்புக்கான உரிமையை பெற்றுள்ளார்கள். அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளிலே தான் முதலில் இவ்வாறான மாற்றங்கள் நிகழ்ந்துள்ளது. இந்த வகையில் பிரான்சு நாட்டிலும் சுதந்திர கருக்கலைப்பு உரிமையைப் பெறுவதற்காக பெண்கள் நீண்டகாலமாக போராடி வந்துள்ளனர் என்பதை அறியக்கூடியதாக உள்ளது.
"கருக்கலைப்பு உரிமைக்கான பிரஞ்சுப் பெண்களின் போராட்டம்."
எல்லா நாடுகளையும் போன்று பிரான்சு தேசத்திலும் கருக்கலைப்பிற்கு எதிரான சமூக கலாச்சார நெருக்கடிகள் இருந்து வந்துள்ளது. பிரான்சு நாட்டில் சுதந்திரமான கருக்கலைப்பு பற்றிப் பேசுவதற்கும், அதை நடைமுறைப்படுத்துவதற்காகவும் பிரான்சு நாட்டுப் பெண்கள் பல போராட்டங்களை மேற்கொண்டிருந்தார்கள். இதற்கான போராட்டத்தில் பங்குகொண்ட பிரஞ்சுப் பெண்களில் முன்னணியில் நின்று செயல்பட்டவர் சீமோன் வெய் (Simone Veil) எனும் பெண்ணாகும்.
யூத இன பெற்றோருக்கு 13-07-1927இல் மகளாகப் பிறந்தவர் சிமோன் வெய் அவர்கள். இவரது தந்தை புகழ் மிக்க கட்டிடக்கலை நிபுணர்களில் ஒருவராக இருந்தார். தனது பிள்ளைகள் மீது மட்டுமல்லாது பிற குழந்தைகள் மீதும் அன்பும் பாசமும், இரக்கமும் கொண்டவர் சீமொன் வெய் அவர்களின் அன்பிற்குரிய தாயார். 1930 களில் ஐரோப்பாவில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியினால் ஏற்பட்ட பஞ்சமானது பிரான்சு தேசத்தையும் தீண்டியது. பிரஞ்சு வாழ் ஏழை மக்கள் மிகவும் துன்பத்திற்குள்ளானார்கள். குழந்தைகளை வளர்ப்தற்கே பெற்றோர்கள் திகைத்து நின்றகாலம் அது. பஞ்சத்தில் வாடிய சில குடும்பத்து பிள்ளைகளோடு தான் பெற்ற நான்கு குழந்தைகளையும் சேர்த்து வளர்த்து வந்தவர் சீமொன் வெய் அவர்களின் தாயார். இவ்வாறான குண இயல்பைக் கொண்ட பெற்றோர்களின் மகளாக பிறந்த சீமொன் வெய் 'அவர்களுக்குள்' சமூகத்தின் மீதான அக்கறை துளிர்ப்பதும் இயல்பானதுதானே.
1939 ம் ஆண்டு நிகழ்ந்த இரண்டாம் உலகமகாயுத்தத்தின் விளைவுகளினால் சில நாடுகளும் நாட்டு மக்கள்களும் பாதிக்கப்ட்டிருந்தார்கள் என்பது உண்மையே! ஆனால் ஒரு இன மக்கள் மட்டும் தேடித் தேடி அழித் தொழிக்கப்பட்டார்கள். இரண்டாம் உலகமகா யுத்தமானது யூத இன மக்களையும் அழித்தொழிக்கும் ஒரு யுத்தமாக வியாபித்தது. ஜேர்மன் நாட்டு நாசிப்படைகளினால் யூத இன மக்கள் வேட்டையாடப்பட்டார்கள். பிரஞ்சு நட்டிலும் ஜேர்மனியர்களால் ஆக்கிரமிக்கப்பட்ட மண்ணில் வாழ்ந்த யூத இன மக்களை இனம்கண்டு கைதுசெய்தார்கள். பிரான்சு தேசத்தில் நாசிகளால் கைப்பற்றப்பட்ட யூதக் குடும்பங்களில் சீமோன் வெய் அவர்களின் குடும்பமும் ஒன்றாக இருந்தது.
யூத இன மக்களை அழித்தொழிக்கும் நோக்கத்தோடு 1943 இல் பிரான்சின் தென் கிழக்கு பகுதியில் உள்ள நீஸ் (Nice) எனும் நகரமும் நாசிப்படைகளினால் சுற்றி வளைக்கப்பட்டது. தனது இலக்கிய பேராசிரியரின் வீட்டில் படித்துக்கொண்டிருக்கும்போது 30-03-1944 இல் 16 வயதையுடைய சீமோனும் ஏனைய யூதமக்களுடன் கைதுசெய்யப்பட்டார் அவரது குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அனைவரும் கைதுசெய்யப்பட்டார்கள். எல்லோரும் வெவ்வேறாக பிரித்தெடுக்கப்பட்டார்கள். சீமொன் வெய் அவர்களின் சகோதரியான டெனிஸ் (Denise) என்பவர் யூத இன அழிப்பு நடவடிக்கைக்கு எதிரான இயக்கத்தில் இணைந்து செயல்பட்டவர். பிற்பாடு அவரும் நாசிகளால் கைது செய்யப்பட்டார். அவரது தகப்பனும் சகோதரனும் கைதுசெய்யப்பட்டதும் அவர்களுக்கு என்ன நடந்ததென்பதும் இதுவரையில் சீமொன் வெய் அவர்களுக்கு தெரியாத ஒரு நிரந்தர துயரமாகவே இருக்கின்றது. சீமொன் வெய் கைது செய்யப்பட்டு இரண்டு கிழமைக்குப் பிற்பாடு (13 April 1944) அவரது தாயாரும் பிறிதொரு சகோதரியுமான மதலின் (Madeleine) அவர்களும் ஒன்றாக பிரான்சின் புறநகர் பகுதியான றான்சியில் (Drancy) தடுத்து வைக்கப்பட்டு பிற்பாடு ஜேர்மனியிலுள்ள நாசிகளின் முகாமுக்கு ( Auschwitz) அனுப்பப்பட்டனர். இந்த முகாமில் தான் மிகக் கொடூரமான யூத இனப்படுகொலைகள் நடைபெற்றுள்ளது.
"18 வயதுக்கு உட்பட்ட யூத இனத்தவர்கள் எல்லோரையும் அழித்தொழிக்கும் வேலையை செய்வதற்காக பிரித்தெடுக்கும்போது ஒரு கருணையுள்ள ஜேர்மன் இராணுவ வீரனால் நான் உயிர் தப்பினேன். பிரஞ்சு மொழி தெரிந்த அந்த இராணுவ வீரன் எனக்கு 18 வயது கடந்து விட்டதாக கூறும்படி ஆலோசனை வழங்கினார். 18 வயதைத் தாண்டியதாக பொய் சொன்ன காரணத்தால் தான் நான் இன்று உயிருடன் இருக்கின்றேன்." என்பதாக “வாழ்க்கை” எனும் தனது சுயசரிதை நூலில் குறிப்பிட்டுள்ளார்.
தாய், தந்தை, சகோதரன் மூவரையும் இழந்தநிலையில் சீமோன் உட்பட இரண்டு சகோதரிகளும் பிரான்சுக்கு திரும்பியிருந்தார்கள். உயர்கல்விப்பரிட்சையில் சீமோன் வெய் சித்தியடைந்து விட்டார் என்கின்ற மறுநாளேதான் அவரது கைதும் இடம்பெற்றிருந்தது. ஆகவே மரணத்தை வென்றுவந்த சோதனைகளையும், தாய், தந்தை மற்றும் சகோதரனையும் இழந்து நின்ற வேதனைகளையும் கடந்து தனது உயர்கல்வியை தொடர்ந்தார். பல்கலைக்கழக பட்டப்படிப்பை சட்டத்துறையிலும், அரசியல் விஞ்ஞானத்துறையிலும் மேற்கொண்டார். பின்னர் சட்டத்தரணியாக சிலகாலம் பணியாற்றிவிட்டு, நீதித்துறையில் பல உயர் பதவிகளில் பணியாற்றியுள்ளார். தொடர்ந்து அரசியலுக்குள் நுழைந்த சீமோன் வெய் அவர்கள் 1974 ஆம் ஆண்டு சுகாதார அமைச்சராக பணியாற்றினார். இந்தவேளையில்தான் அன்று மிகவும் தீவிரமாக இருந்த பெண்களின் பிரச்சனையான “சுதந்திர கருக்கலைப்பு” என்கின்ற சட்டத்தை கொண்டுவர பெரும் பிரயத்தனங்களில் இறங்கினார்.
1942 களில் பிரஞ்சு நாட்டிலும் கருக்கலைப்பு என்பது ஒரு மரணதண்டனைக்குரிய குற்றமாகவே காணப்பட்டது. ஆனால் உலகின் எல்லாப்பகுதியையும் போல இங்கும் அன்றாடம் கருக்கலைப்பு நடந்துகொண்டுதான் இருந்தது. பெண்கள் தங்களது விருப்பத்துக்கு மாறாக உருவாகிய கரு, பாலியற் பலாத்காரத்தில் உருவாகிய கரு, பொருளாதார ரீதியில் குழந்தைகளை அதிகம் பெற்றுக்கொள்ள முடியாத பெண்கள், சிறிய வயதில் உருவாகிய கரு என்று பல்வகைப்பட்ட கருக்கலைப்புகள் தொடர்ந்தன. ஆனால் இக்கருக்கலைப்புகள் எந்தவித மருத்துவ உதவியும் இன்றி, பாதுகாப்பின்றி, சுகாதரமின்றி மிகக் கொடுமையான சூழலில் நடைபெற்றுக்கொண்டு வந்தன. இக் கருக்கலைப்பு முறைகளைப் பார்த்தோமானால் கடுமையான வேலைகளை செய்வதன் ஊடாகவும், பெரிய சுமையை தூக்குதல் மூலமாகவும், சில வகையான மூலிகைகளை மருத்துவமாகக் கொண்டும், கருப்பைக்குள் சில ஆயுதங்களை கருப்பைவரை இட்டும், அடிவயிற்றில் நோகப்பண்ணுதல் போன்ற கொடுமையான முறைகளை பின்பற்றியும் கருக்கலைப்புகள் மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளது. இந்த முறைகளினால் பெண்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். சிலர் நோய்வாய்ப்பட்டனர், கருப்பை பழுதடைதல், மன உழைச்சல், இந்த வகையான கருக்கலைப்பின் பின்னர் சில பெண்களால் குழந்தை பெற முடியாத தன்மை ஏற்படுதல், பெண்களில் பாலியல் உறுப்புகள் காயப்படுத்தப்படுதல், சிலவேளை பெண்கள் இறக்க வேண்டிய நிலைமையும் ஏற்பட்டிருக்கின்றது. இவ்வாறான அபாயகரமான பிரச்சனைகளை எதிர்கொண்டபோதும் பாதிக்கப்படும் இவ்வாறான பெண்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த முடியாத நிலையே 1955 வரை நிலவியது.
இந்தநிலையில்தான் முதன் முதலாக 1955 இல் தாயின் உயிருக்கு ஆபத்து இருக்கும் பட்சத்தில் கருக்கலைப்பை மருத்துவர்கள் மேற்கொள்ளலாம் என்கின்ற சட்டத்தை பிரான்சு நாட்டு அரசாங்கம் அமுல்படுத்தியது. இச்சட்ட அமுலாக்கமானது அன்றைய பெண்ணியவாதிகளுக்கு தொடர்ச்சியாக போராடும் உத்வேகத்தையும் கொடுத்தது. பின்னர் மெதுமெதுவாக நகர்ந்த இந்த கருக்கலைப்பு பற்றிய விழிப்புணர்ச்சிப் போராட்டம் 1970 களில் பிரபல்யம் அடைந்தது. அக்காலகட்டத்தில் எழுத்தாளர்கள், கலைஞர்கள் என பல பெண் படைப்பாளுமைகள் இணைந்து இக்கருக்கலைப்புக்கு ஆதரவாக ஒரு அறிக்கையை வெளியிட முன்வந்தனர். கருக்கலைப்பு குறித்த அவ்வறிக்கையானது பெண்ணியவாதியான சீமோன் தி பூவுவார் (Simone de Beauvoir) அவர்களாலேயே தயாரிக்கப்பட்டது. 343 பெண்கள் கையொப்பமிட்ட அவ்வறிக்கை, பிரான்சில் வெளிவருகின்ற முக்கிய சஞ்சிகைகளில் ஒன்றான ‘நூவல் ஒப்சவார்த்தர்’ (Nouvel observateur) இல் 1971 இல் வெளியிடப்பட்டது. அந்த அறிக்கை பின்வருமாறு:-
“ஒரு மில்லியன் பெண்கள் ஒவ்வொரு வருடமும் கருக்கலைப்பை செய்கின்றார்கள். கருக்கலைப்பானது, மருத்துவ சூழலில் பாதுகாப்பாக செய்யவேண்டியது. ஆனால் இங்குள்ள கருக்கலைப்புக்கு எதிரான சட்டதின் காரணமாக இப்பெண்கள் மிகவும் ஆபத்தான சூழ்நிலைகளில், மோசமான வழிமுறைகளில் இக் கருக்கலைப்பை மேற்கொள்கின்றனர். அது மட்டுமன்றி இது சம்பந்தமாக எந்த சூழலிலும் அவர்களால் வாய்திறக்க முடியாமலும் உள்ளது.”
“நானும் இந்தப் பெண்களில் ஒருத்திதான். அதாவது நானும் கருக்கலைப்பை செய்தவள் என்பதை இத்தால் அறியத்தருகின்றேன்”
“நாங்கள் சுதந்திரமாக கருக்கலைப்பை செய்வதற்கான உரிமையை வழங்குங்கள்”
“நாங்கள் கருத்தடை செய்துகொள்வதற்கான இலகுவான வழிமுறைகளையும் சுதந்திரத்தையும் வழங்குங்கள்” எனும் கோரிக்கைகள் உள்ளடங்கியதாக அவ்வறிக்கை அமைந்திருந்தது.
இதன்கீழ் கையொப்பமிட்டிருந்த 343 பெண்களும் தாங்களும் கருக்கலைப்பை செய்தவர்கள் என்பதை அவ்வறிக்கையூடாக பகிரங்கப்படுத்தியும் இருந்தார்கள்.
இந்த நிகழ்வானது மேற்படி போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் மீது பெரும் விமர்சன அலைகளை ஏற்படுத்தியது. மதவாதிகளும், கலாச்சார காப்பாளர்களும் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் மீது பெரும் கண்டனங்களை வெளிப்படுத்தினார்கள் குற்றச்சாட்டுக்களையும், சேறுபூசல்களையும் அவர்கள் எதிர்கொள்ள நேர்ந்தது. குறிப்பாக “சார்ளி வாரம்” (Charlie Hepdo) என்கின்ற பத்திரிகையில், "இந்த 343 வேசைகளின் கருக்கலைப்பு அறிக்கைக்கு கருவைகொடுத்தவர் யார்?" என்கின்ற முன்பக்க வாசகத்துடன் வெளிவந்தது. அதன் பின்னர் மேற்படி அறிக்கைக்கு "343 வேசைகள்" என்கின்ற பழிச்சொல்லே பெயராகிப்போனது. இதைத்தொடர்ந்து மேற்படி போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களுக்கு சார்பாக பிரான்சு நாட்டின் பல திசைகளில் இருந்தும், ஐரோப்பிய நாடுகளில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பெண்கள் ஆதரவு தெரிவிக்க முன்வந்தனர். அதைத்தொடர்ந்து 4000 பெண்கள் வரை ஒன்றிணைந்து கருக்கலைப்பு உரிமை கோரி பிரான்சின் தலைநகரான பாரிசில் பெரும் ஆர்ப்பாட்ட நிகழ்வையும் மேற்கொண்டனர்.
கருக்கலைப்பு உரிமை கோரி பிரன்சு நாட்டில் ஏற்பட்டு வந்த ஆதரவு அலையை பயன்படுத்தி சீமோன் தி பூவுவார் (Simone de Beauvoir) தலைமையில் “தெரிவு” (Choisir) என்கின்ற ஒரு அமைபபு உருவாக்கப்பட்டது. சீமொன் தி பூவுவாருடன் இணைந்து ஜிசெல் கலினியும் (Gisèl Halini) (இவர் துனிசிய நாட்டு பூர்வீகத்தைக் கொண்டவர், ஒரு சட்டத்தரணி, எழுத்தாளர், பெண்ணியவாதியுமாகும்).இந்த அமைப்பினை உருவாக்குவதில் பெரும்பங்கு வகித்தார். “தெரிவு” அமைப்பானது முக்கியமாக கருக்கலைப்பு செய்கின்ற பெண்களுக்கு வழங்கப்படுகின்ற தண்டனைகளுக்கு எதிராக போராடுவதற்காகவே உருவாக்கப்பட்டது. இந்த அமைப்புத்தான் பிரான்சில் கருக்கலைப்புக்கு பிரசித்திபெற்ற வழக்கான ‘பொபினி வழக்கு-1972’ (Procès de Bobigny) இல் குற்றவாளிகள் எனக்கருதப்பட்டோருக்கு ஆதரவாக வழக்காடி வெற்றியும் கண்டது.
(பொபினி வழக்கு:- ஒரு 16 வயதான இளம் யுவதி ஒருத்தி தன்னுடைய பாடசாலை மாணவன் ஒருவனால் பாலியற் பலாத்காரம் செய்யப்பட்டதால் கற்பமடைந்தாள். அந்தக் கற்பத்தை அழிப்பதற்காக முயன்றவேளையில், அவளது தாயும், தாயின் நண்பிகளும், உரிய யுவதியும் கருக்கலைப்பு செய்தமைக்காக கைதுசெய்யப்பட்டனர்.)
-1973 இல் பிரான்சு மருத்துவர்கள் ஒன்றிணைந்து கருக்கலைப்பு பற்றிய உண்மைநிலையை பகிரங்கப்படுத்துவதற்காக ஒரு அறிக்கையினை வெளியிட்டனர். அதில் 331 மருத்துவர்கள், தாங்கள் பெண்களுக்கு கருக்கலைப்பை மேற்கொண்டவர்கள் என்று அறிவித்தார்கள்.
பிரன்சு நாட்டுப் பெண்களின் அன்றைய முக்கிய பிரச்சனைக்குரியவிடயமாக கருக்கலைப்பு இருந்தபோதுதான் சீமோன் வெய் (Simone Veil) அவர்கள் சுகாதர அமைச்சராக பொறுப்பேற்றிருந்தார். பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் சம்பந்தமாக அக்கறைகொண்டிருந்த சிமோன் வெய் அவர்கள் இச் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கருக்கலைப்பு உரிமையை சட்டமாக்க முனைந்தார். இவருடைய பிரேரணை கடும் விவாதங்களையும், வாக்குவாதங்களையும் ஏற்படுத்தியது. சீமோன் வெய் மீது கூக்குரல்களும், அவதூறுகளும் அள்ளிவீசப்பட்டன. இருந்தும் இடதுசாரிக்கட்சியும், தீவிர இடதுசாரிக் கட்சியும், அவரது கட்சியான ஐனநாயகத்துக்கும் சுதந்திரத்துக்குமான பிரான்சு ஒன்றியத்தில் கணிசமானவர்களும்; இவருக்கு சார்பாக நின்றதினால் இச்சட்டமூலத்தை அவரால் அமுல்படுத்த முடிந்தது எனலாம். இதற்கான இறுதி பாரளுமன்ற வாக்கெடுப்பில் 87 அதிக வாக்குகளாலும், செனட்சபையில் 97 அதிக வாக்குகாளாலும் இச்சட்டம் 1974 டிசம்பர் மாதம் நிறைவேற்றப்பட்டது. 1975 இல் இருந்து அச் சட்டம் அமூலுக்கு கொண்டுவரப்பட்டது. இச்சட்டத்திற்கு “வெய் சட்டம்” (La loi Veil) என்றே அன்றிலிருந்து அழைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
பின்னர் காலத்திற்கு காலம் இச்சட்டமானது செழுமைப்படுத்தும் வகையில் பல மாற்றங்களுக்கும், திருத்தங்களுக்கும் உள்ளாக்கப்பட்டு வருகின்றது.
இன்று பிரான்சில் பெண்கள் தாங்கள் விரும்பும் பட்சத்தில் கருவைக்கலைக்கும் உரிமை அவர்களுக்கு உண்டு. அதற்கு எந்தவித எதிர்ப்புகளும் இருக்கமுடியாது. 18 வயதுக்குட்பட்ட பெண்களுக்கு கருக்கலைப்பு செய்வதற்கு பெற்றாரின் அனுமதி கூட பெறவேண்டும் என்கின்ற அவசியமும்; இல்லை. அவ் இளம்பெண்ணின் விருப்பப்படி அவளுடைய இரகசியங்கள் பாதுகாக்கப்படும். ஆனால் கருக்கலைப்பு செய்கின்ற நேரத்தில் ஒரு முதியவர் அவளுக்கு துணையாக இருக்கவேண்டும் என்பது சட்டம். மேலும் கருக்கலைப்பானது குழந்தை உருவாகி 12 வாரங்களுக்குள் செய்யவேண்டும். மருத்துவரீதியில் மட்டும்தான் 12 வாரங்களையும் தாண்டி கருக்கலைப்பை செய்யமுடியும். எந்தவகையான கருக்கலைப்பாக இருந்தாலும் அதற்கான செலவை 100வீதமும் அரசே பொறுப்பேற்கின்றது.
பெண்களுடைய உடல் பெண்களுக்கே சொந்தமானது, அது குறித்த எந்த முடிவையும் அவர்கள் மட்டுமே எடுக்கமுடியும் என்கின்ற உரிமையை தாம் பெற்றதாக கருதிப் பெண்ணியவாதிகள் பெருமைப்படுகின்றார்கள். பிரான்சு நாட்டின் பெண்களின் உரிமைக்கான போராட்ட வரலாற்றில் 'சுதந்திர கருக்கலைப்புக்கான' உரிமையை ;உறுதிப்படுத்தும் 'வெய் சட்டமானது' பெண்களைப் பொறுத்தவரையில் ஒரு வரலாற்றுச் சாதனை என்றே கூறலாம்
இன்று இலங்கையை எடுத்துக்கொண்டால், இலங்கையில் இன்னும் கருக்கலைப்பு என்பது சட்டரீதியிலும் சரி, சமூக ரீதியிலும் சரி ஒரு குற்றமாகவே கருதப்படுகின்றது. இருந்தும் இலங்கையிலும் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பெண்கள் கருக்கலைப்பை செய்துகொண்டுதான் இருக்கிறார்கள் நாளாந்தம் சுமார் 1000 பேர் சட்டரீதியற்ற முறையில் கருக்கலைப்பில் ஈடுபடுவதாக சுகாதார அமைச்சர் பீலிக்ஸ் பெரேராவின் உரை ஒன்று குறிப்பிடுகிறது. இலங்கையில் இன்றும் சட்டரீதியில் அங்கீகரிக்கப்படாததால், பெண்கள் திருட்டுத்தனமாகவும், மறைமுகமாகவுமே கருக்கலைப்பை மேற்கொள்கின்றனர். இவ்வாறு கருக்கலைப்பை மேற்கொள்வதால் பெண்கள் தமது உடல்ரீதியாக பாரிய பின்விளைவுகளை சந்திக்க நேரிட்டபோதிலும் மௌனமாகவே இருக்கவைக்கப்பட்டுள்ளனர். இவ்வாறான மருத்துவ வசதியின்றி செய்கின்ற கருக்கலைப்பானது பெண்களை இறப்புவரை இட்டுச்செல்கின்றது. இதற்கு சான்றாக மிக அண்மைக்காலத்தில் சங்கானையில் முறையின்றி கருக்கலைப்பு செய்தபோது ஏற்பட்ட இரத்தப்பெருக்கினால் இறந்த பெண் ஒரு சிறந்த உதாரணம். அதேபோன்று கடந்த ஆண்டு வவுனியாவில் நடந்த சட்டவிரோத கருக்கலைப்பு சம்பந்தமாக வெளிவந்த கீழ்வரும் செய்தி கருக்கலைப்புக்கான சட்ட அங்கீகாரத்தின் அவசியத்தை விளக்கி நிற்கின்றது. “வவுனியா செட்டிக்குளம் பிரதேசத்தில் சட்டவிரோத கருக்கலைப்பில் ஈடுபட்டார் என்ற சந்தேகத்தின் பெயரில் 65 வது பெண் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். இவர் கிராமிய பிரசவ மருத்துவிச்சியாக செயற்பட்டு வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அண்மையில் வவுனியா வைத்தியசாலையில் அதிக இரத்தப்பெருக்கு காரணமாக மரணமடைந்த 39 வயது பெண் ஒருவரது மரணம் சம்பந்தமான விசாரணைகளின் போதே மேற்படி பிரசவ மருத்துவிச்சியினால் அவருக்கு சட்டவிரோத கருக்கலைப்பு செய்யப்பட்டமை தெரியவந்துள்ளது.” இதுபோன்ற செய்திகள் நாளாந்தம் வெளிவந்தவண்ணமே உள்ளன.
இலங்கையில் பெண்கள் நிலையை நோக்கும் இடத்து, பெண்களுக்கான வாக்குரிமை 1931 இலேயே கிடைத்துவிட்டது. ஆனால் உலகின் பல்வேறு நாடுகளில் உள்ள பெண்கள் தமது வாக்களிக்கும் உரிமைக்காக இலங்கைப் பெண்களைவிட மிக நீண்ட காலம் காத்திருக்கவேண்டியிருந்தது. உலகத்திலேயே முதலாவது பெண் பிரதமரை தேர்ந்தெடுத்த சிறப்புப் (சிறிமாவோ பண்டாரநாயக்கா - 1960) பெருமைகொண்டதாகவும் போற்றப்பட்டு வருகிறது எமது நாடு. இலங்கைவாழ் பெண்களின் திருமண வயது 18, பெண்களுக்கான விவாகரத்து உரிமை, இவற்றுக்கெல்லாம் மேலாக பெண்களின் கல்வி அறிவு வீதம் 90. இப்படியெல்லாம் பெண்களின் நிலைமை குறிப்பிடத்தக்க அளவு முன்னேற்றம் கண்டிருக்கின்ற இலங்கையில்தான் பெண்களுக்கு கருக்கலைப்புக்கான உரிமையை பெறுவது இன்னும் சாத்தியமாகவில்லை.
குறிப்பாக எமது இறுக்கமான குடும்ப அமைப்பு முறை, மத நம்பிக்கைகள் செலுத்தும் செல்வாக்கு, கலாச்சார பண்பாட்டு இறுக்கம், மற்றும் இன்னும் மீளமுடியாமல் இருக்கின்ற சில மூட நம்பிக்கைகள் போன்ற பல காரணங்களைக் கூறலாம்.
இலங்கையில் யுத்தத்தின் விளைவுகளாக அதிகரித்திருக்கும் விதவைகள், தனித்து வாழும் பெண்கள், இடப்பெயர்வுகள், வெளிநாட்டுப் பயணங்கள் காரணமாக பிரிந்து வாழும் குடும்பங்கள், ஆதரவற்ற சிறுமிகள், உல்லாசப்பயணிகளின் பாலியல் துஸ்;பிரயோகங்கள் என்று பல்வேறு காரணங்களினால் பெண்கள் பலாத்காரம் மூலம் அல்லது நிர்ப்பந்தத்தின் காரணமாக கருவுற வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகின்றார்கள். இவர்கள் தமது எதிர்கால வாழ்வுக்கு இக்கருக்களை அழிப்பதே அவர்கள் முன் உள்ள ஒரே தெரிவாகும். ஆனால் சட்டரீதியாக இது மறுக்கப்பட்டிருப்பதால் இவர்கள் மிகவும் இக்கட்டான சூழ்நிலைக்கு தள்ளப்படுகின்றார்கள். இவ்வாறான பெண்களை எமது சமூகம் ஒதுக்கி வைப்பதற்கு தயங்குவதும் இல்லை. இலங்கையைப் பொறுத்தவரை கருக்கலைப்பு சட்டரீதியானதொன்று அல்ல என்றபோதும், தனியார் மருத்துவமனைகளில் மிக சாதாரணமாக கருக்கலைப்புகள் நடைபெற்று வருவது எல்லோரும் அறிந்ததே. ஆகவே பணமிருக்கின்ற மத்தியதரவர்க்க குடும்பங்களுக்கு இது ஒன்றும் பெரியபிரச்சனையாக இருக்கமுடியாது. அரசாங்க மருத்துவமனை நாடும் ஏழை மக்களுக்கே இது பெரும் பிரச்சனையாக இருந்து வருகின்றது.
எமது சமூகம் கருக்கலைப்பை சட்டரீதியானதொன்றாக ஏற்றுக்கொள்ள முடியாத மன நிலைக்கு ‘கற்பு’ என்கின்ற கற்பிதமும் முக்கியகாரணமாகும். திருமணத்திற்கு முன் உடலுறவு, கணவன் அல்லாத வேறு ஆணுடனான உடலுறவு என்பவற்றை தடுப்பதற்கு எமது சமூகம் கற்பு என்கின்ற கற்பிதத்தை ஒவ்வொரு பெண்ணின் மனதிலும் ஆழப்பதித்துள்ளது. மாறாக இந்த வரையறைகளை மீறும் பெண்களுக்கு, கருக்கலைப்பை இலகுவாக செய்யமுடியாத நிலையை ஒரு தண்டனையாகவே எமது சமூகம் கருதுகின்றது. ஆகவே கருக்கலைப்பை ஏற்றுக்கொள்ளும் மனநிலை எமது சமூகத்திடம் இன்னும் இல்லை.
மதங்களைப் பொறுத்தவரை எல்லாமதங்களுமே கருக்கலைப்பை மறுக்கின்றன. ‘உயிரை ஆக்குவதும், அழிப்பதும் இறைவனது பணி, அவன் உருவாக்கிய உயிரை அழிக்க எவருக்கும் உரிமை கிடையாது” என்கின்ற கருத்துப்படவே எல்லா மதங்களும் கூறுகின்றன. ஆகவே எந்த மதங்களும் பெண்களை, பெண்களது தேவைகளை புரிந்துகொண்டவை அல்ல. இந்த மதத்தின் கொடுமைதான் அண்மையில் கத்தோலிக்க நாடான அயர்லாந்தில் சவீதா என்கின்ற இந்தியப் பெண் ஒருவருக்கு, கருக்கலைப்பை செய்யாவிடில் அப்பெண் இறக்க நேரிடும் என்றிருந்த போதிலும், “கருக்கலைப்பு ஒரு குற்றச்செயல்” என்கின்ற காரணத்தால் அப்பெண் இறக்க நேரிட்ட கொடுமையும் நிகழ்ந்திருக்கின்றது.
மேலும் இலங்கையில் பெண்களின் இந்த அவலநிலையை புரிந்துகொண்ட சிலரது முயற்சியும் அதாவது கருக்கலைப்பு உரிமையை சட்டமாக்கும் முயற்சிக்கும் இந்த மத அமைப்புகளே எதிர்த்து நிற்கின்றன. போனவருடம் எடுக்கப்பட்ட இம்முயற்சியை இலங்கை கத்தோலிக்க சபை, பௌத்த குருமார்களுடன் இணைந்து எதிர்ப்புகளை மேற்கொண்டன. “பிறப்பு மறுக்கப்பட்ட குழந்தைகளின் ஞாயிறு” என கத்தோலிக்கசபை தமது எதிர்ப்பை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.
இலங்கையைப் பொறுத்தவரை இன்று இலங்கையில் அதிகரித்துவரும் கருக்கலைப்பை கருத்தில் கொண்டும், பெண்கள், சிறார்கள் மீதான பாலியல் பலாத்கார அதிகரிப்பை கருத்தில் கொண்டும், சட்டரீதியற்ற முறையில் நடைபெறும் கருக்கலைப்பினால் பெண்களுக்கு ஏற்படும் உடல், உள பாதிப்புகளைக் கருத்தில் கொண்டும் கருக்கலைப்பு உரிமையை சட்டமாக்க வேண்டும். பெண்கள் தங்களது உடலை, எதிர்காலத்தை தாங்களே தீர்மானிக்க கூடிய வல்லமை பெற்றவர்களாக மாறுவதற்கு இது மிகவும் அவசியமாகும்.
மேலும் கருக்கலைப்பு உரிமை என்பது பெண்களின் சுதந்திர உரிமையான போதிலும், கருக்கலைப்பை செய்கின்ற பெண்களுக்கு ஏற்படும் உடல் உபாதைகள், மன உழைச்சல் என்பவற்றையும் கருத்தில் கொண்டாகவேண்டும். எவ்வளவு மருத்துவ அபிவிருத்தியடைந்த நாடாக இருந்தாலும் இக்கருக்கலைப்பில் பெண் உடல் பாதிக்கப்படுகின்றது என்கின்ற மருத்துவ உண்மையை மறைக்கமுடியாது. ஆகவே கருக்கலைப்பு உரிமை பெண்களுக்கு எவ்வளவு முக்கியமோ அதைவிட கருத்தடை செய்வதற்குரிய உரிமையும் முக்கியமாகும், குழந்தை ஒன்றை எப்போது, எத்தனை பெறுவது, யாருடன் பெறுவது என்பதையும் அல்லது பெறாமல் இருக்கும் விருப்பத்தையும் நிறைவேற்ற இந்த கருத்தடை வழிமுறைகளை பெண்கள் அறிந்துவைத்திருப்பது மிக அவசியமாகின்றது. மற்றும் பாடசாலைகளில் உயர்தர வகுப்புகளிலேனும் பாலியல் பாடங்கள் தொடங்கப்படுவதும் அவசியமாகும். அதேநேரம் கருத்தடை செய்வதற்கான வழிமுறைகள் பற்றியும் மாணவப் பருவத்தில் இருந்தே அறிவுறுத்தலும், அதன் பயன்பாடு பற்றிய விளக்கங்களும்; பயிற்றுவிக்கப்பட வேண்டும். கருத்தடை செய்வதற்குரிய எளிய வழிமுறைகளும், அது பற்றிய அறிவை பரப்புதலுமே எதிர்காலத்தில் கருக்கலைப்பை குறைப்பதற்கான ஒரே வழியாகவும் இருக்கமுடியும்.
மேலும் கருவொன்றை சுமப்பதற்கு ஒரு பெண் தயாரற்ற நிலையில், அல்லது விருப்பமில்லாத நிலையில் அப்பெண் ஒரு குழந்தையை பெறுவதென்பது, அப்பெண்ணுக்கோ, வெளிவரும் குழந்தைக்கோ, அல்லது அச் சமூகத்திற்கோ எந்தவிதத்திலும் ஆக்கப+ர்வமானதொன்றாக இருக்கமுடியாது. ஆகவே இன்று இலங்கையில் இருக்கின்ற கருக்கலைப்பு சட்டமான, ‘தாயின் உயிருக்கு ஆபத்து எனும் போது மட்டுமே மருத்துவர்கள் கருக்கலைப்பை செய்யலாம்’ என்கின்ற சட்டத்தை திருத்தி, பெண்கள் தாங்கள் விரும்புகின்றபோதே குழந்தைகளை பெற்றுக்கொள்ள முடியும் என்பதற்கமைய சுதந்திர கருக்கலைப்பு உரிமையை இலங்கையில் சட்டமாக்கவேண்டும். இந்த சட்டமாக்கலுக்காக போராடவேண்டியது பெண்களின் முன்னுள்ள பாரிய பொறுப்பு மட்டுமல்ல, சமூக அமைப்புகள், சீர்திருத்தவாதிகள், அரசியல் வாதிகள் என்று அனைவரினதும் பொறுப்பாகும்.