3/25/2014

| |

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு புத்துசாதுரியமாக செயற்படும்படி???????????

பத்திரிகைச் செய்தி
தந்தை செல்வாவின் கொள்கைக்கு அமைய தனி ஒரு கட்சியை தமிழர் விடுதலைக் கூட்டணி இத்தேர்தலில் ஆதரிக்க முடியாது
- வீ. ஆனந்தசங்கரி,
sanagaryதந்தை செல்வாவின் பெயரைச் சொல்லி எதையும் செய்யலாம் எனச் சிலர் எண்ணுகிறார்கள்! அவரின் பெயரால் செய்யச் சொல்லும் எல்லாவிடயமும் அன்னாரின் கொள்கையுடன் ஒத்துப் போவதாக இருக்க வேண்டும். 
தமிழினத்தை ஒற்றுமைப்படுத்த தந்தை செல்வா, அமரர்கள் அமிர்தலிங்கம், சிவசிதம்பரம் ஆகியோர் எடுத்த முயற்சியின் பலனே தமிழர் விடுதலைக் கூட்டணி உதயமானது. கூட்டணி உருவாகியது மட்டுமல்ல தந்தை அவர்கள் தனது தலைவர் பதவியை அமரர்கள் தொண்டமான் மற்றும் ஜ.Pஜீ பொன்னம்பலம் ஆகியோருடன் பகிர்ந்துகொண்டு தனது இறுதிமூச்சுவரை தமிழர் விடுதலைக் கூட்டணியிலேயே இருந்து மறைந்தார். அன்னாரின் பெயரால் அமைக்கப்பட்ட 60 அடி உயரமான நினைவுத் தூபி உதயசூரியன் சின்னத்தையே இன்றும் தாங்கி நிற்கிறது. 
மலையக மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் பல. தந்தை அவர்கள் அவர்களின் பிரச்சனைகளை முன்வைத்தே தமிழரசுக் கட்சியை உருவாக்கினார். அவர்களுக்குள் உள்ள வேற்றுமை களையப்பட்டு ஒற்றுமை நிலைநாட்டப்படவேண்டும் என்பதில் தந்தை செல்வா தன் இறுதிமூச்சுவரை விரும்பியிருந்தார். அதைவிடுத்து இன்று பல கட்சிகளாக பிரிந்து செயற்படும் - இந்திய வம்சாவளி மக்கள் மத்தியிலுள்ள கட்சிகளை மேலும் பிரிவடையச் செய்ய - ஒரு கட்சியினரை மட்டும் ஆதரிப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரில் சிலர் கூறி வருவது வேதனையை அளிப்பதுடன் தந்தையின் இலட்சியத்துக்கும் முரண்படுவதாகவும் தெரிகிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இத்தகைய தீர்மானம் எதுவும் கூடி எடுக்கவில்லை. ஒருசிலரின் விருப்புக்கமைய ஒரு சமுதாயத்தையே தப்பான வழிக்கு இட்டுச் செல்வது ஏற்றுக் கொள்ள முடியாது.  அடிப்படை உரிமைகளை முழுமையாக அனுபவிக்காத அந்த மக்கள் மத்தியில் ஒருபகுதியினரை மட்டும் ஆதரிப்பதானது எமது மறைந்த தலைவர்களை அவமானப்படுத்துவதுடன் மட்டுமல்ல, அத் தலைவர்களுக்கும் - அந்த மக்களுக்கும் செய்யும் துரோகமாகவே நான் எண்ணுகிறேன். ஒரு கட்சிக்கு மாத்திரம் பிரச்சாரம் செய்வது வருத்தத்துக்குரிய விடயமாகும் என்பது மட்டுமல்ல குழப்பத்தையும் உண்டு பண்ணும். முதலமைச்சரும் ஏனைய கட்சிகளின் தலைவர்கள் மற்றும் அங்கத்தவர்கள் பிரச்சாரத்தில் கலந்து கொள்ளாது உடனடியாக விலகிக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றேன்.
வடக்கு கிழக்குக்கு வெளியே வாழும் குறிப்பாக மலையகம் மற்றும் கொழும்பு பகுதிகளில் வேற்றுமையை வளர்க்காது மக்கள் முன்பு வாக்களித்ததுபோல தமக்கு விருப்பமானவர்களைத் தேர்ந்தெடுக்க ஜனநாயக முறைப்படி விட்டுவிடுவது நல்லது. அதைவிடுத்து ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு மாத்திரம் ஆதரவு கோருவது எதிர்காலத்தில் கூட்டமைப்பின் நடவடிக்கைகளை கடுமையாகப் பாதிக்கும் என எச்சரிக்கிறேன். தலை இருக்க வால் ஆடும் நிலையினால் கூட்டமைப்பு அழிவுப் பாதையை நோக்கிச் செல்வதையும் சுட்டிக்காட்;ட வேண்டுவது எனது கடமையாகும். தந்தை செல்வாவின் கொள்கைக்கு அமைய தனி ஒரு கட்சியை தமிழர் விடுதலைக் கூட்டணி இத்தேர்தலில் ஆதரிக்க முடியாது என்பதை வருத்தத்துடன் தெரிவிக்க விரும்புகிறேன். 

ஜனாதிபதித் தேர்தலில் விட்ட தவறை மீண்டும் செய்யாது பிராந்தியக் கட்சிகளுடன் இணைந்து தம்மைத் தனிமைப் படுத்தாது நாடாளாவிய ரீதியில் செயற்படும் ஆட்சியைக் கைப்பற்றக் கூடிய பிரதான கட்சிகளில் ஏதேனும் ஒன்றுக்கு ஆதரவு வழங்கலாம் என ஆலோசனை கூறுகிறேன். இப்பகுதிகளில் வாழும் வடபகுதி மக்கள் எடுக்கும் முடிவு அவர்களை எதிர்காலத்தில் அநாதரவற்ற நிலையை ஏற்படுத்தாது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு புத்துசாதுரியமாக செயற்படும்படி வேண்டுகிறேன். நிலைமையை உணர்ந்து தெற்கே வாழும் தமிழ் மக்களுக்கு சங்கடமான நிலைமையை உருவாக்க வேண்டாமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைக் கேட்டுக் கொள்கின்றேன்.
வீ. ஆனந்தசங்கரி,
செயலாளர் நாயகம்,
தமிழர் விடுதலைக் கூட்டணி.