* ஆறு மாவட்டங்களிலும் 58,98,427 வாக்காளர்கள் தகுதி
* 23 அரசியல் கட்சிகள் 42 சுயேட்சைக் குழுக்கள் போட்டி
* 155 பேரை தெரிவு செய்ய 3,704 பேர் களத்தில்
* பாதுகாப்புக்காக 26,000 பொலிஸார்
* கண்காணிப்புப் பணியில் 30,000 பேர்
* தேர்தல் கடமைகளில் 70,000 அரச ஊழியர்கள்
* தேர்தல் கடமைகளில் 70,000 அரச ஊழியர்கள்
சுதந்திரமாக வாக்களிப்பதற்குரிய சகல நடவடிக்கைகளும் எடுக்கப் பட்டிருப்பதாகவும், எவ்வித அச்சமுமின்றி வாக்களிக்குமாறும் தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய வாக்காளர்களை கேட்டுக்கொண்டுள்ளார்.
மேல் மற்றும் தென் மாகாண சபைகளுக்கான வாக்குப் பதிவு இன்று காலை 7 மணிமுதல் மாலை 4 மணிவரை நடைபெறுகிறது.
அசெளகரியங்களைத் தவிர்ப்பதற்கு வாக்காளர்களை நேரகாலத்துடன் சென்று வாக்களிக்குமாறும் ஆளடை யாளத்தை உறுதிபடுத்தக்கூடிய தேசிய அடையாள அட்டையை உடன் எடுத்துச் செல்லுமாறு தேர்தல்கள் ஆணையாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இரண்டு மாகாண சபைகளின் சார்பில் 155 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக 3794 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இவர்கள் 23 அரசியல் கட்சிகளையும் 42 சுயேச்சைக் குழுக்களையும் பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர். தேர்தல் நடைபெறும் ஆறு மாவட்டங்களிலும் 4,253 வாக்குச் சாவடிகள் அமைக்கப் பட்டுள்ளன. வாக்குச் சாவடிகளுக்கான வாக்குப் பெட்டிகள் நேற்று முன்தினமே கொண்டு செல்லப்பட்டன.
608 வாக்கு எண்ணும் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இரவு 10 மணியளவில் தபால் மூல வாக்கு முடிவுகளை வெளியிட எதிர்பார்த்திருப் பதாகவும் அதிகாலையில் சகல தேர்தல் முடிவுகளை வெளியிட எதிர்பார்த்திருப் பதாகவும் தேர்தல்கள் ஆணையாளர் குறிப்பிட்டார்.
மேல் மற்றும் தென் மாகாணங்களில் இன்று நடைபெறும் தேர்தலில் 58 இலட்சத்து 98 ஆயிரத்து 427 வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். இரண்டு மாகாணங்களிலும் சுமார் 26,000க்கும் அதிகமான பொலிஸார் தேர்தல் கடமைகளில் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர்.
வாக்களிப்பு நிலையங்கள், வாக்கு எண்ணும் நிலையங்கள் மற்றும் ரோந்து நடவடிக்கைகளுக்கென விசேட பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டிருப்பதுடன் கலகத் தடுப்பு பொலிஸார் தயார் நிலையில் வைக்கப்பட்டிருப்பதாகவும் தேர்தலுக்குப் பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் காமினி நவரட்ண தெரிவித்தார்.
மூவாயிரத்துக்கும் அதிகமான உள்ளூர் தேர்தல் கண்காணிப்பாளர்கள் தேர்தல் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். தேர்தல் கடமைகளுக்கென சுமார் 70 ஆயிரம் அரசாங்க உத்தியோகத்தர்கள் நியமிக்கப்பட் டுள்ளனர். இவர்கள் தமக்கு வழங்கப் பட்டுள்ள பிரதேசங்களுக்கு கடமை நிமித்தம் சமுகமளித்துள்ளனர்.
மேல் மாகாணத்தில் மாத்திரம் 102 உறுப்பினர்களைத் தெரிவு
102 உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக 2 ஆயிரத்து 743 வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிடுகின்றனர். இவர்களை தெரிவு செய்வதற்காக 03 மாவட்டங்களிலுமுள்ள 36 தேர்தல் தொகுதிகளிலுமிருந்து 40 இலட்சத்து 24 ஆயிரத்து 623 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.
கொழும்பு மாவட்டத்தில் 40 உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக 18 அரசியல் கட்சிகள் மற்றும் 11 சுயேச்சைக் குழுக்களைச் சேர்ந்த ஆகக்கூடிய வேட்பாளர்களாக 1247 பேர் தேர்தலில் போட்டியிடுகின்றனர். இம் மாவட்டத்தின் 15 தேர்தல் தொகுதிகளிலிருந்தும் பதினைந்து இலட்சத்தி 52 ஆயிரத்தி 733 பேர் வாக்களிக்கவுள்ளனர்.
கம்பஹா மாவட்டத்தில் 40 உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக 13 அரசியல் கட்சிகள் மற்றும் 09 சுயேச்சைக் குழுக்களைச் சேர்ந்த 946 வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிடு கின்றனர். கம்பஹாவில் 13 தேர்தல் தொகுதிகளைச் சேர்ந்த 15 இலட்சத்தி 90 ஆயிரத்தி 76 பேர் வாக்களிக்க தகுதிபெற்றுள்ளனர்.
களுத்துறை மாவட்டத்தில் 22 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவுள்ளனர். இம்மாவட்டத்தில் 13 கட்சிகள் மற்றும் 09 சுயேச்சைகளைச் சேர்ந்த 550 வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிடுகின்றனர். களுத்துறையிலுள்ள எட்டு தேர்தல் தொகுதிகளிலிருந்தும் 8 இலட்சத்தி 81 ஆயிரத்தி 814 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.
தென் மாகாணத்தில் மூன்று மாவட்டங்களிலிருந்து 53 உறுப்பினர்களைத் தெரிவு
53 உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக 1057 வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிடுகின்றனர். இம் மாகாணத்தின் 21 தேர்தல் தொகுதிகளிலிருந்தும் 18 இலட்சத்தி 73 ஆயிரத்தி 804 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.
காலி மாவட்டத்திலிருந்து 22 உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கான 14 அரசியல் கட்சிகள் மற்றும் 04 சுயேச்சைக் குழுக்களிலிருந்தும் 450 வேட்பாளர்கள் இம்முறை போட்டியிடு கின்றனர். இம்மாவட்டத்தில் 10 தேர்தல் தொகுதிகளிலுமிருந்தும் 8 இலட்சத்தி 9 ஆயிரத்தி 882 பேர் வாக்களிக்கவுள்ளனர்.
மாத்தறை மாவட்டத்தில் 17 உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக 14 அரசியற் கட்சிகள் மற்றும் 05 சுயேச்சைக் குழுக்களைச் சேர்ந்த 380 வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிடு கின்றனர். இம்மாவட்டத்தின் 07 தேர்தல் தொகுதிகளிலுமிருந்து 6 இலட்சத்து 08 ஆயிரத்தி 524 பேர் வாக்களிக்கவுள்ளனர்.
ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் 14 உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக 09 கட்சிகள் மற்றும் 04 சுயேச்சைகளைச் சேர்ந்த மிகவும் குறைந்த வேட்பாளர்களான 221 பேர் போட்டியிடவுள்ளனர். இம்மாவட்டத்தின் நான்கு தேர்தல் தொகுதிகளிலுமிருந்து 4 இலட்சத்தி 55 ஆயிரத்து 398 பேர் வாக்களிக்கவுள்ளனர்.
இதேவேளை, தபால் மூல வாக்களிப்பு, கடந்த 13 மற்றும் 14ம் திகதிகளில் சுமுகமான முறையில் நடைபெற்றது. இம்முறை ஒரு இலட்சத்து 26 ஆயிரத்து 796 பேர் தபால் மூலம் வாக்களிக்க தகுதிபெற்றிருந்தனர்.
கொழும்பில் 175 வாக்கு எண்ணும் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ரோயல் கல்லூரியில் 74 நிலையங்களிலும் டி.எஸ். சேனநாயக்க கல்லூரியின் 53 நிலையங்களிலும் இஸிபத்தான கல்லூரியின் 48 நிலையங்களிலும் வாக்கு எண்ணும் பணிகள் இடம்பெறும்.
கம்பஹா மாவட்டத்தில் 160 வாக்கு எண்ணும் நிலையங்கள் நிறுவப்பட்டுள்ளன. சியகே தேசிய கல்விக் கல்லூரியில் 77 நிலையங்களும் வேயங்கொடை பண்டார நாயக்க மத்திய மகா வித்தியாலயத்தில் 55 நிலையங்களும் பத்தலாகெதர வித்தியாலோக்க வித்தியாலயத்தில் 28 நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளன.
களுத்துறை மாவட்டத்தில் 85 வாக்கு எண்ணும் நிலையங்கள் அமைக்கப்பட்டு ள்ளன. ஸத்துன்ரத்த தேசியக் கல்விக் கல்லூரியில் 56 நிலையங்களும் திஸ்ஸ தேசிய பாடசாலையில் 29 நிலையங்களும் நிறுவப்பட்டுள்ளன.
காலியில் 80 நிலையங்களின் கீழ் வாக்குகள் எண்ணப்படவுள்ளன. காலி தொழில்நுட்ப கல்லூரியில் 36 நிலையங்களும் சவுத்லெண்ட் வித்தியாலயத்தில் 32 நிலையங்களும் மாவட்ட செயலகத்தின் கீழ் 12 நிலையங்களும் நிறுவப்பட்டுள்ளன.
மாத்தறையில் 62 நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ரோஹண மத்திய வித்தியாலயத்தில் 24 நிலையங்களும் தொழில்நுட்ப கல்லூரியில் 38 நிலையங் களும் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன.
ஹம்பாந்தோட்டையில் சுச்சி தேசிய பாடசாலையில் மாத்திரம் 46 நிலையங்கள் வாக்குகளை எண்ணுவதற்காக நிறுவப் பட்டுள்ளன தேர்தல் நடைபெறும்.
மேல் மற்றும் தென் மாகாண சபைகள் ஜனவரி 12ம் திகதி கலைக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து ஜனவரி 30ம் திகதி முதல் பெப்ரவரி 06ம் திகதி வரை யில் வேட்பு மனுக்கள் கையேற் கப்பட்டன.