3/27/2014

| |

கிழக்கில் அரச நியமனங்களில் மாகாண இன விகிதாசாரம்

கிழக்கு மாகாணத்தில் அரச நியமனங்களை மேற்கொள்ளும் போது மாகாண இன விகிதாசாரத்தைப் பேணுவதற்கு மாகாண அமைச்சரவை முடிவு செய்துள்ளது.
இது தொடர்பான யோசனையை கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத் மாகாண அமைச்சரவைக்குச் சமர்ப்பித்தார். அந்த யோசனையை ஆராய்ந்த மாகாண அமைச்சரவை மேற்படி முடிவை எடுத்துள்ளதாக மாகாண அமைச்சரவை பேச்சாளரும் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சருமான எம். எஸ். உதுமா லெப்பை தெரிவித்தார்.
மாகாண அமைச்சரவையின் இம்முடிவு மாகாண ஆளுனர் மொஹான் விஜேவிக்கிரமவுக்கு அனுப்பி வைக்கப்படும் எனவும் அவர் கூறினார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், முதலமைச்சர் தலைமையில் மாகாண அமைச்சரவை அண்மையில் கூடியது :-
கிழக்கு மாகாண சபையில் உள்ள அமைச்சுக்கள், திணைக்களங்களில் காணப்படுகின்ற வெற்றிடங்கள் தொடர்பில் மாகாணத்தில் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டு நியமனங்கள் வழங்கப்படுகின்றமை மாகாணத்தில் உள்ள படித்த இளைஞர், யுவதிகளுக்கு நிவாரணமாகவும், மாகாணத்தில் வேலையின்மைப் பிரச்சினையை பெருமளவு குறைப்பதற்கும் பெரும் துணையாக அமைந்துள்ளது.
எனினும் இவ்வாறான நியமனங்களின் போது, திறமை அடிப்படையை மாத்திரம் கவனத்திற் கொள்ளும் போது மூன்று இனங்களும் மிக நெருக்கமாக வாழும் கிழக்கு மாகாணத்தில், கல்வியில் பின்தங்கிய பிரதேசங்களைச் சேர்ந்த இளைஞர், யுவதிகளுக்கு சந்தர்ப்பம் கிடைக்காமலும் சிலவேளை ஒன்றோ, அல்லது அதற்கு மேற்பட்ட இனங்களைச் சேர்ந்த இளைஞர், யுவதிகள் வெகுவாகப் பாதிப்படையும் நிலைமை காணப்படுகின்றது.
அத்துடன் தூரப் பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் குறித்த பிரதேச வெற்றிடங்களுக்கு நியமிக்கப்படுகின்ற போது மிகக் குறுகிய காலத்துக்குள் இடமாற்றம் பெறவோ, அல்லது தொழிலை விட்டுவிடுவதற்கோ முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இவ்வாறான நிலைமைகளைக் கருத்திக்கொண்டு இனிவரும் காலங்களில் அரச நியமனங்கள் வழங்கப்படும் போது மாவட்ட வெற்றிடங்களையும், மாகாண இன விகிதாசாரத்தினையும் கவனத்தில் கொண்டு நடவடிக்கை மேற்கொள்வதற்கு கிழக்கு மாகாண ஆளுநருக்கு அறிவிப்பதற்கு அமைச்சரவையின் அனுமதியினைக் கோரி கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவைப் பத்திரத்தை ஆராய்ந்த அமைச்சரவை இதற்கான அனுமதியினை வழங்கியதாக கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சரும் அமைச்சரவையின் பேச்சாளருமான எம். எஸ். உதுமாலெப்பை தெரிவித்தார்.