ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி மூலம் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று கல்முனை மாநகர சபையின் முன்னாள் மேயராக பதவி வகித்த கலாநிதி சிராஸ் மீராசாஹிப், சாய்ந்தமருது பிரதேசமக்களும் தேசியகாங்கிரஸ் கட்சியில் இணைந்து கொள்ளும் நிகழ்வு நேற்று இரவு சாய்ந்தமருது லீ மெரிடியன் வரவேற்பு மண்டபத்தில் இடம்பெற்றது.
இதன்போது, சாய்ந்தமருதுக்கான உள்ளூராட்சி மன்றத்தை உருவாக்கி தரவேண்டும் என்ற கோரிக்கை அடங்கிய மகஜரை உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சர் ஏ.எல்.எம். அதாவுல்லாவிடம் கையளித்ததுடன் அமைச்சரை பொன்னாடை போர்த்தி கௌரவித்தார்.
சாய்ந்தமருது வர்த்தக சங்கத் தலைவர் ஏ.எல்.சலீம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அமைச்சர் அதாஉல்லா உரையாற்றுகையில், "எந்தச் சமூகத்துக்கும் எந்தப் பிரதேசத்திற்க்கும் பாதிப்பு ஏற்படாமல் சாய்ந்தமருது மக்கள் தங்களைத் தாங்களே ஆளக் கூடிய வகையில் தனியானதொரு பிரதேச சபை உருவாக்கப்படும். அதற்கான பணிகளை நாம் ஆரம்பித்திருக்கின்றோம் எனத் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் கிழக்குமாகாண வீதி அபிவிருத்தி, நீர்ப்பாசன அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெவ்வை, கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான சட்டத்தரணி ஆரிப் சம்சுடீன், எம்.எல்.ஏ.அமீர், அக்கரைப்பற்று மாநகர மேயர் ஏ.அஹமட் சக்கி, அக்கரைப்பற்று பிரதேச சபைத்; தவிசாளர் ஏ.எம்.றாசிக் உள்ளிட்ட அரசியற் பிரமுகர்கள், கல்வியியலாளர்கள், சமயத் தலைவர்கள், சமூக பிரமுகர்கள் உட்பட ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் கலந்துகொண்டனர்.