இலங்கையில் மனிதஉரிமைகள் மீறப்பட்டமை பற்றி சர்வதேச விசாரணை கோரும் கமருனுக்கு சமர்ப்பணம்
ஆங்கிலேயேர்களுக்கு எதிராக, 1857ல், நாடு முழுவதும், கிழக்கிந்திய கம்பெனி ராணுவத்தில் இருந்த நம் வீரர்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். அவர்களில், 'பெங்கால் நேட்டிவ் இன்பேன்ட்ரி' என்ற, ராணுவ படைப்பிரிவில் இருந்த, நம் வீரர்கள் பலர், ஆங்கிலேயர்களால் கைது செய்யப்பட்டனர். அந்த ஆண்டில், அமிர்தசரஸ் பகுதியை நிர்வாகம் செய்த ஆங்கிலேய அதிகாரிகளான துணை கமிஷனர், பிரடெரிக் ஹென்சி கூப்பர் மற்றும் ராணுவ அதிகாரி, கர்னல், ஜேம்ஸ் ஜார்ஜ் ஸ்மித் நீல் ஆகியோர், இந்திய வீரர்கள் ஏராளமானோரை கொடூரமான முறையில் கொன்றனர். கிளர்ச்சியில் ஈடுபட்டவர்களில், அவர்கள் கையில் சிக்கிய, வீரர்கள் கொடூரமாக கொல்லப்பட்டனர். 150 வீரர்கள், சுட்டுக் கொல்லப்பட்டனர். நூற்றுக்கும் மேற்பட்டோர், கை, கால்களை கட்டி, ஆற்றில் வீசப்பட்டனர். 283 வீரர்கள், கைகளை கட்டி, அமிர்தசரஸ் அருகே உள்ள அஜ்னாலா என்ற நகருக்கு கொண்டு வரப்பட்டனர். அவர்களை, அங்கிருந்த பாழுங்கிணற்றில் தள்ளி, 10 அடி உயரத்திற்கு மண்ணை போட்டு மூடிவிட்டனர், வெள்ளைக்கார அதிகாரிகள்.
இந்த தகவலை சமீபத்தில் தான், அப்பகுதி வரலாற்று ஆசிரியர், சுரிந்தர் கோச்சார் என்பவர் கண்டறிந்தார். அப்பகுதியில் உள்ள, குருத்வாரா ஷாஹீத் குஞ்ச் நிர்வாக குழுவின் ஆதரவுடன், அந்த கிணறு கண்டுபிடிக்கப்பட்டு, இரண்டு நாட்களாக தோண்டப்பட்டது. அப்போது, 100 பேரின் மண்டை ஓடுகள், தாடை எலும்புகள், தொடை எலும்புகள், ஆயுதங்கள், வீரர்கள் அணிந்திருந்த தங்க, வெள்ளி ஆபரணங்கள், வைத்திருந்த நாணயம் போன்றவை கண்டெடுக்கப்பட்டன.
கிணற்றை சுற்றிலும் நின்று வேடிக்கை பார்த்த பொதுமக்கள், 157 ஆண்டுகளுக்கு முன், தங்களின் மூதாதையர்களை கொன்று குவித்த ஆங்கிலேயர் கொடுமையை நினைத்தும், இறந்தவர்களின் உடல் எச்சங்கள், எலும்புகளாக மீட்கப்பட்டதையும் கண்டு, கண்ணீர் வடித்தனர். பஞ்சாப் மாநிலத்தில், சிரோன்மணி அகாலிதளம் கட்சியை சேர்ந்த, முதல்வர், பிரகாஷ் சிங் பாதல் தலைமையிலான அரசு, ஆட்சியில் உள்ளது.