3/03/2014

| |

கூடங்குளம் அணு உலை போராட்ட குழு, ஆம் ஆத்மி கட்சியில் இணைவு

கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் தலைமையில் போராட்டக்காரர் ஆம் ஆத்மி கட்சியில் சனிக்கிழமை இணைந்தனர். ஆம் ஆத்மியின் பெயர் ‘எளிய மக்கள் கட்சி’ என்று தமிழில் பெயர் மாற்றப்பட்டது.
நெல்லை மாவட்டம் ராதாபுரம் தாலுகா கூடங்குளம் கடலோரத்தில் அமைக்கப்பட்டுள்ள அணுமின் நிலையத்துக்கு எதிராக அணு உலை எதிர்ப்பாளர்கள் நீண்ட நாட்களாக போராட்டம் நடத்தி வருகிறார்கள். கூடங்குளம் போராட்டக்காரர்கள் ‘ஆம் ஆத்மி’ கட்சியில் சேர வேண்டும் என்று அரவிந்த் கெஜ்ரிவால் அழைப்பு விடுத்தார். இந்த அழைப்பை ஏற்று உதயகுமார் உள்ளிட்ட போராட்டக்காரர்கள் சனிக்கிழமை ‘ஆம் ஆத்மி’ கட்சியில இணைந்தார்கள். இதற்கான விழா சனி மாலையில் இடிந்தகரை கிராமத்தில் கிழக்கு அந்தோணியார் ஆலயத்தில் நடைபெற்றது. ‘ஆம் ஆத்மி’ கட்சி தமிழக தேர்தல் பணிக்குழு தலைவர் டேவிட் பரூக்குமார் வந்து இருந்தார். அவரது முன்னிலையில் போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார், நிர்வாகிகள் மைபா ஜேசுராஜ், மில்டன், கெபிஸ்டன், முகிலன் ஆகியோரும், நூற்றுக்கணக்கானவர்களும் கட்சியில் இணைந்தனர்.
விழாவில் ‘ஆம் ஆத்மி’ என்ற வார்த்தைகளுக்கு, ‘எளிய மக்கள் கட்சி’ என்று தமிழில் மொழியாக்கம் செய்து, பெயர் சூட்டப்பட்டது. அதே நேரத்தில் கூடங்குளம் போராட்டக் குழுவின் முக்கிய நிர்வாகியாக செயல்பட்டு வரும் புஷ்பராயன் கட்சியில் சேரவில்லை. குமரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியடுவீர்களா? என்று கேட்டதற்கு கட்சி தலைமை என்ன சொல்கிறதோ? அதை ஏற்று முடிவு செய்வேன் என்று உதயகுமார் கூறினார்.