3/13/2014

| |

தமிழ் தூது தனிநாயகம் அடிகள் நூற்றாண்டுச் சபையின் தமிழியல் கருத்தரங்குகள்

மிழ்த்தூது தனிநாயகம் அடிகளாரின் நூற்றாண்டு விழா சபையின் ஏற்பாட்டில், இவ்வாண்டும் பல இலக்கிய நிகழ்வுகள் மட்டக்களப்பு பாடசாலைகளில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.


அந்த ஒழுங்கில், மட்டக்களப்பு வின்சென்ற் தேசிய பாடசாலையில் தமிழ்த்தூது தனிநாயகம் அடிகளாரின் நூற்றாண்டு விழாச் சபையினால் கம்பராமாயாணக் கதா பாத்திரங்கள் எனும் தலைப்பில்  இலக்கியக் கருத்தரங்கு நேற்றைய தினம் பகல் இடம்பெற்றது.

மட்டக்களப்பு நகரிலுள்ள பாடசாலைகளில் இவ் வருடம் பரீட்சை எழுதவுள்ள கல்விப் பொதுத் தராதரப் சாதாரண தர மற்றும் உயர்தர மாணவர்களுக்கான கருத்தரங்கு பேராசிரியர் சி.மௌனகுருவால் நடாத்தப்பட்டது.

இவ் நிகழ்வானது மட்டக்களப்பு வின்சென்ற் தேசிய பாடசாலை அதிபர் திருமதி ராஜகுமாரி கனகசிங்கம் தலைமையில் இடம்பெற்ற இக் கருத்தரங்கில் புனித மிக்கேல் கல்லூரி, மெதடிஸ்த மத்திய கல்லூரி, புனித சிசிலியா பெண்கள் பாடசாலை ஆகியவற்றின் மாணவ, மாணவிகளும் ஆசிரியர்களும் கலந்து கொண்டனர்.

தனிநாயகம் அடிகளார் நூற்றாண்டுவிழாச் சபையின் ஏற்பாட்டில் பாடசாலை மாணவர்களுக்காக மாதாந்தக் கருத்தரங்குகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக விழாச் சபை தெரிவித்தது. முதலில் மட்டக்களப்பு நகரிலுள்ள பாடசாலை மாணவர்களுக்கான கருத்தரங்குகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இந்த ஒழுங்கில் முதலாவதாக கடந்த 26ஆம் திகதி புனித சிசிலியா பெண்கள் பாடசாலையில் பேராசிரியர் எஸ்.யோகராஜாவால் குறுந்தொகைக் காட்சிகள் எனும் தலைப்பில் கருத்தரங்கு நடத்தப்பட்டிருந்தது.

தொடர்ச்சியாக, சிலப்பதிகாரம், அகநாநூறு, புறநானூறு, மணிமேகலை, சீவகசிந்தாமணி, திருக்குறள், கலித்தொகை, உள்ளிட்ட தலைப்புகளில் கருத்தரங்குள் நடைபெறவுள்ளன.

இவை மட்டக்களப்பு வின்சன்ற் மகளிர் உயர் தேசியப்பாடசாலை, மகாஜனக் கல்லூரி புனித மிக்கேல் கல்லூரி, இந்துக் கல்லூரி, சிவானந்தா தேசியப்பாடசாலை, ஆனைப்பந்தி இ.கி.மி வித்தியாலயம், மெதடிஸ்த மத்தியகல்லூரி, கல்லடி உப்போடை விவேகானந்தா மகளிர் வித்தியாலயம் ஆகியவற்றில் மாதாந்த கருத்தரங்குகள் நடைபெறும் எனவும் தனிநாயகம் அடிகளார் நூற்றாண்டுவிழாச் சபை தெரிவித்தது.