தி.மு.க., வேட்பாளர் பட்டியலை வெளியிட்டதை தொடர்ந்து கருணாநிதி நிருபர்கள் கேள்விக்கு பதில் அளித்தார். இந்த விவரம் வருமாறு;
*அழகிரி தனிக்கட்சி துவங்குவது குறித்து?
இது வேட்பாளர் அறிவிப்பு நிகழ்ச்சி, இவ்வாறு கேட்டு எனது மனதை புண்படுத்த வேண்டாம்.
* மோடி அலை வீசுகிறதா?
வங்காள வரிகுடா அலை தான் எனக்கு தெரிந்தது.
*மோடி பிரதமர் ஆகும் வாய்ப்பு வந்தால் ஆதரிப்பீர்களா ?
ஜனநாயக ரீதியிலான எங்கள் கட்சி, மதச்சார்பற்ற அணியில் தி.மு.க., பங்கேற்கும். இதைத்தான் நாங்களும் , எங்கள் அணியினரும் ஏற்போம். தனிப்பட்ட ஒருவரை ஆதரிப்பீர்களா என்று கேட்பது சரியில்லை.மதச்சார்பற்ற ஒரு கட்சி இந்தியாவில் ஆளும் கட்சி வரவேண்டும் என்பதைத்தான் நாங்கள் விரும்புவோம்,
*ஊழல் தொடர்பான குற்றச்சாட்டுக்கள் உள்ளவர்களை வேட்பாளர்களாக அறிவித்துள்ளீர்களா ?
உண்மையில் இப்படி ஒரு குற்றச்சாட்டு இல்லை. இந்த வழக்குகள் எல்லாம் ஆடிக்கொண்டிருக்கிறது. நிரூபிக்க கூடிய சாட்சியங்கள் இல்லை என்ற நிலை உருவாகி இருக்கிறது.
*தி.மு.க.,வில் 2 பேர் தான் பெண் வேட்பாளர்களா ?
ஒரு பெண் இருந்தே ( ஜெ.,வை கருத்தில் கொண்டு) நம்மை ஆட்டி வைக்கிறார்கள் போதாதா ?
*இட ஒதுக்கீடு விஷயத்தில் நீங்கள் பொய் சொல்வதாக ஜெ., கூறுகிறாரே?
தேர்தலில் பொய்சொல்வது இந்த அம்மாவுக்கு கை வந்த கலை,
*இலங்கை தமிழர் நிலையில் சேனல் 4 குறித்து ஆவண படங்கள் குறித்து ? ,
இது போன்று ஏராளமான படங்கள் வந்துள்ளன. இலங்கை அரசு, இந்திய அரசு கவவனத்திற்கு கொண்டு சென்றுள்ளோம். ஐக்கிய நாட்டு சபையில் தி.மு.க., எடுத்துரைத்துள்ளது. ஆனால் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
* உங்கள் கூட்டணிக்கு இடதுசாரிகள் வருமா ?
வந்தால் நாங்கள் சாரி ! சொல்ல மாட்டோம். இதுவரை எங்களிடம் யாரும் பேசவில்லை. யூகங்கள் அடிப்டையில் எதுவும் சொல்ல முடியாது. தி.மு.க., நியாயமான, நேர்மையான, நட்பு ரீதியாக செயல்படும் இந்த நேரத்திற்குள் வா என்று காலநேரம் கெடு கொடுக்க முடியாது.
*ஜெ., சொத்துக்குவிப்பு வழக்கு என்னவாகும் ?
அந்த தீர்ப்பை பற்றி நான் கருத்து சொல்வது நீதிமுறைக்கு, சட்டமுறைக்கு ஏற்றதல்ல.
*மக்கள் நிர்வாகிகள் மீதான வழக்கை விரைந்து முடிக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட் சொல்லியிருக்கிறதே ?
ஏறத்தாழ 15 வருடமாக ஜெ., சொத்துக்குவிப்பு வழக்கு நடக்கிறது.
இவ்வாறு கருணாநிதி கூறினார்.