3/06/2014

| |

இந்தியப் பொதுத் தேர்தல் திகதி அறிவிப்பு; 29ம் திகதி வேட்பு மனுத் தாக்கல்

81 கோடி பேர் வாக்களிக்க தகுதி 9 கட்டங்களாக நடத்த முடிவு
2014ஆம் ஆண்டிற்கான இந்தியப் பாராளுமன்றத் தேர்தல் எதிர்வரும் ஏப்ரல் 7ஆம் திகதி முதல் மே 12ஆம் திகதி வரை நடைபெறும் என இந்தியத் தேர்தல் ஆணைக்குழு நேற்று அறிவித் துள்ளது.
இந்த தேர்தல் 9 கட்டங்களாக நடத்தப்படும் என்பதுடன், தமிழகத்தின் புதுவை மாவட்ட உட்பட தமிழகமெங்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படும் என்றும் தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
வாக்குகளை எண்ணும் நடவடிக்கைகள் மே மாதம் 16ம் திகதி நடைபெறும் என்பதுடன் எதிர்வரும் 29 ஆம் திகதி முதல் ஏப்ரல் 5ஆம் திகதி வரை வேட்புமனுத்தாக்கல் செய்யலாம் என்றும் இந்திய பிரதம தேர்தல் ஆணையாளர் வீ. எஸ். சம்பத் அறிவித்து ள்ளார். 15ஆவது இந்திய பாராளுமன்றத்தின் ஆயுட்காலம் எதிர்வரும் 31ஆம் திகதியுடன் முடிவடைகிறது. 543 உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக இத்தேர்தல் நடைபெறவுள்ளது.
நேற்று புதுடில்லியிலுள்ள விஞ்ஞான் பவனில் நடைபெற்ற செய்தியாளர் மா நாட்டிலேயே தேர்தல் திகதிகளை அவர் அறிவித்தார். இம்முறை நடைபெறவுள்ள தேர்தலில் 35 மாநிலங்களிலும் 81 கோடி வாக்காளர் வாக்களிக்கவுள்ளனர். 543 உறுப்பினர்கள் இந்தியப் பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்படுவதுடன் 272 உறுப் பினர்களை பெரும்பான்மையாக கொள்ளும் கட்சிக்கே ஆட்சியமைக்க முடியும்.
புதுடில்லியிலுள்ள விஞ்ஞான் பவனில் செய்தியாளர்களிடம் பேசிய ஆணையாளர் வீ. எஸ். சம்பத், ஆந்ரா, ஒடிசா, சிக்கிம் மாநில சட்டப்பேரவைகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளதாகத் தெரிவித்தார்.
ஆந்திரப் பேரவையின் ஆயுட்காலம் ஜூன் 2இல் முடிவடைகிறது. சிக்கிம் பேரவையின் ஆயுட்காலம் ஜூன் 2ல் முடிவடைகிறது. வேட்பாளர் செலவை உயர்த்துவது பற்றி கட்சிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டதாகத் தெரிவித்த அவர், தேர்தல் திகதியுடன் பண்டிகைத் திகதி குறுக்கிடக் கூடாது எனக் கட்சிகள் கோரியதாகக் குறிப்பிட்டார். மழைக்காலம் துவங்குவது, கடும் கோடைக்காலம் ஆகியவையும் கருத்தில் கொள்ளப்பட்டதாக அவர் கூறினார்.
81 கோடி வாக்காளர்கள்;
2014 மக்களவைத் தேர்தலில் 81.4 கோடி வாக்களர்கள் உள்ளதாக தலைமைத் தேர்தல் ஆணையாளர் சம்பத் தெரிவித்தார். கடந்த மக்களைத் தேர்தலை விட இந்தத் தேர்தலில் 10 கோடி வாக்காளர்கள் அதிகம் என்றும் தெரிவித்தார்.
முதல் கட்டத் தேர்தல்
முதல் கட்டத் தேர்தல் ஏப்ரல் 7ம் திகதி நடைபெற உள்ளது. இரண்டு மாநிலங்களில் 6 தொகுதிகளுக்கு முதல் கட்டத் தேர்தல் நடைபெற உள்ளது.
* 2-வது கட்ட வாக்குப் பதிவு ஏப்ரல் 9ந் திகதி 5 மாநிலங்களில் 7 தொகுதிகளுக்கு நடைபெறும்.
* 3-வது கட்ட வாக்குப் பதிவு ஏப்ரல் 10ஆம் திகதி 14 மாநிலங்களில் 92 தொகுதிகளுக்கு நடைபெறும்.
* 4வது கட்ட வாக்குப் பதிவு ஏப்ரல் 12ஆம் திகதி 3 மாநிலங்களில் 5 தொகுதிகளுக்கு நடைபெறும்.
* 5வது கட்ட வாக்குப் பதிவு ஏப்ரல் 17ஆம் திகதி 13 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்களில் 122 தொகுதிகளுக்கு நடைபெறும்.
* 6வது கட்ட வாக்குப் பதிவு ஏப்ரல் 24ஆம் திகதி தமிழகம், புதுவை உட்பட 12 மாநிலங்களில் 117 தொகுதிகளுக்கு நடைபெறும்.
* 7 வது கட்ட வாக்குப் பதிவு ஏப்ரல் 30ஆம் திகதி 9 மாநிலங்களில் 89 தொகுதிகளுக்கு நடைபெறும்.
* 8 வது கட்ட வாக்குப் பதிவு மே 7ஆம் திகதி 7 மாநிலங்களில் 64 தொகுதிகளுக்கு நடைபெறும்.
* 9 வது கட்ட வாக்குப் பதிவு மே 12ஆம் திகதி 3 மாநிலங்களில் 41 தொகுதிகளுக்கு நடைபெறும்.
தமிழகத்தில் ஒரே கட்டமாக தேர்தல்
தமிழகத்தில் ஒரே கட்டதாகத் தேர்தல் நடைபெறும். ஏப்ரல் 24ஆம் திகதி தமிழகத்தில் தேர்தல் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. புதுவையிலும் ஏப்ரல் 24ஆம் திகதி தேர்தல் நடைபெறும்.
மே மாதம் 16இல் வாக்கு எண்ணிக்கை:
மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை மே மாதம் 16 இல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
வேட்பு மனுத் தாக்கல்:
தமிழகத்தில் மார்ச் 29 ஆம் திகதி முதல் வேட்பு மனுத் தாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. வேட்பு மனுத்தாக்கல் செய்ய ஏப்ரல் 5ஆம் திகதி கடைசி நாள் என்று தேர்தல் ஆணையாளர் சம்பத் அறிவித்துள்ளார். வேட்பு மனுக்களை வாபஸ் பெற ஏப்ரல் 9ஆம் திகதி கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 7ஆம் திகதி வேட்பு மனுக்கள் மீது பரிசீலனை நடத்தப்படும். ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதிக்கு ஏப்ரல் 24ஆம் திகதியன்றே இடைத்தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.