2/03/2014

| |

கல்வி, வேலைவாய்ப்பில் கிழக்கு மாகாண தமிழர்கள் புறக்கணிப்பு: யோகேஸ்வரன் சொன்னசெய்தி




(சொல்லாத செய்தி இது ----இருந்த முதலமைச்சரை ஒழித்து கட்டியவர்கள் நாங்கள்,கிழக்கில்  ஒரு தமிழனும் இல்லாத அமைச்சரவையை உருவாக்கி சாதனை புரிந்தவர்கள் எங்கள் யாழ்ப்பாண தலைவர்கள்,மக்களே தொடர்ந்து எங்களுக்கு வாக்களியுங்கள் அப்போதுதான் உங்கள் நிலை இன்னும் கீழே போகும் நாங்கள் இப்படி நாங்கள் பேசிக்கொண்டே இருப்போம் .) 



 கிழக்கு மாகாண சபையானது கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் தமிழர்களை திட்டமிட்டு புறக்கணித்து வருவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்தார். 

போட்டிப் பரீட்சைகளில் சித்தியடைந்தபோதிலும், நியமனங்களைப் பெறுவதில் தமிழர்கள் திட்டமிட்ட முறையில் புறக்கணிப்படுவதாகவும் அவர் கூறினார். 

மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் புளியடிமுனை அரசினர் தமிழ் கலவன் பாடசாலையின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி நேற்று சனிக்கிழமை நடைபெற்றது. இதில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். 

அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,

'இந்த நாட்டில் யுத்தம் ஆரம்பிக்கப்பட முன்னர் தமிழர்கள் கல்வியில் உயர்ந்த நிலையிலிருந்தார்கள். இவர்களின் கற்றல் ஆற்றலை அழிக்க வேண்டும் என்பதற்காக யாழ்ப்பாண நூலகத்தை எரித்தார்கள்.

கிழக்கு மாகாணத்தில் கல்வி ரீதியாக ஒடுக்கப்படும் துர்ப்பாக்கியச் சூழல் தற்போது ஏற்பட்டுள்ளது. அண்மையில் நடத்தப்பட்ட முகாமைத்துவ உதவியாளர் பதவிக்கான  போட்டிப் பரீட்சையில் அதிக புள்ளிகளை தமிழ் பரீட்சார்த்திகள் பெற்றனர். ஆனால், இந்தப் பரீட்சையின் பெறுபேறுகள் மாற்றியமைக்கப்பட்டு நூற்றுக்கும் மேற்பட்ட முஸ்லிம்களும் சுமார் 40 சிங்களவர்களும்  15 தமிழர்களும் தெரிவுசெய்யப்பட்டனர்.  இதில் திருகோணமலை மாவட்டத்தில் முஸ்லிம்களும் சிங்களவர்களும் நியமிக்கப்படவிருப்பதுடன்,  15 தமிழர்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் நியமிக்கப்படவுள்ளார்கள். இதுதானா இன விகிதாசாரம்? 

போட்டிப் பரீட்சையில் கூடிய பெறுபேறுகளைப் பெற்றும் பதவியைப் பெறமுடியாது ஒடுக்கப்படும் இனமாக இன்று கிழக்கு மாகாணத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.

இவற்றைக் கண்டு நாங்கள் சோரவில்லை. இந்த அராஜக நடவடிக்கையை எதிர்த்து எமது உரிமைக்காக நாங்கள் வழக்குத் தாக்கல் செய்துள்ளோம். எமது மக்களின் கல்வி உரிமை, மொழி உரிமை பாதுகாக்கப்பட வேண்டும். 

இதேபோன்று பல திணைக்களங்களில் பெரும்பான்மை இனத்தை மையமாகக் கொண்டு சிற்றூழியர்கள் நியமனங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன. இதனை தடுக்கும் வகையில் நாங்கள் பல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம்.

கிழக்கு மாகாண சபையானது  கல்வி, வேலைவாய்ப்பு போன்றவற்றில் தமிழர்களை திட்டமிட்டு புறக்கணித்து வருகிறது. இதனை  ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.

நாங்கள் அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட்டால் பதவிகளைத் தருவதற்கு அவர்கள் தயாராகவுள்ளார்கள். ஆனால், எமது மக்களை விற்று அரசாங்கப் பதவிகளைப் பெற நாங்கள் தயாராக இல்லை. 

எமது மக்கள் செய்த தியாகங்களை ஒருபோதும் நாங்கள் மறக்க மாட்டோம். எமது மக்களின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாப்பதில் நாங்கள் தீவிரமாக செயற்பட்டுக்கொண்டிருக்கிறோம். தமிழ் மக்களுடைய தாயகத்தை அடையாளப்படுத்த வேண்டும். தமிழர்கள் தங்களைத் தாங்களே ஆள வேண்டும் என்பதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுதியாகவுள்ளது.

சத்துருக்கொண்டான் மண்ணில் 1990ஆம் ஆண்டு பாரிய படுகொலை இடம்பெற்றதை யாரும் மறக்க முடியாது. எமது உறவுகள் 186 பேர் இந்த மண்ணில் படுகொலை செய்யப்பட்டனர். ஆனால், இதுவரை எந்தவித முடிவும் இல்லை.  மேலும்,  யுத்தத்தால் திருகோணமலை மாவட்டத்திலிருந்து இடம்பெயர்ந்து வந்த மக்களுக்கு தங்குமிடம் கொடுத்து உதவியது இந்தச் சத்துருக்கொண்டான் மண்தான்' என்றார்

மேற்படி பாடசாலை அதிபர் எஸ்.சேகர் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில்  மட்டக்களப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் சுபா சக்கரவர்த்தி, உடற்கல்வி உதவிக் கல்விப் பணிப்பாளர் வி.லவக்குமார், ஓய்வுபெற்ற கோட்டக் கல்விப் பணிப்பாளர் கே.டேவிட் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.