2/28/2014

| |

இலங்கை உயர்மட்ட குழு அடுத்த வாரம் ஜெனீவா பயணம் * ஆதரவு திரட்டும் பேச்சுவார்த்தைகள் மும்முரம்

25ஆவது ஜெனீவா மனித உரிமை பேரவையில் பங்கேற்கும் வெளிவிவகார அமைச்சர் ஜீ. எல். பீரிஸ் தலைமையிலான உயர் மட்டக் குழு அடுத்தவாரம் முதற்பகுதியில் ஜெனீவா பயணமாகிறது. இந்தக் குழுவில் அங்கம் வகிக்கும் அமைச்சர் மஹிந்த சமரசிங்க 9ஆம் திகதி தான் அங்கு செல்ல இருப்பதாகக் குறிப்பிட்டார்.
இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வர உள்ள பிரேரணைக்கு எதிராக மனித உரிமை பேரவையில் அங்கம் வகிக்கும் நாடுகளின் ஆதரவை பெறுவதற்கான இறுதிக்கட்ட பேச்சுவார்த்தைகள் அடுத்த வாரம் முதல் ஜெனீவாவில் இடம்பெற இருப்பதாக வெளிவிவகார அமைச்சு கூறியது. இதே வேளை ஜெனீவா மனித உரிமைப் பேரவை அமர்வு மார்ச் 3ஆம் திகதி முதல் 28ஆம் திகதி வரை இடம்பெறுகிறது. இலங்கை தொடர்பான விவகாரம் 2 ஆம் திகதி ஆராயப்படவிருப்பதாக மனித உரிமைப் பேரவை நிகழ்ச்சி நிரலில் குறிப்பிடப்பட்டுள்ளது.இதேவேளை இலங்கை குழுவின் தலைவரான அமைச்சர் ஜி. எல் பீரிஸ் எதிர்வரும் 5 ஆம் திகதி மனித உரிமை பேரவையில் உரையாற்ற இருப்பதாக ஜனாதிபதியின் ஊடகப் பேச்சாளர் மொஹான் சமரநாயக்க தெரிவித்தார். இலங்கை குழுவில் உள்ளடக்கப்பட்டுள்ள அங்கத்தவர்கள் குறித்து இன்னும் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை எனவும் ஜனாதிபதியின் செயலாளர் வெளிநாட்டில் உள்ளதால் அவர் இந்தக் குழுவில் இணைக்கப்பட்டுள்ளாரா என்பது குறித்து தற்போதைக்கு கூற முடியாது என்றும் அவர் கூறினார்.
ஜெனீவா மாநாடு குறித்து கருத்துத் தெரிவித்த குழு உறுப்பினரான அமைச்சர் மஹிந்த அமரசிங்க இலங்கைக்கு அங்கத்துவ நாடுகளின் ஆதரவுகளைத் திரட்டுவதற்கான இறுதிச் சட்ட முன்னெடுப்புகள் இலங்கைக்குழுவினால் ஜெனீவா மாநாட்டின் போது பல்வேறு மட்டங்களில் மேற்கொள்ளப்படும் என்றார். கடந்த வருடத்தை விட இம்முறை இலங்கைக்கு கூடுதலான நாடுகளின் ஆதரவைப் பெறுவதற்காக இலங்கைக்குழு ஒருமித்த முயற்சியை எடுக்கும் எனவும் இதே வேளை இலங்கைக்கு எதிராக ஆதரவு திரட்டும் முயற்சிகளும் பரந்தளவில் முன்னெடுக் கப்படும் என எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அமைச்சர் அமுனுகம இந்தியா பயணம்
இதேவேளை அமைச்சர்கள் பலரும் பல்வேறு நாடுகளுக்கு சென்று இலங்கைக்கு ஆதரவு திரட்டுவதற்காக அந்த நாட்டு தலைவர்களை சந்தித்து பேச்சு நடத்தி வருகின்றனர். சிரேஷ்ட அமைச்சர் சரத் அமுனுகம, ஜனாதிபதியின் விசேட பிரதிநிதியாக இந்தியாவுக்கும் எதியோப்பியாவுக்கும் விஜயம் செய்தார். எதிர்வரும் 2ஆம் திகதி வரை இந்தியாவில் தங்கியிருக்கும் அவர் அந்த நாட்டுத் தலைவர்களை சந்தித்து பேச உள்ளதோடு, அடுத்து அவர் எதியோப்பியா செல்கிறார். அங்கு 5ஆம் திகதி வரை தங்கியிருந்து அந்த நாட்டுத் தலைவர்களை சந்திக்க உள்ளதாக அறிவிக்கப்படுகிறது. இந்திய தலைவர்களுடனான சந்திப்பில் ஜனாதிபதியின் செயலாளரும் பங்கேற்க இருப்பதாக அறிய வருகிறது. அதே வேளை ஜெனீவாவுக்கான இலங்கை குழுவில் அமைச்சர் சரத் அமுனுகமவும் இடம் பெற்றுள்ளதாக அமைச்சு வட்டாரங்கள் கூறின. அடுத்த 4ஆம் திகதி மியன்மாரில் ஆரம்பமாகும் பீட்ஸ்டெக் மாநாட்டில் ஜனாதிபதி பங்குபற்ற இருப்பதாகவும் இதன்போது இந்தியா உட்பட பல நாட்டு தலைவர்களை சந்திக்க உள்ளதாகவும் ஜனாதிபதியின் பேச்சாளர் மொஹான் சமரநாயக்க கூறினார்.