முன்னாள் பிரதமர் வாஜ்பாயை அடுத்து பா. ஜனதாவில் மூத்த தலைவராக இருந்து வருபவர், 86 வயது எல். கே. அத்வானி. கடந்த பாராளுமன்ற தேர்தலில் அத்வானி பா. ஜனதா கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு இருந்தார். ஆனால், அந்த தேர்தலில் பா. ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு பெரும்பான்மை பலம் கிடைக்காததால், அத்வானி பிரதமர் ஆகும் வாய்ப்பு கைநழுவியது.
மாறிவரும் அரசியல் சூழ்நிலையில், அடுத்த பாராளுமன்ற தேர்தலில் பா. ஜனதா கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாக கருதப்படுவதால் மீண்டும் பிரதமர் கனவில் இருந்து வந்தார். அத்வானி, ஆனால், அவருடைய எதிர்ப்பையும் மீறி குஜராத் முதல்-மந்திரி நரேந்திர மோடி பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதால் அத்வானியின் பிரதமர் கனவு தகர்ந்தது.
இந்த நிலையில் கடந்த 1 1/2 மாதங்களாக சமூக வலைத்தளத்தில் கருத்து எதுவும் தெரிவிக்காமல் ஒதுங்கி இருந்த அத்வானி நேற்று தனது அரசியல் பயணம் குறித்து கருத்து தெரிவித்து இருக்கிறார். கடந்த 55 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கிய அவருடைய அரசியல் பயணம் இன்னும் முடியவில்லை என்று, அவர் அந்த வலைத்தளத்தில் குறிப்பிட்டு இருக்கிறார். அதில் அவர் மேலும் கூறி இருப்ப தாவது:
'கராச்சியில் (தற்போது பாகிஸ்தானில் உள்ள நகரம்) எனது 14 1/2 வயதில் ஆர். எஸ். எஸ். இயக்கத்தில் இணைந்தபோது வாழ்க்கையின் அர்த்தத்தை உணர்ந்தேன். வீட்டை விட்டு வெளியேறிய நான் முதலில் கராச்சியிலும், பிரிவினைக்குப் பின் ராஜஸ்தான் மாநிலத்திலும் ஆர். எஸ். எஸ். பிரசாரகராக பணிபுரியத் தொடங்கினேன்.
அதைத் தொடர்ந்து 55 ஆண்டுகளுக்கு முன்பு எனது அரசியல் வாழ்க்கையை தொடங்கிய போது எனது வாழ்க்கையின் அர்த்தம் மேலும் மேம்படுத்தப்பட்டது. முதலில் பாரதீய ஜனசங்கத்திலும், பின்னர் பாரதீய ஜனதாவிலும் பணியாற்றி வருகிறேன். என்னுடைய இந்த அரசியல் பயணம் இன்னும் முடியவில்லை' இவ்வாறு அத்வானி கூறி இருக்கிறார்.
அடுத்த பாராளுமன்ற தேர்தலிலும் அத்வானி போட்டியிடுவார் என்று கூறப்பட்ட நிலையில், டில்லி மேல்- சபை தேர்தலில் அவர் போட்டியிடலாம் என்று தகவல் வெளியாகி இருந்தது. அதற்கு அடுத்த நாளில் அத்வானி வலைத்தளததில் இந்த கருத்தை வெளியிட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையில், மேல் - சபை தேர்தலில் அத்வானி போட்டியிடுவார் என்று வெளியான தகவலை பா. ஜனதா தலைவர் ராஜ்நாத்சிங் மறுத்து இருக்கிறார். வருகிற பாராளுமன்ற பொதுத் தேர்தலில் அவர் போட்டியிடும் தொகுதியை அத்வானி தனது விரும்பப்படி தாராளமாக தேர்வு செய்து கொள்ளலாம் என்றும் ராஜ்நாத்சிங் கூறி இருக்கிறார்.