போர்க் குற்ற விசாரணைக்கு, ஜெனிவாவில் ஆதரவு திரட்டத் தயாராகி வரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் அன்று தாம் புலிகளுடன் வைத்திருந்த உறவுகளை மறந்தும் மறைத்தும் இன்று செயற்பட்டு வருகின்றனர். இதனால், இவர்கள் புலிகளுடன் எத்தகைய உறவினை வைத்திருந்தார்கள், புலிகளின் பயங்கரவாதச் செயற்பாடுகளுக்கு எவ்வகையில் ஆதரவு வழங்கினர் என்பது குறித்த விசாரணைகள் பொலிஸ் குற்றத் தடுப்புப் பிரிவினரால் முன்னெடுக்கப் படலாம் எனத் தெரிய வருகிறது.
கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு தகவல் வெளியிட்டுள்ள பாதுகாப்பு அமைச்சின் மூத்த அதிகாரி ஒருவர், ‘விடுதலைப் புலிகளை தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகளாக அரசியல் அங்கீகாரம் அளிக்கும் வகையில், 2001 இன் பிற்பகுதி தொடக்கம் விடுதலைப் புலிகளுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட நெருக்கமான உறவை மையப்படுத்தியே இந்த விசாரணை நடத்தப்படலாம் எனவும் தெரிவித்துள்ளதாகச் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த விசாரணையின் முடிவுகளின் அடிப்படையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படவுள்ளதுடன் போரின்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் புலி ஆதரவு செயற்பாடுகள் குறித்து, அனைத்துலக சமூகத்துக்கும் தகவல் அளிக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளது. 2006 நடுப் பகுதியில், போருக்கு இட்டுச் சென்ற விடுதலைப் புலிகளின் தந்திரத்தில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எத்தகைய செல்வாக்கு செலுத்தியது என்பது குறித்து அவர்களிடம் விசாரிப்பதே தமது நோக்கமாக உள்ளது’ என்று அந்த அதிகாரி தெரிவித்ததாகவும் அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
விடுதலைப் புலிகளின் சிறுவர் போராளிகள் பயிற்சி முடித்து வெளியேறும் நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மூத்த பிரதிநிதிகள் சிலர் கலந்து கொண்டுள்ளனர்.
அதுபற்றிய ஒளிப்பட ஆதாரங்கள் தம்மிடம் உள்ளதாகவும் 2005 ஜனாதிபதித் தேர்தலைப் புறக்கணிக்க வேண்டும் என்று விடுதலைப் புலிகளின் உத்தரவுக்கமைய, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களிடம் கோரிய சூழ்நிலை குறித்தும் அவர்களிடம் விசாரணை நடத்தவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.