2/03/2014

| |

ஊடகவியலாளர் மெல்ஷியா குணசேக கூரிய ஆயுதத்தினால் கழுத்து வெட்டப்பட்ட கொலை

ஊடகவியலாளர் மெல்ஷியா குணசேக கூரிய ஆயுதத்தினால் கழுத்து வெட்டப்பட்ட நிலையில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் நேற்றுக் காலை 6.15 மணிக்கும் 8.15 மணிக்கும் இடையில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன தெரிவித்தார். பத்தரமுல்ல, கெமுனு மாவத்தையின் சுபுதிபுர பிரதேசத்திலுள்ள அவரது வீட்டில் சமையலறையில் உயிரிழந்த நிலையிலேயே சடலமாக மீட்டெடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். பொலிஸ் தலைமையகத்தில் நேற்று பிற்பகல் இடம்பெற்ற விஷேட ஊடகவியலாளர் மாநாட்டின் போது இந்தக் கொலை சம்பவம் தொடர்பில் பொலிஸ்
பேச்சாளர் மேலும் விளக்கமளிக்கையில்:
ஊடகவியலாளரின் தாய், தந்தை மற்றும் சகோதரன் நேற்றுக்காலை 6.00 மணியளவில் வழிபாட்டுக்காக வெளியில் சென்றுவிட்டு காலை 8.15 மணியளவில் வீட்டுக்கு மீண்டும் திரும்பியுள்ளனர்.
வீட்டிற்குள் நுழைந்த அவர்கள் தனது மகள் வீட்டின் சமையலறையில் இரத்த காயங்களுடன் விழுந்து கிடந்துள்ளதைக் கண்டு அதிர்ச்சியுற்ற அவர்கள் உடனடியாக அருகிலுள்ள பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.
முறைப்பாட்டை அடுத்து உடனடியாக ஸ்தலத்திற்கு விரைந்த பொலிஸார் கூரிய ஆயுதத்தினால் கழுத்து வெட்டப்பட்டு விழுந்த கிடந்த நிலையில் மெல்ஷியா குணசேகரவை மீட்டெடுத்துள்ளனர்.
1997 ஆம் ஆண்டு முதல் 2012ம் ஆண்டு வரை பரான்ஸ் செய்தி சேவையான (அஸோஸியேட் பிரஸ் - ஏ. பி) செய்தி நிறுவனத்தின் வர்த்தக செய்திகள் தொடர்பிலான ஊடகவிய லாளராக செயற்பட்டு வந்து அவர் தற்போது உலக வர்த்தக நிலையத்திலுள்ள நிறுவனம் ஒன்றில் சேவையாற்றி வருகின்றார்.
இவரது மர்மக் கொலை தொடர்பில் விரிவாக ஆராய்ந்து விசாரணை நடத்தவெனன பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஒருவர் மற்றும் நுகேகொட பிரிவு பொலிஸ் அத்தியட்சகர் தலைமையில் விசேட குழுக்கள் உடனடியாக நியமிக்கப்பட்டுள்ளன. குற்றச் செயல்கள் தொடர்பிலான தடயவியல் நிபுணத்துவம் பெற்ற பொலிஸ் குழுவும் விரல் அடையாளங்கள் தொடர்பிலான ஆராயும் குழுவும் உடனடியாக ஸ்தலத்திற்கு அழைக்கப்பட்டனர்.
இந்தச் சம்பவம் திட்டமிட்ட கொலையா? எவ்வாறு இடம்பெறுள்ளது. யார் இதனை மேற்கொண்டனர். போன்ற விடயங்கள் தொடர்பாக விசாரணைகள் முடுக்கிவிடப்பட்டதுடன் பல்வேறு கோணங்களில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டது.
இந்நிலையில் நேற்று நண்பகல் கொலை இடம்பெற்ற இடத்திலிருந்து விரல் அடையாளம் ஒன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
மேற்படி ஊடகவியலாளர்ரின் வீட்டில் நான்கு நாய்கள் வளர்க்கப்பட்டு வருகின்றது.
எனினும் சம்பவம் நடைபெற்ற நேரத்திற்குள் எந்த ஒரு நாயும் குரைக்கவில்லை என்பது ஆரம்பக் கட்ட விசாரணைகளிலிருந்து தெரிய வந்துள்ளது.
இதனையடுத்து இந்த கொலைச் சம்பவத்திற்கு பின்னால் உள்ள மர்மம் தொடர்பில் விரிவாக ஆராய்ந்து வருகின்றனர்.
இதேவேளை, குறித்த ஊடகவியலாளரின் எதிர் மற்றும் அயல் வீட்டின் வெளிப்பகுதியில் பொருத்தப்பட்ட சிசி. ரி. வி. கெமராக்களில் சில காட்சிகள் பதிவாகி இருக்கலாம் என்ற அடிப்படையில் அந்தக் காட்சியையும் பெற்றுக்கொண்டு விசாரணைகளை துரிதப்படுத்த பொலிஸார் தீர்மானித்துள்ளதாக பொலிஸ் பேச்சாளர் சுட்டிக்காட்டினார். சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு விரைந்த கடுவெல பதில் மஜிஸ்திரேட் கமல் விஜேசிறி மஜிஸ்திரேட் பரிசோதனைகளை மேற்கொண்டதுடன் பிரேத பரிசோதனை நடத்துமாறு உத்தரவிட்டுள்ளார்.
இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் விரைவில் கைது செய்யப்படுவார் என்று தொடர்ந்து பொலிஸ் பேச்சாளர் கொலைச் சம்பவத்திற்கான காரணம் உடனடியாகத் தெரிய வரவில்லை. விசாரணைகளுக்குப் பின்னரே உறுதிப்படுத்த முடியும் என்றார்.