2/25/2014

| |

மட்டக்களப்பை தாய்வீடாகக் கருதி மக்களுக்கு பணி புரியவென்றே வாழ்ந்தவர் வெபர் அடிகளார்

இலங்கை மண்ணில் திருகோணமலை மறை மாவட்டம் என்கின்ற பெயரில் புதிய நிர்வாக அலகொன்றினைக் கத்தோலிக்கத் திருச்சபை உருவாக்கியது. 12 ஆம் பத்திநாதர் பாப்பரசர் அதற்கான அங்கீகாரத்தை வழங்கியிருந்தார்.
இந்த புதிய மறை மாவட்டமானது நன்கு அடித்தளமிட்டு ஆரம்பிக்கப்பட வேண்டும் என்கின்ற நோக்கில் பிரான்ஸ் தேசத்தின் ஷம்பெய்ன் மாநில இயேசு சபைத் துறவிகளிடம் அது ஒப்படைக்கப்பட்டது.
அது மட்டுமல்லாது அந்நாட்களில் அந்தப் பொறுப்பினை ஏற்று செயற்படுமளவுக்குப் போதிய குருக்களும் உள்நாட்டில் இருக்கவில்லை. நீண்ட காலமாக தமது கடும் உழைப்பால் புதிய மறை மாவட்டத்தை உருவாக்கி திருகோணமலை, மட்டக்களப்பு, கல்முனை ஆகிய பகுதிகளில் கல்வி முதல் ஆன்மீகம் வரையிலும் முன்கொண்டு சென்ற அந்தத் துறவிகள் இரண்டாம் உலகப் போரின் போது பிரான்ஸ் தேசம் அனுபவித்த கொடிய துன்பத்தின் விளைவாகத் தொடர்ந்தும் சேவையாற்ற போதிய ஆள்பலமும் நிதி வசதியும் அற்றுப் போன நிலை உருவாகவே அமெரிக்க தேசத்தின் நியூ அர்லியன்ஸ் மாகாணத்தின் இயேசு சபைத் துறவிகளின் உதவியை நாடினர்.
தொடக்கத்தில் ஆசையும் ஆர்வமும் எழுந்தாலும் பெரிய அளவில் பலன் இருக்கவில்லை. இருப்பினும் நாளடைவில் அங்கிருந்து புதிய துறவிகள் முன்வந்து தாம் கேட்டிராத கண்டிராத அந்தப் பூமிநோக்கி ‘இறைவனின் திராட்சைத் தோட்ட ஊழியர் நாம்’ என்கின்ற தொண்டு மனப்பான்மையுடன் இலங்கை வந்து சேர்ந்தனர்.
அவர்களது முக்கிய பணித்தளமாக மட்டக்களப்பு, திருகோணமலை, கல்முனை, காலி போன்ற பகுதிகள் அமைந்திருந்தன.
இந்த வகையில் 1947 ஆம் ஆண்டில் சுமார் 36 நாட்கள் கப்பல் பயணத்தை மேற்கொண்டு இலங்கை வந்து சேர்ந்த துறவிதான் ஹரல்ட் ஜோன் வெபர் என்கின்ற இயேசு சபைக் குரு. மட்டக்களப்பு என்று செய்த தவமோ தெரியவில்லை. அவரை தன்னகத்தே கொண்டிருக்கும் பாக்கியத்தை அது பெற்றிருந்தது.
அவர் முதலில் புனித மிக்கேல் கல்லூரியின் மாணவர் ஆலோசகராக நியமிக்கப்பட்டார். மாணவர்களை நல்வழிப்படுத்தும் பணியோடு தன்னை நிறுத்திக் கொண்டு விடாமல் படிப்படியாக மாணவர்களது விளையாட்டுத் திறனை விருத்தி செய்யும் பணியிலும் தன்னை அர்ப்பணித்துக் கொண்டார். அதனால் சுவடுகள போட்டிகளுள் அவர் வந்த இரண்டு வருட காலத்துக்குள்ளேயே தேசிய மட்டத்தில் முதல் தரத்துக்கு புனித மிக்கேல் கல்லூரி மாணவர்களைக் கொண்டு சென்ற பெருமை அவரையே சாரும்.
கிரிக்கெட் துறையைப் பொறுத்த வரையிலும் மாணவர் மத்தியில் இருந்த அடிப்படையான திறனை மெருகுபடுத்தி அதை மென்மேலும் பிரகாசிக்கச் செய்தவர் அருட் தந்தை வெபர் அடிகள்.
மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியானது கூடைப் பந்தாட்டத்திற்குப் பெயர் போனது. அதுவரை கால்பந்தாட்ம், கரப்பந்தாட்டம், கிரிக்கெட் மற்றும் சுவடுகள் போட்டிகள் என்ற அளவிலே மட்டுப்படுத்தப்பட்டிருந்த மாணவர் திறனுக்கு தீனியாக இங்கு வந்த அமெரிக்கா இயேசு சபைத் துறவிகள் அறிமுகப்படுத்திய கூடைப்பந்தாட்டத்தில் முழு இலங்கைத் தீவுக்குமே முன்மாதிரியாக அந்தக் கல்லூரி விளங்கிய காலகட்டம் ஒன்று இருந்தது.
அதற்கு உதவியாக ஒரு அதிசிறந்த கூடைப் பந்தாட்டத் திடலை உருவாக்கி அதில் தண்டவாளங்களில் பாவிக்கப்படும் இரும்புச் சட்டங்களைக் கொண்டு தொழில்நுட்ப அறிவு கொண்ட அருட் தந்தை ரீமன் அவர்களின் உதவியுடன் விளைத்தெடுத்து அற்புதமான கூடைதாங்கி இரண்டை இரு பக்கங்களிலும் நிறுவினார். அந்நாளைய நியமங்களின்படி இத்தகைய பணியொன்றை உள்ளூரில் செய்து முடிப்பதென்பது ஒருமலைப்பான காரியமேயாகும்.
அறுபதாம் ஆண்டு வரை மட்டக்களப்பில் சொல்லத்தக்கதாக ஒரு விளையாட்டுத் திடல் இருந்ததில்லை. கோட்டையை அண்டியும், வின்சன்ட் மகளிர் கல்லூரிக்கு முன்னராகவும் ஒரு பழைய சேமக்காலை இருந்து வந்தது. தனது சொந்த முயற்சியால் அந்த சேமக்காலையை அப்புறப்படுத்தி இடம் மாற்றிவிட்டு, கல்லோயா திட்டத்திற்கென பயன்பட்ட கனரக இயந்திரங்களை வாடகைக்கு அமர்த்தி கொண்டு திடலாக்கி அதை சமப்படுத்தி ஒரு முற்றவெளியை அவர் அமைத்துக் கொடுத்தார்.
அவரது முயற்சியின் காரணமாக அதில் பார்வையாளர் அரங்கொன்றையும் அமைக்கப் பண்ணினார். அது இற்றைநாள் வரை அவர் பெயரிலேயே வெபர் விளையாட்டரங்கு என்று மட்டக்களப்பு மாநகர சபையால் பெயர் சூட்டப்பட்டு அழைக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. அந்த மைதானம் அவருக்கோர் நினைவுச் சின்னம்.
அந்த மைதானத்தை புனித மிக்கேல் கல்லூரியின் பாவனைக்கென்று மட்டும் அவர் உருவாக்கவில்லை. ஏனைய சுற்றயல் பாடசாலைகளும், விளையாட்டு பிரியர்களும் பயன்படுத்தவே உருவாக்கினார். தினமும் காலை, மதியம், பிற்பகல் என்றில்லாமல் தோளில் ஒரு பையையும் தொங்கவிட்டுக் கொண்டு மைதானத்துக்குள் இறங்கி விடுவார்.
தன் கைகளால் கல் பொறுக்கி முள்பொறுக்கி பைக்குள் போட்டுக் கொண்டு ஒதுக்குப் புறமாக அவற்றை அப்புறப்படுத்தி விடுவார். இதனால் அவரைச் சுற்றிலும் இளையோர் கூட்டம் மொய்த்திருக்கும். அவர்களும் கல், முள் பொறுக்கி அவருடைய பையில் போட்டு விடுவதைக் காணக் கூடியதாக இருக்கும்.
கல்லூரியில் பெண்களும் படித்த காலத்தில் வலைப்பந்தாட்டம் மற்றும் கூடைபந்தாட்ட அணிகளை உருவாக்கி அவர்கள் ஆண்களுக்கு எவ்வகையிலும் சளைத்தவர்களல்ல என்பதை நிரூபிக்கப் பண்ணினார். அவர் எல்லா விளையாட்டுக்களையும் அத்துப்படியாக அவற்றின் விதிமுறைகளோடு அறிந்து வைத்திருந்தார்.
விளையாட்டில் அவர் ஒன்றும் பெரும் வீரனாக இருந்திருக்கவில்லை. விளையாட்டின் வழியே இளைஞர்களை உருவாக்கும் தனது ஆசையை நிறைவேற்றவே அவர் தம்மை முற்று முழுதாக அந்தத் துறையில் ஈடுபடுத்திக் கொண்டார். பல விளையாட்டு அமைப்புக்களை மட்டக்களப்பில் உருவாக்கினார். அவற்றை தலைமை தாங்கி வழிநடத்தவும் செய்தார். அவரில்லாத விளையாட்டுத்துறை மட்டக்களப்பில் இருந்தது கிடையாது. மட்டக்களப்பு மண்ணின் விளையாட்டுச் சின்னமாக அவர் இருந்தார்.
பாடசாலை மாணவர்கள் மத்தியில் அவருக்குப் பெரும் செல்வாக்கு இருந்தது. அவரை வாயால் செல்லமாக அழைக்கப்பட ஏங்கி நின்ற மாணவர் ஏராளம். ஒவ்வொரு மாணவனையும் தனித்தனியாக அழைப்பித்து அவர்களுடைய எதிர்காலம் குறித்து அவர்க ளுடைய நடைமுறைகள் குறித்து கேட்டறிவார். நல்லவர்களாக அவர்கள் வாழ அறிவுரை பகர்வார்.
சாதி, மத, இன பேதமெல்லாம் கடந்த மனிதராக அவர் இருந்தார். மாணவர்களின் ஆன்மீகத்தை வளம்படுத்த சிறுபராயம் முதல் நற்கருணை வீரர் சபை, மாதா சபை போன்ற பல அமைப்புகளில் அவர்களை ஈடுபடுத்தி நல்வழிசெல்ல உதவினார். உயர்தர வகுப்பு மாணவர்களுக்கு சமயம் படிப்பிக்கும் போதெல்லாம் குடும்பம் ஒன்றின் உயர் பெறுமானங்களை எடுத்துச் சொல்லி அவற்றை மதித்து வாழச்சொல்லிக் கொடுப்பார். வருடாந்த தியானங்கள், சந்தர்ப்பங்கள் கிடைக்கும் போதெல்லாம் திருப்பலி என்று மாணவர்களை அருள் வழியில் நடக்கப் பண்ணிய ஞானத் தந்தை அந்த அருட் தந்தை வெபர் அடிகளார்.
பிரச்சினைக்குரிய காலப் பகுதியில் துடிப்பான மாணவர்களை தெருக்களில் சுற்றித்திரிந்து ஆபத்துக்களில் மாட்டிக் கொள்ளாது காப்பதற்காக தங்கள் இயேசு சபை இல்லத்தில் ஒரு சிறுபடக் கொட்டகை அமைத்து நல்ல பெறுமானங்களைக் வெளிப்படுத்த கூடிய சிறியவர்களுக்கு ஆர்வத்தை கொடுக்கவல்ல கார்ட்டூன் படங்களை வீடியோவில் போட்டுக் காட்டி பாதுகாத்துக் கொடுத்தவர்.
அவருக்கு இலங்கை தமிழர்களுடைய வார்த்தை உச்சரிப்பு மிகவும் பிடித்தமானது. ‘நீங்கள் தமிழை உச்சரிக்கும் போது நெஞ்சின் அடியிலிருந்து அதன் நாதம் பிறந்து வருகிறது. மேகம் என்று சொல்லிப்பார். அதன் ஒலி எங்கிருந்து வருகிறது? இதனால் தான் உங்களுடைய உறவும் நெஞ்சில் அடித்தளத்தினின்றும் வருகிறது என்று நான் முற்றிலும் ஏற்கிறேன்’ என்பார் அவர். அவர் எந்த அளவுக்கு எங்களையும் இந்த மண்ணையும் நேசித்தார் என்பதற்கு ஒரு நல்ல சம்பவம் இருக்கிறது.
வெபர் அடிகள் பேசினால் இடி முழங்குவது போலிருக்கும். பாடசாலை மாணவர் மத்தியில் அவர் பேசவரும் போது ஒலி வாங்கியை அலாக்காகத் தூக்கி ஒரு பக்கமாக வைத்து விட்டுத்தான் பேசத் தொடங்குவார். அவர் பேசினால் அதை அயல் தெருவால் போகிறவர்கள் தெளிவாகக் கேட்கக் கூடியதாகவிருக்கும்.
துரதிஷ்டவசமாக அவரது தொண்டையில் புற்று நோய் ஏற்பட்டது. அதிர்ச்சியில் கல்லூரியே உறைந்து போனது. அதற்கான சத்திர சிகிச்சைக்காக அவரது நண்பர்கள், உறவினர்கள் கேட்டதற்கிணங்க அமெரிக்க சென்றார்.
சத்திர சிகிச்சை முடிந்த கையோடு பெற வேண்டிய தொடர் சிகிச்சைகளையும் பெற்றுக் கொண்டு மட்டக்களப்பிற்கு வந்து விட்டார் மனிதர்.
வந்த மறுநாளே மாணவர்கள் மத்தியில் பேசவந்தார். ஒலி வாங்கியை தூக்கி ஒரு பக்கம் வைக்கவில்லை. தொண்டையிலிருந்து சத்தம்வரவில்லை. அழுதார். அவர் கண்ணீர் விட்டு அழுதார். ஒருவாறாக அடைத்த குரலின் எங்களுக்கெல்லாம் நன்றி சொல்லி விட்டு, எங்களைப் பார்க்கத் திரும்பவும் ஓடி வந்ததாகச் சொன்ன போது ஈரமில்லாக் கண்கள் ஒன்றும் அங்கிருக்கவில்லை.
தொடர்ந்து தமது பணியில் ஈடுபட்டுத் தனது பயிற்சிகளின் மூலம் குரல் வளத்தை மீட்டுக் கொண்டு வரும்வேளையில் இரண்டாவது தடவையாகவும் அதே இடத்தில் புற்றுநோய். தாய் நாடு சென்றார்.
சிகிச்சை முடிந்ததும் அவரது வைத்தியர்கள், உறவினர்கள், நண்பர்கள், இயேசு சபையினர் அவரை அமெரிக்காவிலேயே தங்கிவிடும்படி வற்புறுத்தியிருக்கிறார்கள். தொடர்ந்த கண்காணிப்புக்கு அவர் உட்பட வேண்டியது அவசியம் என்று வலியுறுத்தியிருக்கிறார்கள். நான் இறப்பதாக இருந்தாலும் மட்டக்களப்பு மண்ணிலேயே அது இடம்பெற வேண்டும் என்று கூறி இங்கு ஓடோடி வந்து விட்டார். அதை எங்களுடன் பகிர்ந்து கொண்டு ‘நான் உங்களோடு இருக்கவே விரும்புகின்றேன்’ என்று சொன்னார். அவர் சொன்னபடி இறுதி மட்டும் எங்களோடே வாழ்ந்தார்.
1998 இல் அவர் தன்னை இறைவனிடம் ஒப்படைத்துக் கொண்டார். அவரைப் பிரிய விரும்பாத அவரது பிள்ளைகள் நாங்கள். அவரது பூதவுடலைத் தக்க மரியாதையுடன் கல்லூரி வளாகத்லேயே சமாதி செய்தோம்.
அவரது நூறாவது பிறந்தநாள் நிகழ்வுகள் மட்டக்களப்பில் நடைபெற்றன. இந்த நேரத்தில் வரவுள்ள ஆண்டு முழுவதும் அவரை கனம் பண்ணத்தக்கதாக நடைபெறவுள்ள நிகழ்வுகளில் பங்களாளர்களாக அமைவதோடு தன்னை ஒறுத்து தன் நாட்டை விடுத்து உறவுகளின் பாசத்தை ஒதுக்கி, புகுந்த மண்ணைத் தன் தாய் மண்ணாகக் கருதி நம் அனைவருக்காகவும் வாழ்ந்து நின்ற அவரை நினைவிற் கொள்வோம். அவர் எமக்காகச் செய்த எண்ணிறைந்த பணிகளை மனதிற் கொள்வோம். அவருக்கான சம்பாவனையை மறுவாழ்வில் நிறையவே வழங்கியருள இறைவனை இறைஞ்சுவோம்.