2/14/2014

| |

தேசிய ரீதியில் ஆட்சேர்க்கும் போது திறமையின் அடிப்படையிலும், கிழக்கு மாகாணத்தில் ஆட்சேர்க்கும் போது இனவிகிதாசாரமும் பின்பற்றப்படுவதும் அநீதியாகும்- தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி

கிழக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவினால் மாகாணத்தில் வெற்றிடமாகவுள்ள முகாமைத்துவ உதவியாளர் வெற்றிடங்களை நிரப்பவதற்காக மேற்கொள்ளப்பட்ட போட்டிப் பரீட்சையும் அதனோடு இணைந்ததாக மாகாண பிரதிப் பிரதம செயலாளர் (நிருவாகம்) அவர்களினால் மேற்கொள்ளப்பட்டுள்ள நேர்முகத் தேர்வு இநியமனம் வழங்களில் தமக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக தமிழ் விண்ணப்பதாரி ஒருவரினால் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்கொன்று தாக்கல் செய்யப்பட்டிருப்பது தொடர்பிலும் இம் முகாமைத்துவ உதவியாளர் ஆட்சேர்ப்பில் தமக்கு அநீதி இழைக்கப்படுவதாக தமிழ் பேசும் விண்ணப்பதாரிகளால் தொடர்ச்சியாக கிடைக்கப்பெறுகின்ற முறைப்பாடுகள் தொடர்பிலும் பொறுப்பு மிக்க அரசியல் கட்சி என்ற வகையில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி இவ் விடயத்தில் ஆழ்ந்த கவனமும் கரிசனையும் செலுத்துகிறது.
கிழக்கு மாகாணத்தில் திறமையின் அடிப்படையில் அல்லாமல் இன ரீதியான விகிதாசார அடிப்படையில் இந் நியமனங்களை வழங்க முயன்றமையினாலேயே தமிழ்,முஸ்லிம் விண்ணப்பதாரிகளுக்கு அநீதி இழைக்கப்படுகிறது. அதுவும் அவ் இன விகிதாசார பின்பற்றலானது புதிதாக மேற்கொள்ளப்படுகின்ற முகாமைத்துவ உதவியாளர் நியமனத்தை மட்டும் கவனத்தில் கொள்ளாமல் ஏற்கனவே கிழக்கு மாகாணத்தில் சேவையினைப் பெற்ற ஒட்டு மொத்த முகாமைத்துவ உதவியாளர்களையும் கவனத்தில் கொண்டு விகிதாசாரப் படி கிழக்கு மாகாணத்தில் சிங்கள அரச சேவை உத்தியோகத்தர்கள் போதுமானதாக இல்லை என்ற அடிப்படையில் இப்புதிய நியமனம் வழங்குவதற்கு அவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுவதனால் திறமையாக சித்தியெய்திய தமிழ், முஸ்லிம் விண்ணப்பதாரிகளுக்கு அநீதி இளைக்கப்படுகின்றது.
அரச சேவையில் பணியாளர்களை இணைத்துக் கொள்ளும் போது கிழக்கு மாகாணத்தில் பின்பற்றப்படுகின்ற இனவிகிதாசார முறைமையானது கிழக்கு மாகாணத்தில் மட்டும் மட்டுப்படுத்தாமல் அதனை தேசிய ரீதியான கொள்கையோடு மாற்றி அரச சேவையில்  இணைத்துக் கொள்ள அரசாங்கம் முன்வரவேண்டும்.
இலங்கையின் உயர்நிலை பதவிநிலைகளான இலங்கை நிர்வாக சேவை, இலங்கை கல்வி நிருவாக சேவை, இலங்கை வெளிவிவகார சேவை, இலங்கை திட்டமிடல் சேவை, இலங்கை கணக்காளர் சேவை போன்றவற்றுக்கான ஆட்சேர்ப்பில் சிறுபான்மை சமூகங்களுக்கு அவர்களின் தேசிய இன விகிதாசாரத்திற்கு ஏற்ற ஆட்சேர்ப்பு கிடைப்பதில்லை. அண்மைக்காலமாக இவ்வாறான உயர்நிலை அரச பணிகளுக்கு தேர்வு செய்யப்படுகின்ற தமிழ், முஸ்லிம் சமூகங்களை சேர்ந்தவர்களின் எண்ணிக்கை மிக மிக குறைவாகவே உள்ளது.
கிழக்கு மாகாணத்தில் பின்பற்றப்படுகின்ற இன விகிதாசார முறைமை தேசிய அளவில் பின்பற்றப்பட்டால் போதுமான சிறுபான்மை சமுகத்தவர்களும் உயர்பதவிகளை வகிக்க முடியும். தேசிய ரீதியில் ஆட்சேர்க்கும் போது திறமையின் அடிப்படையிலும், கிழக்கு மாகாணத்தில் ஆட்சேர்க்கும் போது இனவிகிதாசாரமும் பின்பற்றப்படுவதும் அநீதியாகும்.
நாடளாவிய ரீதியில் ஆட்சேர்ப்பில் ஒரே கொள்கையே பின்பற்றப்பட வேண்டும். குறிப்பிட்ட ஒரு இனத்தின் நன்மைக்காக மாத்திரம் தேசிய ரீதியிலும் மாகாண ரீதியிலும் மாறுபட்ட கொள்கைகளை கடைப்பிடிப்பது அரசியலமைப்பின் படி முரண்பாடானதும் இனங்களிடையே நல்லிணக்கத்தை ஏற்ப்படுத்தவும் தடையாகவும் அமையும்.
எனவே இது தொடர்பில் கிழக்கு மாகாண ஆளுனர் ,மாகாண அமைச்சர் வாரியம் ,மாகாண சபை என்பன குறுகிய அரசியல் லாபங்களுக்கு அப்பால் கிழக்கு மாகாண இன நல்லினக்கத்தை சீர் குழைக்காமல் அதனை பாதுகாத்து செயற்பட முன்வர வேண்டும்.
பூ.பிரசாந்தன்
பொதுச்செயலாளர் 
தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி