* நடிகைகள், புதுமுகங்கள் பலர் தேர்தலில் குதிப்பு
* அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மனு களுத்துறை மாவட்டத்தில் நிராகரிப்பு
* 5 சுயேச்சைகளும் நிராகரிக்கப்பட்டன
மேல் மற்றும் தென் மாகாண சபைகளுக்கான தேர்தல் எதிர்வரும் மார்ச் 29 ஆம் திகதி நடைபெறும் என தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய நேற்று அறிவித்தார். 155 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக நடைபெறும் இந்த தேர்தலில் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்கள் சார்பில் 3794 பேர் போட்டியிடுகின்றனர்.
இம்முறை தேர்தலின் போது ஒரு அரசியல் கட்சியினதும் 5 சுயேச்சைக் குழுக்களினதும் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டதாக தேர்தல்கள் ஆணையாளர் அறிவித்துள்ளார்.
இம்முறை தேர்தலில் 24 அரசியல் கட்சிகள் போட்டியிடுகின்றன. இதில் ஐ. ம. சு. மு., ஐ. தே. க., மக்கள் விடுதலை முன்னணி, எக்ஸத் லங்கா பொதுஜன கட்சி எக்ஸத் லங்கா மகா சபா, தேசப்பற்று தேசிய முன்னணி, ஜனநாயகக் கட்சி, ஸ்ரீலங்கா தொழில் கட்சி, ஜனசெத பெரமுன ஆகிய 9 கட்சிகள் ஆறு மாவட்டங்களிலும் போட்டியிடுகின்றன. மேல் மற்றும் தென் மாகாண சபை தேர்தல்களுக்கான வேட்பு மனுக்கள் ஜனவரி 31 முதல் நேற்று நண்பகல் 12.00 மணி வரை ஏற்கப்பட்டன. பிரதான கட்சிகள் நேற்று முன்தினமும் நேற்றும் இறுதி நேரத்தில் தமது வேட்புமனுக்களை கையளித்திருந்தன.
இறுதி நாளான நேற்று வேட்புமனுக்கள் ஏற்கப்படும் மாவட்ட செயலகங்களுக்கு அருகில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. வேட்புமனு ஏற்கும் காலம் முடிவடைந்த பின் ஆட்சேபனை முன்வைக்க இம்முறை கால அவகாசம் வழங்கப்படவில்லை.
மேல் மாகாணம்
மேல் மாகாணத்தில் இருந்து தேர்தல் மூலம் 102 பேரும் போனஸ் ஆசனம் மூலம் இருவரும் தெரிவாகின்றனர். மேல் மாகாணத்தில் அரசியல் கட்சிகள் சார்பாக 1658 பேரும் சுயேச்சைக் குழுக்கள் சார்பில் 1085 பேருமாக மொத்தம் 2743 பேர் போட்டியிடுகின்றனர்.
இம்முறை தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் இருந்தே கூடுதலான கட்சிகளும் சுயேச்சைக் குழுக்களும் போட்டியிடுவதாக தேர்தல் திணைக்களம் தெரிவித்தது. கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட 18 கட்சிகளும் 15 சுயேச்சைக் குழுக்களும் வேட்புமனுத் தாக்கல் செய்திருந்தன. இதில் 4 சுயேச்சைக் குழுக்களின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப் பட்டன. கொழும்பு மாவட்டத்தில் ஐ. ம. சு. மு, ஐ. தே. க., ஜே. வி. பி., முஸ்லிம் காங்கிரஸ், இ. தொ. கா., ஜனநாயக மக்கள் முன்னணி, தேசிய மக்கள் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் கட்சி அடங்கலான பல கட்சிகள் களத்தில் குதித்துள்ளன.
களுத்துறை மாவட்டம்
களுத்துறை மாவட்டத்தில் 14 கட்சிகளும் 10 சுயேச்சைக் குழுக்களும் வேட்பு மனுத் தாக்கல் செய்தன. இதில் தேசிய மக்கள் காங்கிரஸின் வேட்பு மனுவும், சுயேச்சைக் குழு ஒன்றினது வேட்பு மனுவும் நிராகரிக்கப்பட்டன. இங்கு ஐ. ம. சு. மு, ஐ. தே. க., ஜே. வி. பி., ஜனநாயக கட்சி, முஸ்லிம் காங்கிரஸ் என்பனவும் போட்டியிடுகின்றன. கட்சிகள் சார்பில் 325 பேரும் சுயேச்சை
குழுக்கள் சார்பில் 225 பேரும் போட்டியிடுகின்றனர்.
கம்பஹா மாவட்டம்
கம்பஹா மாவட்டத்தில் 9 சுயேச்சைக் குழுக்களும் 13 அரசியல் கட்சிகளும் போட்டியிடுகின்றன. இங்கு எந்த கட்சியினதும் வேட்புமனு நிராகரிக்கப்பட வில்லை. ஐ. ம. சு. மு, ஐ. தே. க., ஜே. வி. பி., ஜனநாயகக் கட்சி, மு. கா. உட்பட 13 கட்சிகள் சார்பில் 559 பேரும் சுயேச்சைக் குழுக்கள் சார்பில் 387 பேரும் போட்டியிடுவதாக தேர்தல் திணைக்களம் தெரிவித்தது.
தென் மாகாணம்
தென் மாகாணத்தில் இருந்து 53 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக நடைபெறும் தேர்தலில் 1051 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இது தவிர போனஸ் ஆசனம் மூலம் இருவர் தெரிவாகின்றனர்.
தென் மாகாண சபைக்கான தேர்தலில் போட்டியிடுவதற்காக காலி மாவட்டத்தில் இருந்து 14 அரசியல் கட்சிகளும் 4 சுயேச்சைக் குழுக்களும் போட்டியிடுவதாக காலி தெரிவத்தாட்சி அதிகாரி தெரிவித்தார்.
மாத்தறை மாவட்டத்தில் 10 கட்சிகளும் 5 சுயேச்சைக் குழுக்களும் போட்டியிட உள்ள அதேவேளை ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் 9 அரசியல் கட்சிகளும், 4 சுயேச்சைக் குழுக்களும் போட்டியிடு கின்றன. தென் மாகாண சபைக்கு போட்டியிடும் எந்த ஒரு கட்சியினதோ சுயேச்சைக் குழுவினதோ வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
காலி மாவட்டம்
காலி மாவட்டத்துக்கான ஐ. ம. சு. மு. வேட்பு மனு சுதந்திரக் கட்சி மாவட்டத் தலைவர் சிரேஷ்ட அமைச்சர் பியசேன கமகே, பிரதி சபாநாயகர் சந்திம வீரக்கொடி, முன்னாள் முதலமைச்சர் சான் விஜேலால் த சில்வா ஆகியோரினால் கையளிக்கப்பட்டது. ஐ. ம. சு. மு. முதன்மை வேட்பாளராக முன்னாள் முதலமைச்சர் சான் விஜேலால் போட்டியிடுகிறார்.
ஐ. தே. க. வேட்புமனு கட்சி பேச்சாளர் ஜயந்த கருணாதிலக தமையிலான குழுவினால் கையளிக்கப்பட்டது. ஐ. தே. க. முதன்மை வேட்பாளராக அசோக தனவங்ச போட்டியிடுகிறார். ஜே. வி. பி. முதன்மை வேட்பாளராக முன்னாள் மாகாண சபை உறுப்பினர் நளின் ஹேவகே போட்டியிடுகிறார்.
22 பேரைத் தெரிவு செய்வதற்கான தேர்தலில் அரசியல் கட்சிகள் சார்பில் 350 வேட்பாளர்களும் குழுக்கள் சார்பில் 100 வேட்பாளர்களும் போட்டியிடுவதாக அறிவிக்கப்படுகிறது. ஐ. ம. சு. மு. சார்பில் காலி மாநகர சபை உறுப்பினர் சட்டத்தரணி நிலாமும் ஐ. தே. க. சார்பில் மாநகர சபை எதிர்க் கட்சித் தலைவர் பயாஸ் லதீப் ஆகியோர் போட்டியிடு கின்றனர்.
மாத்தறை மாவட்டம்
மாத்தறை மாவட்டத்தில் ஐ. ம. சு. மு., ஐ. தே. க., ஜே. வி. பி., ஜனநாயகக் கட்சி உட்பட 10 கட்சிகள் போட்டியிடுகின்றன. ஐ. ம. சு. மு. முதன்மை வேட்பாளராக முன்னாள் மாகாண அமைச்சர் சந்திம ராசபுத்ர போட்டியிடுகிறார். இது தவிர 5 தமிழ் முஸ்லிம் வேட்பாளர்கள் மாத்தறை மாவட்டத்தில் போட்டியிடு கின்றனர்.
17 பேரை தெரிவுசெய்வதற்காக இங்கு 380 பேர் போட்டியிடுகின்றனர்.
ஐ. ம. சு. மு. வேட்புமனு அமைச்சர் டளஸ் அழஹப்பெரும அடங்கலான குழுவினால் கையளிக்கப்பட்டது. ஐ. தே. க.முதன்மை வேட்பாளராக விஜேவிக்ரமவும் போட்டியிடுகிறார்.
ஹம்பாந்தோட்டை மாவட்டம்
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி தனது வேட்புமனுவினை ருஹுனு ஹம்பாந்தோட்டை மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவர் சட்டத்தரணி நாமல் ராஜபக்ஷ எம்.பியினால தாக்கல் செய்யப்பட்டது.
இவருடன் முன்னாள் தென் மாகாண சபை தலைவர் சோமவன்ச கோதாகொட முன்னாள் அமைச்சர் டீ. வீ. உபுல் ஆகியோரும் வருகை தந்திருந்ததோடு ஐக்கிய லங்க மகா சபை, இலங்கை தொழிலாளர் கட்சி, ஐக்கிய இலங்கை பொதுமக்கள் கட்சி என்பனவும் வேட்புமனுக்களினை தாக்கல் செய்தன. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியினரை வரவேற்க பெருந்திரளான மக்கள் வருகை தந்திருந்ததோடு இவர்களுடன் அமைச்சர்களான ஜீ. எல். பீரிஸ், ஜோன்ஸ்டன் பிரணாந்து ஆகியோரும் வந்திருந்தனர்.
தென் மாகாண சபைத் தேர்தலில் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் ஒன்பது (09) அரசியல் கட்சிகளும் நான்கு சுயேச்சை குழுக்களும் போட்டியிடவுள்ளன. இதில் 221 பேர் போட்டியிடவுள்ளதோடு இவர்களிலிருந்து 14 பேர் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலிருந்து தென் மாகாண சபைக்கு தெரிவு செய்யப்படவுள்ளனர்.
ஜனசெத பெரமுன, ஜனநாயகக் கட்சி, மக்கள் விடுதலை முன்னணி, நாட்டுப் பற்றுள்ள தேசிய முன்னணி, ஐக்கிய இலங்கை பொதுமக்கள் கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, ஐக்கிய லங்கா மகா சபை மற்றும் இலங்கை தொழிலாளர் கட்சி உடன் நான்கு சுயேச்சைக் குழுக்களும் போட்டியிடவுள்ளன. ஹம்பாந்தோட்டையில் அரசியல் கட்சிகள் சார்பில் 153 பேரும் சுயேச்சைக் குழுக்கள் சார்பில் 68 பேரும் போட்டியிடுகின்றனர்.
மேல் மாகாணத்தில் 102 உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக 40,24,614 வாக்காளர்களும், தென் மாகாணத்தில் 53 உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக 18,73,804 வாக்காளர்களும் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.