1/15/2014

| |

மட்டக்களப்பு மாமங்கேஸ்வரர் ஆலயத்தில் பிரதமர் தி. மு. ஜயரட்ன

இன, மத வேறுபாடின்றி சகலரும் சமத்துவத்துடன் வாழ அரசாங்கம் சகல நடவடிக்கைகளையும் எடுத்துள்ளது.
எமது எதிர்கால சந்ததிக்கு ஐக்கியமென்ற சித்தாந்தத்தை ஊட்டி சிறந்ததொரு இலங்கையை கட்டியெழுப்ப அனைவரும் திடசங்கற்பத்துடன் செயற்பட வேண்டும் என பிரதமர் தி. மு. ஜயரட்ன தெரிவித்தார்.
லேக்ஹவுஸ் நிறுவனத்தின் அனுசரணையில் பொங்கல் விழாவும் சிறுவர்களுக்கான “குட்டி சுட்டி” மலர் வெளியீடும் நேற்று மட்டக்களப்பு மாமங்கேஸ்வரர் ஆலயத்தில் நடைபெற்றது.
பிரதமர் தி. மு. ஜயரட்ன இதில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றிய போதே மேற்கண்டவாறு கூறினார்.
விஷேட ஹெலிகொப்டர் மூலம் மட்டக்களப்பு விமான நிலையத்திற்கு வருகை தந்த பிரதமர் வாகன பவனியாக மட்டக்களப்பு அமிர்தகழி மாமங்கேஸ்வரர் ஆலயத்தை வந்தடைந்தார்.
மாமங்கேஸ்வரர் அலயத்தில் வாத்தியங்கள் முழங்க தமிழ் பாராம் பரியங்களுடன் பிரதமருக்கு வரவேற்ப ளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து பொங்கல் விஷேட பூஜை வழிபாடுகளில் பிரதமர் ஜயரட்ன, மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன், மற்றும் லேக்ஹவுஸ் நிறுவனத்தின் தலைவர், சிரேஷ்ட ஊடகவியலாளர் பந்துல பத்மகுமார, ஆசிரியர் பீடப் பணிப்பாளர் சீலரட்ன செனரத் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இதன்பின்னர் லேக்ஹவுஸ் நிறுவனத்தின் மற்றுமொரு வெளியீடான சிறுவர்களுக்கான குட்டி சுட்டி மலர் வெளியிட்டு வைக்கப்பட்டது.
இங்கு தொடர்ந்துரையாற்றிய பிரதமர் தி. மு. ஜயரட்ன:- வெளிநாடுகளில் இருந்து வரும் சிலரும் வெளிநாடுகளிலுள்ள வேறு சில சக்திகளும் இலங்கைக்கு எதிராக சதிகளை செய்து இன உறவை குழப்ப முனைகின்றனர். இதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்.
பாகிஸ்தான், எகிப்து போன்ற நாடுகளில் தினமும் உயிரிழப்புகள் இடம்பெறுகின்றன. ஆயுதம் கொடுத்தவர்களும், அதற்குத் துணையாக உள்ள மேற்கு நாட்டு சக்திகளும், அது பற்றி கேள்வி எழுப்புவதுமில்லை. அக்கறை கொள்வதுமில்லை.
யுத்தத்தின் போது சில இழப்புகள் ஏற்படவில்லை என நான் கூறவில்லை என்றாலும் எமது மக்கள் நிம்மதியோடு இன்று வாழ்க்கின்றார்கள்.
இங்கு இன மோதல்களை ஏற்படுத்தி, நாட்டை பிளவுபடுத்த மேற்குலக சக்திகள் சூழ்ச்சிகளை செய்கின்றன.
இதற்கு நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். தமிழ், முஸ்லிம், சிங்கள மக்களின் ஒற்றுமை இந்நாட்டு மக்களின் ஐக்கியத்திற்கு பலமாக அமைகின்றது.
பெளத்த மதத்திற்கும் இந்து மதத்திற்கும் மிக நெருங்கிய தொடர்புகள் உள்ளன. நாலாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்ட வால்மிகியின் ராமாயணம் எனும் நூலில் இது பற்றி தெளிவாக எழுதப்பட்டுள்ளது.
பொங்கல் விழா இந்தியாவின் பாரம்பரியத்தை விளக்குகின்ற விழா. அது விவசாய பெருமக்கள் இயற்கைக்கு நன்றி தெரிவிக்கின்ற ஒரு விழாவாகும். நாலாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே பொங்கல் விழா கொண்டாடப்பட்டு வருகின்றது. சூரிய பகவானுக்கு நன்றி தெரிவித்து அனுஷ்டிக்கின்ற இந்துக்களின் பாரம்பரியத்தை உலகுக்கு வெளிக் காட்டுகிறது.
இந்து மதமும், பெளத்த மதமும் மிக நெருங்கிய உறவைக் கொண்டுள்ளது. இரு மதங்களுமே இந்தியாவிலிருந்து வந்தவைகள். இந்த நாட்டில் தமிழ், முஸ்லிம், சிங்கள உறவு மிகவும் வலுவாக இருக்கின்றது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மூன்று இன ஒற்றுமையை கட்டியெழுப்புவதில் மிகவும் உறுதியுடன் செயற்பட்டு வருகின்றார்.
லேக்ஹவுஸ் நிறுவனம் ஊடகப் பணியில் ஈடுபடுவதுடன், இன உறவைக் கட்டியெழுப்புவதற்கான பாரிய பணியினை மட்டக்களப்புக்கு உங்களை நாடி வந்து செய்வது மிகவும் அளப்பரிய சேவையாகும்.
இந்த மண்ணில் பிறந்த பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் யதார்த்தத்தை புரிந்த ஒரு அமைச்சராவார்.
சமாதானத்தை கட்டியெழுப்புவதில் ஜனாதிபதியுடன் கைகோர்த்து உறுதியுடன் செயற்படுகின்றார். பிரதேச அபிவிருத்தியில் பிரதியமைச்சர் முரளிதரனின் பங்கு அளப்பறியதாகும். இன, மத வேறுபாடுகளுக்கப்பால் நாடு என்ற ஐக்கியம் இன்று கட்டி எழுப்பப்பட்டுள்ளது.
எமது எதிர்கால சிறார்களை ஐக்கியப்படுத்த நாம் அனைவரும் வழிகாட்ட வேண்டும். வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு வெளியே தமிழ் பேசும் மக்கள் பெருமளவு வாழ்கின்றனர்.
எனது தொகுதியான கம்பளை தொகுதியில் 20 வீதம் தமிழர்களும் 21 வீதம் முஸ்லிம்களும் ஒற்றுமையுடன் வாழ்கின்றனர். நமது ஜனாதிபதி இஸ்ரேல் மற்றும் பலஸ்தீன் உட்பட மத்திய கிழக்கு நாடுகளுக்கு சென்று அங்கு சமாதானத்தை ஏற்படுத்தும் நடவடிக்கைக்கு பங்களிப்பு செய்துள்ளார்.
எங்களது நாட்டில் ஏற்பட்டுள்ள சமாதானத்தை நிலைக்கச் செய்ய அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.
இந்த வைபவத்தில் பிரதியமைச்சர் விநாயக மூர்த்தி முரளிதரன் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட அரசங்க அபர் திருமதி பி. எஸ். எம். சார்ள்ஸ், லேக்ஹவுஸ் நிறுவனத்தின் தலைவர் பந்துல பத்மகுமார, லேக்ஹவுஸ் நிறுவனத்தின் ஆசிரியர் பீடப் பணிப்பாளர் சீலரட்ன செனரத், லேக்ஹவுஸ் நிறுவனத்தின் பொது முகாமையாளர் அபே அமரதாச, லேக்ஹவுஸ் நிறுவனத்தின் சட்டப் பணிப்பாளர் சட்டத்தரணி ரசாங்க ஹரிஸ்சந்திர, லேக் ஹவுஸ் நிறுவனத்தின் விநியோக முகாமையாளர் செந்தநாயக்க, தினகரன் பத்திரிகையின் செய்தி ஆசிரியர் கே. குணராசா, மட்டக்களப்பு மாநகர சபை முன்னாள் மேயர் திருமதி சிவகீர்த்தா உட்பட நிருவாக தலைவர்களான எஸ். அகிலன், என். சிறிஸ் கந்தராசா உட்பட சமய பிரமுகர்கள், ஆலயத்தின் நிருவாகிகள், பிரதேச செயலாளர்கள், அதிகாரிகள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.