தமிழ் மொழியில் வாக்கு மூலங்களை பதிவு செய்ய மறுக்கும் பொலிஸாருக்கு எதிராக பொலிஸ் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யுமாறு பொலிஸ் ஆணைக்குழு பொதுமக்களை கோரியுள்ளது. அவ்வாறான பொலிஸ் உத்தியோகத்தர்க ளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்படுகிறது.
வட மாகாணத்திலுள்ள பொலிஸ் நிலையங்களில் தமது முறைப்பாடுகளையும் வாக்கு மூலங்களையும் தமிழ் மொழி மூலம் பதிவு செய்வதற்கு பொதுமக்களுக்கு உரிமை இருப்பதாக வடமாகாண பொலிஸ் ஆணைக்குழு பணிப்பாளர் கலாநிதி க.தியாகராஜா கூறினார்.
ஏதேனும் பொலிஸ் நிலையத்தில் தமிழில் வாக்குமூலத்தை பதிய மறுத்தால் குறித்த பொலிஸ் உத்தியோகத்தரின் பெயர், முறைப்பாட்டை ஏற்க மறுத்த திகதி உள்ளிட்ட விபரங்களுடன் வடமாகாண பொலிஸ் குழுவில் முறையிடுமாறு அவர் கோரினார்.
தமிழில் முறைப்பாடு ஏற்கப்படாதது குறித்து பொலிஸ் ஆணைக்குழுவில் நடந்த கூட்டத்தில் ஆராயப்பட்டது. வடபகுதியிலுள்ள பொலிஸ் நிலையங்களில் தமிழ் மூலம் முறைப்பாடுகளையும் வாக்குமூலங்களையும் பதியுமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டிருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹண குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் தமிழில் முறைப்பாடுகளை ஏற்க மறுத்தால் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. இதே வேளை கிழக்கு மாகாணத்தில் உள்ள பொலிஸ் நிலையங்களிலும் தமிழில் முறைப்பாடுகளை முன்வைக்க முடியுமென பொலிஸ் ஆணைக்குழு பேச்சாளர் ஒருவர் கூறினார்.