தமிழ் இலக்கிய உலகில் காத்திரமான பணிகளை ஆற்றியவரும் நிறைவான கல்வி பணி புரிந்த கல்விமானும் சிறந்த சமூக செயற்பாட்டாளரும் மட்டக்களப்பு தமிழ்ச் சங்கத்தின் ஸ்தாபக செயலாளருமான தமிழ் ஒளி வித்துவான் க. செபரத்தினத்தின் மறைவு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும் என மட்டக்களப்பு தமிழ்ச் சங்கத்தின் தலைவரும் கிழக்குப் பல்கலைக்கழக பேராசிரியருமான மா. செல்வராசா விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
அச்செய்தியில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, தமிழ் ஒளி வித்துவான் க. செபரத்தினம் கடந்த 2013.12.28 இல் கனடாவில் காலமானார். அவர் தனது அந்திம காலத்திலும் மட்டக்களப்பு தமிழ்ச் சங்கத்தின் வளர்ச்சி பற்றியே பேசிக் கொண்டிருந்தார்.இதன் மூலம் அன்னார் தமிழ் மீது கொண்ட அதீத பற்றை அறிந்து கொள்ள முடியும்.
தம்பிலுவில் கிராமத்தில் பிறந்த வித்துவான் க. செபரத்தினம் யாழ்ப்பாணம் நல்லூர் கிறிஸ்தவ ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் ஆசிரியராகப் பயிற்சி பெற்றார்.பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கலைப்பட்டதாரியானார்.அப்பல்கலைக்கழகத்தில் பயின்று தமிழ் வித்துவான் பட்டத்தையும் பெற்றுக் கொண்டார். பின்னர் கொழும்பு பல்கலைக்கழகத்தில் பட்டப்பின் கல்வி டிப்ளோமாவையும் பெற்று கல்வித் தகைமையை உயர்த்திக் கொண்ட கல்விமானாகும். அன்னார் 1962 ஆம் ஆண்டு கிழக்கிலங்கை தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் பொதுச் செயலாளராக கடமையாற்றியவர். 1967 இல் மட்டக்களப்பு தமிழ்ச் சங்கத்தின் பொதுச் செயலாளராக தமிழ்ப் பணியை முன்னெடுத்தவர்.
நாட்டில் நிலவிய அசாதாரண சூழ்நிலை காரணமாக இயக்கமுறாமல் இருந்த மட்டக்களப்பு தமிழ்ச் சங்கத்தை புனரமைத்து அதனை மீண்டும் இயங்க வைத்த பெருமையாளர் 1968 இல் கிழக்கிலங்கை பண்டிதர் சங்கத்தின் பொதுச் செயலாளராகவிருந்து அருஞ்சேவையாற்றியவர்.
இவ்வாறு பல்வேறுபட்ட பணிகளை ஆற்றிய முதுபெரும் கல்விமானும் இலக்கியவாதியும் சமூக செயற்பாட்டாளருமான தமிழ் ஒளி வித்துவான் க. செபரத்தினம் இறைபதம் அடைந்தாலும் அன்னார் முன்னெடுத்து வெற்றி கொண்ட பணிகள் அவரால் ஆக்கப்பட்ட நூல்கள் உள்ளவரை அவர் மறையவில்லை. மக்களின் மனங்களில் நிறைந்துள்ளார்.
ஆல விருட்சம் ஒன்று அடி இறந்து வீழ்ந்தாலும் அதன் விழுதுகள் உள்ள வரை அமரர் செபரத்தினம் வாழ்ந்து கொண்டே இருப்பார். அன்னாரை இழந்து தவிக்கும் அனைவருக்கும் மட்டக்களப்பு தமிழ்ச் சங்கத்தின் ஆழ்ந்த அனுதாபங்களை கூறிக்கொண்டு அன்னார் தொட்ட பணிகளை துலங்க வைப்பது அவருக்குச் செய்யும் இதய அஞ்சலியாகும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.