1/07/2014

| |

புலிகளின் மிலேச்சத்தனம்; சுட்டு வீழ்த்தப்பட்ட லயன் எயார் விமானம்:

புலிகளால் சுட்டு வீழ்த்தப்பட்ட லயன் எயார் விமானத்திலிருந்து மீட்டெடுக்கப்பட்ட அப்பாவி பொது மக்களின் ஆடைகள் மற்றும் எலும்புகள் யாழ்ப்பாணம் துரையப்பா மைதானத்தில் காட்சிக்கு வைக்கப்படவுள்ளன. எதிர்வரும் 11ம் மற்றும் 12ம் திகதிகளில் காட்சிக்கு வைக்கப்படும் ஆடைகளை பார்வையிடவும் அடையாளம் காணும் பொருட்டும் பொது மக்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வருகை தருமாறு பொலிஸ் திணைக்களம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
சின்னஞ்சிறிய குழந்தையின் உடை உட்பட 72 ஆடைகள் அடையாளம் காணும் பொருட்டு காட்சிக்கு வைக்கப்படவுள்ளதுடன் இதன் மூலம் அப்பாவி தமிழ் மக்களை இலக்கு வைத்து புலிகள் மேற்கொண்ட மிலேச்சத்தனமான தாக்குதலை நேரில் காண முடியும் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன தெரிவித்தார்.
அப்பாவி தமிழ் சிவிலியன்கள் பயணித்த விமானத்துக்கு தாக்குதல் நடத்திய யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞர் கைது செய்யப்பட்டு பயங்கரவாத தடுப்புப் பிரிவினரின் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும்
அவர் சுட்டிக்காட்டினார். தமிழ் சிவிலியன்கள் மேற்படி விமானத்தில் இருந்தமையை தெரிந்திருந்த போதிலும் புலிகளின் உத்தரவின் பேரில் தாக்குதல் நடத்தியதாக அந்த விமானத்தின் மீது தாக்குதல் நடத்திய அருன் என்று அழைக்கப்படும் சிவசுப்ரமணியம் தில்லைராஜா தனது வாக்கு மூலத்தில் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் எதிர்வரும் 11 ஆம், 12 ஆம் திகதிகளில் ஆடைகள் காட்சிக்கு வைக்கப்படவுள்ளமை தொடர்பாக ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் விசேட செய்தியாளர் மாநாடு நேற்று பிற்பகல் பொலிஸ் தலைமையகத்தில் இடம்பெற்றது. பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹன இங்கு மேலும் குறிப்பிடுகையில்,
1998 ஆம் ஆண்டு 09ம் மாதம் 29 ஆம் திகதி பலாலி விமான நிலையத்திலிருந்து கொழும்பு நோக்கி வந்த லயன் எயார் நிறுவனத்திற்குச் சொந்தமான அன்டனோ விமானம் புலிகளின் ஷெல் தாக்குதல் மூலம் கடலில் சுட்டு வீழ்த்தப்பட்டது.
இதன் போது அந்த விமானத்தில் நான்கு ரஷ்ய விமானிகள் உட்பட 7 சிப்பந்திகளும், 48 சிவிலியன்களும் இருந்தனர். இவர்களில் 47 சிவிலியன்களும் அப்பாவி தமிழ் மக்களாகும். குறித்த விமானம் இரணைத்தீவு கடலில் சுட்டு வீழ்த்தப்பட்டமை தொடர்பில் தகவல்கள் கிடைக்கப்பட்டமையை அடுத்து சுமார் 15 வருட கால விசாரணைகளுக்கு பின்னர் பயங்கரவாத தடுப்புப் பிரிவு பொலிஸார் கடந்த ஆண்டு மே மாதம் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டது.
இதன் போது விமானத்தின் உதிரிப்பாகங்கள், அதில் பயணம் செய்த அப்பாவி சிவிலியன்களின் ஆடைகள் மற்றும் எலும்புக் கூடுகள் மீட்டெடுக்கப்பட்டன.
உயிரிழந்தவர்கள் தொடர்பில் அடையாளம் காணும் பொருட்டும் புலிகளின் மிலேச்சத்தனத்தை காண்பிக்கும் வகையிலும் காட்சிக்கு வைக்கப்படவுள்ளன.
உறவினர்கள் அடையாளம் காண்பிக்கும் பட்சத்தில் டி.என்.ஏ. பரிசோதனை செய்யவுள்ளதுடன் விசாரணைகளையும் மேற்கொள்ளவுள்ளனர் என்றார்.
விமானத்தை சுட்டு வீழ்த்திய நபர்
இந்த விமானத்தை சுட்டு வீழ்த்தியவர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞரென அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்த தாக்குதல் நடத்தும் போது அவருக்கு வயது 22 ஆகும். புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த பொட்டு அம்மானின் கீழ் செயற்பட்டு வந்த இந்த இளைஞர், தூரத்திலிருந்து தாக்குதல் நடத்துவதில் நிபுணத்துவம் பெற்றவர் என புலிகள் இயக்கத்தினரால் கருதப்பட்டவர் ஆவார் என்று ஆரம்பக்கட்ட விசாரணைகளிலிருந்து தெரிய வந்துள்ளது.
வெளிநாட்டிற்குத் தப்பிச் சென்றிருந்த சந்தேக நபரான இளைஞன் 2011 ஆம் ஆண்டு நாடு திரும்பியுள்ளதுடன் புனர்வாழ்வு வழங்கப்பட்ட இளைஞர்களில் ஒருவர் என காண்பித்துக் கொண்டிருந்த நிலையிலேயே பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அப்பாவி தமிழ் மக்களுக்கு சிங்களவர்கள் துண்புருத்துவதாக வெளிநாடுகளிலுள்ள சில புலம்பெயர் தமிழர்கள் கூறி, நாட்டின் இறைமைக்கும், இனங்களுக்கு இடையிலான ஐக்கியத்திற்கும் அச்சுறுத்தல் விடுத்து வருகின்றனர்.
தமிழ் மக்களின் விடுதலைக்காக போராடியதாக கூறிய புலிகளே அப்பாவி தமது தமிழ் மக்களை இலக்கு வைத்தே விமானத்தை சுட்டு வீழ்த்தியுள்ளனர். இதன் மூலம் புலிகளின் மிலேச்சத்தனம் தெளிவாக தெரிய வருகிறது என்றும் பொலிஸ் பேச்சாளர் சுட்டிக்காட்டினார்.