கிழக்கு மாகாணத்தில் உள்ள வைத்தியசாலைகளில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் முதன்முறையாக நடமாடும் வைத்திய வாகன சேவை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
திடீரென இருதய நோய்க்குள்ளாகும் ஒருவருக்கு அவரது வீட்டுக்கு சென்று முதலுதவி வழங்கி அவரை பாதுகாப்பாக அழைத்துவரும் வகையில் இந்த நடமாடும் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதற்காக சுகாதார அமைச்சு சகல வசதிகளையும் கொண்ட அம்பியூலன்ஸ் வண்டியையும் வழங்கியுள்ளது.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் வைத்திய பணிப்பாளர் டொக்டர் க.முருகானந்தம் சுகாதார அமைச்சிடம் விடுத்தவேண்டுகோளின் அடிப்படையில் இந்த வைத்திய வாகனம் வழங்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் இருதய நோய் சிகிச்சை நிபுணர் டொக்டர் அருள்நிதியின் வழிகாட்டலில் இந்த நடமாடும் வைத்திய சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதன் சேவையை சகல பொதுமக்களும் பெறும் வகையில் அதற்கான தனியான அவசர தொலைபேசி சேவையும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் வைத்திய பணிப்பாளர் டொக்டர் க.முருகானந்தம் தெரிவித்தார்.
வீட்டில் ஒருவர் இருதய நோயினால் (ஹார்ட் அட்டக்) பாதிக்கப்படும்போது 065-2229154 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொள்வதன் மூலம் உடனடியாக அவசர சேவை அம்பியூலன்ஸ் அங்கு சென்று தேவையான முதலுதவிகளை வழங்கி பாதுகாப்பாக வைத்தியசாலைக்கு அழைத்துவரும் என பணிப்பாளர் தெரிவித்தார்.
இதற்கென தாதியர் குழுவொன்றுக்கும் விசேட பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளதுடன், 24 மணி நேரமும் இந்த சேவையை வழங்க அவர்கள் தயாராகவிருப்பதாகவும் வைத்தியசாலை பணிப்பாளர் தெரிவித்தார்.
எனவே பொதுமக்கள் இந்த சேவையினை எந்தவேளையிலும் பயன்படுத்திக் கொள்ளலாம் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.