நேற்றைய பத்திரிகைகளில் வெளிவந்த இரண்டு செய்திகள் இலங்கை அரசின் பிரதிநிதிகளாகவும் மற்றும் அரசிடம் நியமனமும் சம்பளமும் பெற்றுக்கொண்டு பணிபுரியும் அரச அதிகாரிகளாகவும் இருப்போருக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் வந்திருந்தன. வழக்கம்போல மிரட்டல்கள் சவால்கள் எச்சரிக்கைகளுக்குப் பெயர்போன தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடமிருந்தே இந்த மிரட்டல்களும் வெளியாகியுள்ளன.
ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து என்பார்களே அதுபோல அரசைக் கடித்து போட்டிக் கட்சிகளைக் கடித்து அயல் சமூகங்களைக் கடித்து கடைசியில் சொந்த சமூகத்திலேயே அரச அதிகாரிகளாகப் பணிபுரிவோரைக் கடிக்கும் நிலைக்கு கூட்டமைப்பு வந்துள்ளது. அவர்களும் என்ன செய்வார்கள்? யாருக்காவது மிரட்டல்கள் சவால்கள் விட்டுக் கொண்டிருக்கா விடின், மக்கள் இவர்களைப் பார்த்து இத்தனை சபைகள் அதிகாரங்களைப் பெற்றுவைத்துக்கொண்டு, மக்கள் ஆணையையும் பல முறை பெற்றுப் பதவிகளையும் எடுத்து வைத்துக்கொண்டு நீங்கள் என்னதான் செய்துகொண்டிருக் கிறீர்கள்? என்று கேட்டுவிடுவார் களல்லவா!
அதனால்தான் முந்திக்கொண்டு, போராட்டங்களை அறிவித்து, முழக்கங்களை வீசி மக்களை உணர்ச்சிவசமான நிலையில் பார்த்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. என்ன, வழக்கமாக அவர்கள் அரசுக்கு எதிராக வெடிக்க வைத்துக் கொண்டிருக்கும் போராட் டங்களில் சிலதை இப்போது அரச அதிகாரிகளுக்கு எதிராகவும் வெடிக்க வைக்க வேண்டிவரும் என்று எச்சரித்திருக்கிறார்கள், அவ்வளவுதான்!
வடக்கில் ஜனாதிபதி, ஆளுநருக்கு விசுவாசமாகவே அரச அதிகாரிகள் உள்ளனர். ஜனாதிபதிக்கும் ஆளுநருக்கும் தூக்குக்காவடி எடுக்கும் இந்த அதிகாரிகள் அவர்களாகவே ஒதுங்கிக்கொள்ள வேண்டும். இல்லையேல் நாம் இவர்களுக்கெதிராகவும் போராட்டங்களை மேற்கொள்ள வேண்டிவரும் என தமிழ்த் தேசியக் கூட் டமைப்பின் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் எச்சரித்துள்ளார்.
வட மாகாண பிரதம செயலாளர், ஆளுநர் ஆகியோரை மாற்றுவதற்கான தீர்மானத்தை எடுக்காவிடின், எதிர்வரும் 27ஆம் திகதி வட மாகாண சபை போர்க்களமாக மாறும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங் கம் எச்சரித்துள்ளார். இந்த நாட்டின் இனப்பிரச்சினையின் தீர்வுக்காக போராடியது போய் இப்போது அரச அதிகாரிகளுக்கு எதிராகப் போராட்டத்தை நடத்தும் நிலைக்கு முன்னாள் போராளிகள் வந்திருக்கிறார்கள்.
மக்களை உணர்ச்சிகரமாக வைத்திருக்க ஏதாவது போராட்டங்களை அறிவித்துக் கொண்டிருக்க வேண்டும் அல்லவா? தீர்வுக் கான முயற்சிகளைத்தான் எப்பவோ கைவிட்டாயிற்றே! எனவே தான் இந்த அதிகாரிகளுக்கெதிரான போராட்டம்! அதிகாரிகள் யாரும் வடக்கின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக் கோ மாகாண முன்னேற்றத்திற்கோ எதிரானவர்களல்ல. வடக்கு மாகாணசபை என்பதும் ஒன்றும் தனிநாட்டு அரசல்ல. இலங்கை அரசின் கீழேயே அரச அதிகாரிகளும் வட மாகாண சபையும் வரு வதை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் அறியாதவர்களுமல்ல.
வடமாகாணத்திற்கென எவ்வளவோ செய்யக்கூடிய மாகாண சபையை எடுத்து வைத்துக்கொண்டு, மக்களுக்கு எதையும் செய் யாமல் இருப்பதை-இனியும் செய்யாமல் விடப்போவதை- மறைக்கவே இந்த அரச அதிகாரிகளுக்கெதிரான போர்! அரசின் ஒத்துழைப்பு இல்லாததால்தான் மாகாண சபையை நடத்த முடியவில்லை என்று சொல்லிப் பார்த்தார்கள். அதற்கு, அரசுடன் பேசி அதைத் தீர்த்துக்கொள்ள வேண்டியதுதானே! என்று மக்கள் கேட்க ஆரம்பித்துவிட்டார்கள்.
அதனால்தான் இப்போது, அதிகாரிகள் எல்லாரையும் மாற்றினால்தான் மாகாண சபையை நடத்த முடியும் என்ற போரைக்கையில் எடுத்திருக்கிறார்கள். மக்களுக்குப் போராட்டத்தைக் காட்டிக் கொண்டிருப்பதும் ஆச்சு மாகாண சபையைக்கிடப்பில் போடு வதும் ஆச்சு!
நன்றி. தினமுரசு