முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சரின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயக் கட்டிடம் மற்றும் பிளான் (Pடயn) அமைப்பின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட குறிஞ்சாமுனை அ.த.க.பாடசாலையின் பாடசாலைக் கட்டிடத் தொகுதி என்பன இன்று திறந்து வைக்கும் நிகழ்வு வலயக் கல்வி பணிப்பாளர் பாஸ்கரன் அவர்களின் தலைமையில் இடம் பெற்றது. இந் நிகழ்வில் அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போது மேற்கண்டவாறு அவர் தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த முன்னாள் முதல்வர் சி.சந்திரகாந்தன், இன்றைய காலகட்டத்தில் கிழக்குவாழ் தமிழ் மக்கள் அனைவரும் அரசியல் அனாதைகளாக்கப்பட்டுள்ளார்கள் என்பதை அம்மக்களே தற்போது நன்கு உணர்ந்துள்ளார்கள். இதற்கு உண்மையான காரணம் தமிழ் தேசியம் பேசும் அரசியல்வாதிகள்தான் என்பதனையும் அம்மக்கள் உணராமலும் இல்லை. உண்மையில் கூறப்போனால் தேசியம் என்றால் என்ன? என்று தெரியாதவர்கள்தான்; அதிகம் தேசியம் பற்றி பேசுகின்றார்கள். ஏன் நான் இதனைக் குறிப்பிடுகின்றேன் என்றால் அன்று வட்டுக்கோட்டைத் தீர்மானம் எடுக்கின்றபோது தேசியத்தின் பால் ஈர்க்கப்பட்ட மட்டக்களப்பைச் சேர்ந்த பலர் அதாவது கையை கீறி இரத்த திலகம் இட்டவர்கள் எல்லாம் இன்று எங்கே சென்றார்கள். அவர்களின் தற்போதைய நிலைதான் என்ன? ஆனால் அந்த தீர்மானத்தை நிறைவேற்றுவதற்கு முன்னின்றவர்களில் வடக்கைச் சேர்;ந்தவர்கள் பெரும்பாலானவர்களின் குடும்பங்கள் அனைத்துமே ஐரோப்பிய நாடுகளில் உல்லாச வாழ்க்கை வாழ்கின்றார்கள். நமது மாகாணத்தவரின் நிலை என்ன? என்பதனை சற்று சிந்தியுங்கள்.
அதாவது வட்டுக்கோட்டடைத் தீர்மானம் நிறைவேற்றுகின்றபோது மேடையின் முன்னாள் அமர்ந்து இருந்து உணர்ச்சிவசப்பட்டு கையைக் கீறி இரத்த திலகம் இட்ட மட்டக்களப்பானுக்கு கிடைத்த பரிசு தியாகிகள் மற்றும் மாவீரர்கள் என்ற சொற்பதங்கள் மாத்திரம்தான். ஆனால் எமது மாவட்ட மக்களை எல்லாம் உசுப்பேற்றி உணர்ச்சிவசப்படுத்தி அழிவிற்கான அடித்தளம் அத் தீர்மானம் என்று முன் கூட்டியே அறிந்து இருந்தும் கூட தங்களது அரசியல் அதிகாரங்களை அதாவது அவர்கள் வகித்த பதவிகளுக்கான கதிரைகளை பாதுகாப்பதற்கான ஓர் கபட நாடகத்தை நிறைவேற்றிய வடபுல யாழ் மேலாதிக்க வாதிகளுக்கு கிடைத்த பரிசு தங்களது குடும்பம் பிள்ளைகளுடனான வெளிநாட்டிலே அதாவது ஐரோப்பிய நாடுகளிலே உல்லாச வாழ்க்கை மற்றும் பிள்ளைகளுக்கு சிறந்த கல்வி மற்றும் தொழில் வாய்ப்புக்கள். இன்றும் கூட சம்பந்தன் மற்றும் மாவை இது போன்று இன்னும் பலர் தற்போது அரசியல் செய்கின்றவர்களின் பிள்ளைகள்கூட ; வெளிநாட்டிலே வைத்தியர்களாக தொழில் புரிகின்றார்கள். இது எல்லாம் எமது சாதாரண மக்களுக்கு தெரிவதில்லை. தெரிவிக்க வேண்டும் என்பதற்காக என்னைப் போன்றவர்கள் பேசினாலும் அதனை எமது ஊடகங்கள்; பிரசுரிப்பதும் இல்லை. எனவே மக்களே தற்போதைய நிலையிலாவது நீங்களே உங்களை கேள்வி கேட்டு ஏனைய சமூகங்களுன் அரசியல் ரீதியில் ஒப்பிட்டு வாழ வேண்டும்.
தேசியம் பேசியவர்கள மற்றும்; தற்போது அதுபற்றி பேசிக் கொண்டிருக்கின்றவர்களின் ஒரே ஒரு ஆயுதம் கோசம்தான். அதாவது தேசியம் பேசிப் பேசி எமது பிரதேசத்தையே நாசமாக்கி சுடுகாடாக்கினார்கள். அத்தோடு நின்றுவிடாது கோசம் எழுப்பி எழுப்பி எம்மை எல்லாம் விசமாக்கி நாசமாக்கினார்களே தவிர, வேற எதனையுமே சாதிக்கவில்லை. அதனால்தான் நான் தற்போது கூறுகின்றேன் கடந்தகாலங்களில் நாம் விட்ட தவறை இனிவரும் காலங்களில் நிச்சயம் விடக் கூடாது.
இனிவருகின்ற காலங்களில் கிழக்கு தமிழ் மக்கள் யாரிடமும் ஏமாறக் கூடாது.எம்மை யாரும் ஏமாற்றக் கூடாது என்கின்ற சிந்தனை மாற்றத்திற்கு கல்வி அவசியம் என்பதனை உணர்ந்துதான் கல்வி அபிவிருத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து செயற்பட்டடு வருகின்றேன்.
இன்று திறக்கப்பட்டிருக்கின்ற படுவான்கரைக்கு சொந்தமான மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தின் ஊடாக பல கல்வி புரட்சியை ஏற்படுத்தி அறிவுபூர்வமாக சிந்தித்து செயற்படுகின்ற ஆரோக்கியமான ஓர் சமூகத்தை கட்டியெழுப்ப அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும். ஏன் என்றால்; இந்த பழுத்த தமிழ் தேசிய வாத அரசியல் நடாத்துகின்ற கூட்டத்தினர் படுவான்கரை மக்களைத்தான் பகடக்காயாக பயன்படுத்திவிட்டு அவர்களை கணக்கெடுக்காது சென்று விடுகின்றார்கள். அதற்கு காரணம் கல்வி அறிவிலே சற்று பன்தங்கியவர்களாக எம்மை கருதி அவர்கள் இலகுவாக எமது பிரதேச மக்களை ஏமாற்றி விடுகின்றார்கள். இவ்வாறான ஏமாற்றங்கள் இனிவருகின்ற காலங்களில் இடம் பெறக் கூடாது என்பதற்கு இந்த கல்வி வலயமும் பெரும் பங்காற்றும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.எனவே நாங்கள் அனைவரும் அறிவுக்கு முக்கியத்துவம் கொடுத்து எமது எதிர்கால சந்ததியினர்க்கு ஓர் நல்ல களம் அமைத்தக் கொடுக்க வேண்டும் எனவும் அவர் தனதுரையிலே குறிப்பிட்டார்.