தமிழ் மக்களின் சமூக, பொருளாதார, கல்வி நிலையை மேம்படுத்த வேண்டும் என்பதற்காக நாம் பொதுநோக்குடன் தமிழ்த்தேசியக் கூட்டமைப்புடனும் கருணா அம்மானுடனும் பேசி உள்ளோம். ஆனால், பொது இணக்கப்பாடு எட்டப்படவில்லை. அரசாங்கத்தை விமர்சிக்கின்ற எமது மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் பின் கதவால் சென்று அரசாங்கத்திடம் சலுகைகளை கை நிறையப் பெற்றுவிட்டு மக்கள் மத்தியில் உரிமை, உரிமை என்று பேசி அவர்களை ஏமாற்றி வருகின்றனர். வேண்டும் என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.
துறைநீலாவணை சித்தி விநாயகர் வித்தியாலயத்திற்கென நிர்மாணிக்கப்பட்ட மாடிக்கட்டிடத் தொகுதியின் திறப்பு விழா அண்மையில் அதிபர் அழகிப்போடி மனோகரன் தலைமையில் நடைபெற்றது.
அவர் மேலும் பேசுகையில்,
தென்பகுதியின் அரசியல் நிலைமையைப் பார்க்கும் போது பதினெட்டாவது திருத்தச் சட்டத்திற்கமைய ஜனாதிபதித்தேர்தல் இடம்பெறுமாயின் மீண்டும் இந்நாட்டின் ஜனாதிபதியாக மஹிந்த ராஜபக் ஷ தெரிவு செய்யப்படுவார். இதனை விடுத்து சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவோ, முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகாவோ தெரிவாகும் சூழ்நிலை இல்லை. இந்த யதார்த்த நிலையை உணர்ந்து கொள்ள வேண்டும்
வெற்று வார்த்தைகளைப்பேசிப் பேசி எமது மக்களை ஏமாற்ற முடியாது. இன்று பிறக்கின்ற பிள்ளைகள் மிகவும் நுண்ணறிவுமிக்கவர்களாக பிறக்கின்றனர். இவர்களுக்கு கல்வி புகட்டும் ஆசிரியர்கள் தொடர்ந்து கற்பவர்களாகவும் தேடல்மிக்கவர்களாகவும் இருக்க வேண்டும். இல்லையேல் இப்பிள்ளைகளுக்கு கற்பிக்க முடியாமல் திண்டாடும் நிலை ஏற்படும்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் பாரிய பிளவுகள் உள்ளமையைக் காணலாம். ஜோசப் பரராசசிங்கத்திற்கு மட்டக்களப்பில் இரு அணிகளாக நின்று அஞ்சலிக்கூட்டம் நடத்தியுள்ளனர். வட மாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் ஜனாதிபதியை நேரில் சந்தித்து பேசவுள்ளதாக கூறுகின்றார். இணக்க அரசியல் செய்ய முயற்சிக்கின்றார். இல்லை இதற்கு அனுமதிக்க முடியாதென கூட்டமைப்புக்குள் சிலர் முரண்டு பிடிக்கின்றனர்.
மாவட்ட வெட்டுப்புள்ளியை அன்றிருந்த அரசாங்கம் நடைமுறைப்படுத்தி தரப்படுத்தலை மேற்கொண்ட போது அழகிய தமிழில் பேசி அப்பாவி தமிழ் இளைஞர்களை ஆயுதம் ஏந்திப் போராடி மடிய வைத்தவர்களின் பிள்ளைகளில் யாராவது தமிழ் ஈழம் கேட்டு போராடினார்களா? அவர்கள் தமது பிள்ளைகளை வெளிநாடுகளுக்கு அனுப்பி கல்வி கற்பித்தனர். போராட்டக் களத்தில் வறிய குடும்பங்களைச் சேர்ந்த அப்பாவி இளைஞர், யுவதிகள் போராடி மடிந்தனர். கைது செய்யப்பட்டு சித்திரவதைக்கு ஆளாகி சிறையில் வாடி வாழ்வைத் தொலைத்தனர். இதுவே உண்மை.
இந்நாட்டிலுள்ள நகர்ப்புற பாடசாலை மாணவர்களைப் போன்று கிராமப்புற மாணவர்களும் கல்வியில் அதிகளவிலான சலுகைகளைப் பெற வேண்டும். கிராமப்புறங்களில் அதிகளவான தலைவர்கள், சிந்தனையாளர்கள் உருவாக வேண்டும் என்பதை இலக்காகக் கொண்டே அரசாங்கம் ஆயிரம் பாடசாலைகளை அபிவிருத்தி செய்யும் திட்டத்தினை நடைமுறைப்படுத்தி வருகின்றது. இத்திட்டத்தின் கீழ் துறைநீலாவணை மகா வித்தியாலயம் உள்ளீர்க்கப்பட்டதனால் இங்கு ஒரு புதிய ஆரம்பப் பாடசாலை உருவாக்கப்பட்டு கட்டிடத் திறப்பு விழா இடம்பெறுகின்றது.
இக்கட்டிடத்தினை நிர்மாணிக்க முற்பட்டபோது எமது திட்டத்தை இங்கு நிறைவேற்றக்கூடாதென இம்மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பல பிரயத்தனங்களைச் செய்தார். அவரின் முயற்சி தோல்வி கண்டது. அதே பாராளுமன்ற உறுப்பினர் தமிழ்த்தேசியம் பேசி அரசியல் செய்பவர். தமிழ் கிராமம் ஒன்றின் அபிவிருத்திக்கு தடையாகவிருப்பது ஏன் என்று கேட்க விரும்புகின்றேன். பேசுவதற்கு மட்டும் சில விடயங்கள் அழகாக இருக்கும். ஆனால், அவை நடைமுறைக்கு சாத்தியமானதா என்று சிந்திக்க வேண்டும். எமது நாட்டில் இல்மனைட் உள்ளது என்று கதைக்கின்றோம். ஆனால் அந்த வளத்தைப் பெற்று உச்சப் பயன்பாட்டைப்பெற நினைக்கின்றோமா?
அரசாங்கம் காட்டு யானைகளை அதிகளவில் கொண்டுவந்து விட்டுள்ளதால் மட்டக்களப்பு மாவட்ட மக்கள் காட்டு யானை தொல்லைக்கு ஆளாவதாக பேசுகின்றனர். அப்படியாயின் அனுராதபுரம், வெலிக்கந்தை போன்ற இடங்களில் தினமும் காட்டு யானை தொல்லையினால் சிங்கள மக்கள் மரணமடைகின்றனர். சொத்துக்களை இழக்கின்றனர். அப்படியாயின் இதற்கு யார் காரணம்? மக்களை குழப்பி விட்டு அரசியல் செய்வதை விட்டுவிட்டு மக்களைப் பாதுகாக்கும் வழிமுறைகளைச் செய்ய வேண்டும்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று தொற்றாநோயின் தாக்கம் அதிகரித்துக் காணப்படுகின்றது. புற்று நோயால் பாதிக்கப்பட்ட இளம் யுவதி பணிச்சங்கேணியில் தூக்குப்போட்டு மரணித்துள்ளார். இள வயது சிறார்கள் நீரிழிவு நோய்க்கு ஆளாகி அவதியுறுகின்றனர். இந்நிலைமைகளை இல்லாமல் செய்வது பற்றி யாவரும் சிந்தித்து செயற்பட வேண்டும் என்றார்.
இந் நிகழ்வில் பட்டிருப்பு வலயக்கல்விப்பணிப்பாளர் நகுலேஸ்வரி புள்ளநாயகம் சிறப்பு அதிதியாகவும் பிரதேச செயலாளர் எஸ். சுதாகர், களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலை அத்தியட்சகர் டாக்டர் ஜி. சுகுணன், முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பூ. பிரசாந்தன் உள்ளிட்டோர் கெளரவ அதிதிகளாக கலந்து சிறப்பித்தனர்.